சிங்காரவேலர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
“கட்சியைத் தச்சு செய்ததில்
மே தினச் செங்கொடியை உயர்த்தியதில்
தன்மான இயக்கத்தின் தடங்களில்
விடுதலைப் போரின் தகிக்கும் வெளிகளில்
அனைத்திலும் முதலாவதாக
அவரது சுவடு!
அவர் பெயர் சுட்டாது”
என்ற இன்குலாப் கவிதை சுருக்கமாக சிங்காரவேலர் வரலாற்றை சொல்லும்.
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டாக திகழ்ந்தவர் தான் மயிலாப்பூர் சிங்காரவேலு என்ற சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். இன்று சென்னையின் பிரதான பகுதியாக இருக்கும் மெரீனா கடற்கரைக்கு அருகில், இன்றைய லேடி வெலிங்டன் கட்டிடம் இருக்கும் இடத்தில் தான் சிங்காரவேலர் 1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார்.
இளமைக் காலம்
தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர இந்தி, உருது, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது.
வெலிங்டன் கல்வி வளாகத்தில்தான் அவரின் வீடு இருந்தது. அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார். வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும், அவர் ஏழை எளியவர்களுக்கே வழக்குகளை நடத்தினார். அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர் ஒரு நாளும் வாதாடியது இல்லை.
சிங்காரவேலர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக 1907-ம் ஆண்டு தன்னைப் பதிவுசெய்துகொண்டார். வழக்கறிஞர் தொழிலில் 1921-ம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தினால் தனது வழக்கறிஞர் தொழிலைப் புறக்கணித்தார்.
திரு.வி.க-வுடன் இணைந்து தொழிலாளர் சங்கத்தை துவக்கினார்
1918 ஆம் ஆண்டில் சிங்காரவேலர் தனது நெருங்கிய தோழரான தமிழக தொழிற்சங்க முன்னோடிகளில் ஒருவரான திரு.வி.கலியாணசுந்தரனாருடன் இணைந்து சென்னை பின்னி மற்றும் கர்னாட்டிக் மில் தொழிலாளர்களுக்காக ‘சென்னை தொழிலாளர் சங்கத்தை’ துவக்கினார். இந்த சங்கத்தின் முதல் தலைவர் சிங்காரவேலரே ஆவார்.
சிங்காரவேலர் அந்த சங்கத்தின் செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் காட்டலானார். அச்சமயத்தில் இந்த இரண்டு மில்களிலும் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
தொழிலாளர்கள் ஊர்வலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு
தொழிலாளர்களின் ஊர்வலங்களிலும் அவர் பங்கெடுத்தார். 1920-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதியன்று ஆங்கிலேய காவல்துறை பின்னி மில் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இரண்டு தொழிலாளிகளைக் கொன்றது. அவர்களின் அடக்க நிகழ்ச்சியின் போது அவர்களின் உடல்களைத் தூக்கிச் சென்றவர்களில் சிங்காரவேலரும் ஒருவராவார்.
அதன்பின் 1921-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதியன்று காவல்துறையினர் நடத்திய மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட ஆறு பின்னி மில் தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்ட சிங்காரவேலர் அதைக்குறித்து ஒரு உருக்கமான கட்டுரை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார்.
”அவர்கள் படும் துன்பங்கள், அவர்கள் தாங்கும் துயரங்கள், அவர்களுக்கு ஏற்படும் இழப்புகள் யாவும் அவர்களின் ஆன்மாக்களில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அவர்களுடைய ஆறு குற்றமற்ற தோழர்களின் மரணத்தின் நினைவு அவர்களை மேலும் அதிகத் துன்பங்களை, மேலும் அதிக இழப்புகளை, மேலும் அதிகத் துயரங்களைத் தாங்கும் வலிமையைத் தரும்… …இறந்தவர்களும் தொடர்ந்து பணியாற்றுகின்றனர்” என்று எழுதி ஆறுதல் கூறி, வால்ட்டர் விட்மனின் கவிதையுடன் முடித்தார்.
உழவர் உழைப்பாளர் கட்சி
1922-ல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ.டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. 1922-ல் எம்.என்.ராய் வெளிப்படுத்திய திட்டத்தால் கவரப்பட்டு, அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். 1923-ல் சிங்காரவேலர் மே தினம் கொண்டாட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், எல்.கே.பி.எச்.) என்கிற கட்சியைப் புரட்சிகரத் திட்டத்துடன் ஆரம்பித்தார். ‘லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், ‘தொழிலாளன்’ என்ற பெயரில் தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார்.
போல்ஷ்விக் சதி வழக்கு
மார்ச் 1924-ல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் சிங்காரவேலர் குற்றம்சாட்டப்பட்டார். இவ்வழக்கே இந்தியத் துணைக் கண்டத்தில் பொதுவுடைமை இயக்கம், மக்கள் இயக்கமாக மாறக் காரணமாக இருந்தது.
சிங்காரவேலர் தலைமையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட்களின் முதல் மாநாடு
கான்பூர் பத்திரிக்கையாளரான சத்திய பக்த் என்பவர் சட்டபூர்வமான ‘இந்திய பொதுவுடைமைக் கட்சி’ அமைக்கப்பட்டிருப்பதாக 1924, செப்டம்பர் மாதம் அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு சிங்காரவேலரின் தலைமையில் தான் 1925-ம் ஆண்டு டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் நடந்தது.
சென்னை நகரின் தொழிலாளர் போராட்டங்களிலும், தென்னிந்திய ரயில்வே போராட்டங்களிலும் மும்முரமாகப் பங்கேற்றதுடன், தனது பத்திரிகைகளிலும், செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் எழுதியும் பொதுக் கூட்டங்கள் நடத்தியும் ஓய்ச்சல் ஒழிவின்றி, கம்யூனிசப் பிரச்சாரம் செய்து வந்தார். மே தினம், உலக அமைதி தினம் கொண்டாடியதுடன் ஆகஸ்ட் 1927-ல் சாக்கோ மற்றும் வான்செட்டி ஆகியோரின் மரண தண்டனையை எதிர்த்துக் கூட்டங்களும் நடத்தினார்.
1927-ல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபூர்ஜி சக்லத்வாலா சென்னைக்கு வருகை தந்தபோது சிங்காரவேலர் கேட்டுக்கொண்டதால், சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்தது. சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையை சிங்காரவேலர் மொழிபெயர்த்தார்.
பெரியாருக்காக குடியரசில் கட்டுரைகள் எழுதினார்
1931-ம் ஆண்டு பெரியார் ஓராண்டு உலகப் பயணம் மேற்கொண்ட பொழுது, தான் வரும்வரை தனது குடியரசு ஏட்டிற்கு சிங்காரவேலர் கட்டுரைகள் எழுதி வழிகாட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதையேற்று சிங்காரவேலர்,
- கடவுளும் பிரபஞ்சமும்
- கடவுள் என்ற பதமும், அதன் பயனும்
- மனிதனும் பிரபஞ்சமும்
- பிரபஞ்சப் பிரச்சனைகள்
- மெய்ஞான முறையில் மூட நம்பிக்கைகள்
- மூட நம்பிக்கைகளின் கொடுமை
- பகுத்தறிவு என்றால் என்ன?
போன்ற கட்டுரைகள் எழுதி உதவினார்.
சிங்காரவேலர் குறித்து பாரதிதாசன்
சுயமரியாதை இயக்கதோடு மிக நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தார். பாவேந்தர் பாரதிதாசன் சிங்காரவேலர் குறித்து எழுதும்போது,
”சிங்காரவேலனைப்போல் எங்கேனும் கண்டதுண்டோ?
பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்
பொய்புரட் டறியாமை பொசிந்ததும் அவனால்
சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்
தமிழர்க்குப் புத்தெண்மை புகுந்ததும் அவனால்
மூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால்
புதுவுலகக்கனா முளைத்ததும் அவனால்
கோலப் பொதுவுடைமை கிளைத்ததும் அவனால்
கூடின அறிவியல், அரசியல் அவனால்!
தோழமை உணர்வு தோன்றிய தவனால்
தூய தன்மானம் தொடர்ந்ததும் அவனால்
ஏழ்மைஇலாக் கொள்கை எழுந்ததும் அவனால்
எல்லோர்க்கும் எல்லாம் என்றுணர்ந்ததும் அவனால்!
போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி
பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!”
என்று பாரதிதாசன் எழுதினார்.
மாஸ்கோவில் சிங்காரவேலரின் நூல்கள்
சிங்காரவேலர் பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. சிங்கார வேலரின் நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
சிங்காரவேலர் கனவுகண்ட சமதர்ம சமூகம்
அவர் கனவுகண்ட சமதர்ம சமூகம் குறித்து அவர் எழுத்துகளிலேயே இருக்கிறது.
”சமதர்ம சமூகத்தில், நிலத் தீர்வை வாங்கும் நிலச் சுவானும் குடிக்கூலி வாங்கும் சொந்தக்காரனும் இருக்கமாட்டார்கள். லாபம் சம்பாதிக்கும் வர்த்தகனும், வட்டி வாங்கும் வணிகனும் இருக்க மாட்டார்கள். அவசியமாக வாங்கவேண்டிய நிலத்தீர்வையும், குடிக்கூலியும், வீட்டு வாடகையையும் வர்த்தக லாபமும், கடனுக்கு வட்டியும், சகலவித லாபங்களும் (Profits), பொதுமக்களுக்கே உரித்தாகி, பொதுமக்களுக்கே அவர்கள் உண்ண உணவு, தங்க வீடு வாசல், அணியும் ஆடை, கற்கும் கல்வி முதலிய வாழ்விற்கு வேண்டிய அத்தியாவசியங்களுக்கு உபயோகப்படுத்தப்படும்.” என்று தனது கருத்துகளை ஆழமாக பதிவு செய்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிதான் உங்களுடைய சரியான அரசியல் தலைமை
கடைசியாக 1945-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதியன்று சென்னை அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் பேசினார். அப்பொழுது
“எனக்கு வயது 84. ஆயினும் தொழிலாளி வர்க்கத்திற்கு என் கடமையைச் செய்ய நான் இங்கே வந்துள்ளேன். உங்கள் மத்தியில் நான் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறென்ன? கம்யூனிஸ்ட் கட்சிதான் உங்களுடைய சரியான அரசியல் தலைமை”
என்று தனது கடைசி கூட்டத்திலும் பேசியவர் சிந்தனை சிற்பி.
அவர் 1946-ம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் காலமானார். தான் மரணமடைவதற்கு முன்பு தன் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு சேர்த்து வைத்திருந்த 10 ஆயிரம் அரிய புத்தகங்கள் கொண்ட நூலகத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் அன்பளிப்பாகக் கொடுத்தார்.
சிங்காரவேலர் குறித்து அறிஞர் அண்ணா
”வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்!” என்று எழுதியிருப்பார். அந்த மாமனிதனின் பிறந்த நாள் இன்று