தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்த தொடர் பார்வைகளையும், அப்டேட்களையும் வழங்குவதற்கு Madras Review-ன் தேர்தல் களம் 2021 தொடர் துவங்குகிறது.
- தமிழ்நாடு தற்போது பதினாறாவது சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருகிறது. திமுகவும், அதிமுகவும் தங்கள் கட்சியினரிடம் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்பமனு விண்ணப்பங்களை வாங்கத் துவங்கியுள்ளது.
- தமிழக தேர்தல் ஆணையர் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று ஒரு கருத்தாக அனைத்து கட்சிகளும் கூறியிருக்கிறது.
- வழக்கமாக மே மாதம் தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டில் அதிமுகவும், பாஜகவும் ஏப்ரல் மாதத்திலேயே தேர்தலை நடத்தக் கோரிக்கை வைத்திருக்கிறர்கள். தமிழ்நாட்டோடு சேர்ந்து தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தேர்தல் வேலை செய்வதற்கு ஏற்றார் போல தேர்தல் தேதி அமைவதற்காக இந்த கோரிக்கை என்று கூறப்படுகிறது.
- திமுக துவங்கப்பட்ட காலம் முதல் கருணாநிதியும் அன்பழகனும் இல்லாமல் திமுக சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் கொடுத்த உற்சாகத்தில் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் திமுகவிற்கு முக்கியமான தேர்தல் இது. அதேபோல 1991-க்குப் பிறகு அதிமுகவும் முதல்முறையாக ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தல் இதுவாகும்.
- பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக இந்த முறை ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் பிராசந்த் கிஷோரின் IPAC நிறுவனத்தை ஒப்பந்தம் செய்து வேலை செய்து கொண்டிருக்கிறது.
- கிராம சபைக் கூட்டங்கள், உங்கள் தொகுதியில் ஸ்டாலின், விடியலை நோக்கி பயணம் என்று திமுக பரப்புரையைத் துவங்கி ஒரு மாதமாகிறது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் பத்திரிக்கைகளில் தன்னை பிரதானமாக விளம்பரம் கொடுத்துக் கொண்டே இருக்கும் இடம் தெரியாமல் ஓய்வெடுக்கிறார்.
வீட்டுக்கு வீடு பொங்கல் சீர் கொடுத்து ஜனவரி மாதமே விராலிமலையில் தேர்தலுக்கு தயாராகிவிட்டார் விஜயபாஸ்கர்.
ஆர்.பி உதயகுமார் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டுவதில் பிசியாகிவிட, எடப்பாடி பழனிச்சாமி தன்னந்தனியாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.
- திமுகவின் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கூட்டணியை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற உறுதியோடு திமுக கூட்டணியில் தொடர்கின்றனர்.
- 2011-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அண்ணா அறிவாலயத்தில் சிபிஐ சோதனை நடத்திக்கொண்டே பேச்சுவார்த்தை நடத்தி 63 இடங்களில் போட்டியிட்டு பெருந்தோல்வியடைந்தது காங்கிரஸ். 2016 தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தானும் தோல்வியைடைந்து திமுகவையும் ஆட்சிக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது. இந்த பழைய வரலாற்றின் காரணமாக இந்த சட்டமன்றத் தேர்தலில் குறைந்த அளவே சீட் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. எப்படியாவது திமுக கூட்டணியில் அதிக இடங்கள் வாங்க வேண்டும் என்று நேரடியாகவே ராகுல்காந்தி தமிழகத்திற்கு தொடர் பயணங்களை மேற்கொள்கிறார்.
- பல்வேறு வழக்குகள், நீதிமன்றம், சிபிஐ, அமலாக்கத் துறை அனைத்தையும் துணைகொண்டு அதிமுகவிடம் அதிக சீட்கள் வாங்க பாரதிய ஜனதாவும் மோடியை நேரடியாக களம் இறக்கியுள்ளது. GoBackModi வைரலான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அதிமுகவிடம் அதிக சீட் வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வரவிருக்கிறார் மோடி.
- தேமுதிக 2006 சட்டமன்றத் தேர்தலிலும், 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் வாங்கிய வாக்கு சதவீதத்தைக் காட்டி 2011-ல் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த், அதன் பின்னர் தேர்தல் அறிவிக்கபடுகிற போது மட்டுமே பேரம் பேசும் அரசியல் செய்ததால், தற்பொழுது எந்த கூட்டணியிலாவது சேர்க்கப்படுவோமா என்று தெரியாத திசையில் இருக்கிறது.
- தமிழகத்தில் ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணியின் பிரதான கட்சியாக இருந்தபோதும், அன்புமணியை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதைத் தவிர வேறு எந்த வெற்றியும் பெறமுடியவில்லை. இந்த முறை எப்படியும் அதிமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெறுவதற்காக இடஒதுக்கீடு போராட்டத்தை தூசி தட்டி எடுத்து 20% இடஒதுகீட்டுக்கு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருகிறார் ராமதாஸ். அதே வேலையில் காடுவெட்டி குருவின் மனைவி ராமதாஸ் தூண்டுதலில் தன் மகன் கைது செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
- பராதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னதில் நிற்கலாமா? அல்லது பாரதிய ஜனதாவில் கட்சியை சேர்த்துவிடலாமா என்ற சிந்தனையில் இருக்கும் சரத்குமார், 2011-க்குப் பிறகு தேர்தல் வெற்றி பெறவில்லை என்பதால் எப்படியும் ஒரு தொகுதியிலாவாது அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று தேர்தலை எதிர்பார்த்திருக்கிறார்.
- கிருஷ்ணசாமி தேவேந்திர குல வேளாளர் என்ற அறிவிப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதையும், சென்னையில் மோடி பேசுகிற போது அதுகுறித்து பேசியதையும் தன் வெற்றியாக மக்களிடம் கொண்டு சென்று தேர்தலை சந்திக்கலாம் என்று எதிர்பார்த்திருக்கிறார்.
- ”தேவேந்திர குல வேளாளர் பொதுப்பெயருக்கு அடித்தளமிட்டது கருணாநிதி. கிடப்பில் போட்டது அதிமுக, பாஜக” என்று கூறி கிருஷ்ணசாமிக்கு எதிராக களம் அமைக்கக் காத்திருக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல் ராஜன்.
- கடந்த தேர்தலில் இரட்டை இலையில் நின்று வெற்றிபெற்ற தனியரசு, கருணாஸ் அதிமுகவின் கூட்டணியா அல்லது திமுகவில் உதயசூரியனில் இடம் கிடைக்குமா என்று காத்திருக்கிறார்கள்.
- பாரதிய ஜனதா தயவில் ஒரு ராஜ்யசபா வாங்கியதன் மூலம், தான் கட்சி துவங்கிய இலக்கை அடைந்து விட்ட திருப்தியில் அதிமுக தரும் இடங்களில் போட்டியிடும் மனநிலையில் அவ்வபோது அதிமுகவையும் பாஜகவையும் ஆதரித்து அறிக்கை விடுவதை மட்டுமே முழுநேர வேலையாக செய்து கொண்டிருகிறார் ஜி.கே.வாசன்.
- அதிமுக-வை கைப்பற்றத் தொடங்கியதாக தினகரன் சொன்ன அமமுக சசிகலா வருகைக்குப் பிறகு புதிய உற்சாகத்துடன் இருக்கிறது. அதிமுகவுடன் இணைவோமா அல்லது தனித்துப் போட்டியா என்ற முடிவு, தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளுடன் காத்திருக்கின்றனர் அதன் தொண்டர்கள்.
- கட்சிகளின் இந்த தேர்தல் கணக்குகளுக்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள். அவர்களின் தேர்தல் கணக்குதான் என்ன என்பதை மாவட்ட வாரியாக சட்டமன்றத் தொகுதிகளின் நிலையைத் தொடர்ந்து பார்ப்போம்.