ராஜீவ்காந்தி சாலை பகுதியில் அமைந்திருக்கும் ஐ.டி நிறுவனங்களால் அப்பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக இருக்கிறது. அப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை தினசரி ஒரு லட்சம் வாகனங்கள் கடக்கின்றன.
- பெருங்குடி ஓ.எம்.ஆர் சாலை சுங்கச்சாவடி,
- துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர் சாலை சுங்கச்சாவடி,
- சோழிங்கநல்லூர் ITEL சுங்கச்சாவடி,
- சோழிங்கநல்லூர் ஈ.சி.ஆர் சுங்கச்சாவடி,
- உத்தண்டி சுங்கச்சாவடி
ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றும்படி அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சென்னை பெருநகர எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ள எட்டு சுங்கச்சாவடிகளை அகற்றும்படி எதிர்கட்சிகளும், தென்சென்னை பாரளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கட்டாயமாக்கப்பட்டுள்ள பாஸ்டேக்
தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கசாவடிகளையும் எதிர்த்து பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய நெடுஞ்சாலை அமைச்சகம் பணமில்லா பரிவர்தனையை ஊக்கவிக்க வாகனங்களில் வரும் பயணிகளின் நேரத்தை சேமிப்பதாகச் சொல்லி பாஸ்டேக்கை கட்டாயமாக்கியிருக்கிறது.
மொத்தமுள்ள சுங்கச் சாவடிகள்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 570 சுங்கச்சாவடிகள், தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளை பராமரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 47 சுங்கச்சாவடிகளை ஒரு நாளில் 9,10,204 வாகனங்கள் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
சென்னை மாநகரின் நுழைவாயிலாக இருக்கிற சுங்கச்சாவடிகளின் வருமானம் பின்வருமாறு,
- பரனுர் (செங்கல்பட்டு) சுங்கச்சாவடியின் மாத வருமானம் 6 கோடி,
- போரூரில் உள்ள வானகரம் சுங்கச் சாவடியில் மாத வருமானம் 3.2 கோடி,
- தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்துர் மாவட்ட மக்கள் சென்னைக்குள் வந்து செல்லும் பாதையான திருவள்ளூர் மாவட்டத்தின் திருபெரும்புதூர் சுங்கசாவடியின் மாத வருமானம் 4.5 கோடி,
- வடமேற்கு சென்னையின் நுழைவுவாயிலில் இருக்கும் சுரப்பட்டு சுங்கசாவடியின் மாத வருமானம் 6.1 கோடி.
- பட்டரை பெரும்புதூர் சுங்கசாவடியின் மாத வருமானம் 40 லட்சம்.
(Source: டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திக் குறிப்பு)
பாண்டிச்சேரி, கடலுர், நாகை மாவட்ட மக்கள் வந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலை கானத்துர் சுங்கச் சாவடியை சேர்க்காமலேயே சென்னைக்குள் வந்து செல்ல மாதம் ஒன்றிற்கு மக்கள் செலவிடும் தொகை 20 கோடியே 20 லட்சம் ரூபாயாகும்.
ஆண்டு ஒன்றிற்கு 242 கோடியே 40 லட்சம் ரூபாய் ஐந்து சுங்கசாவடிகளில் மட்டும் வசூலாகும் பணமாகும். இதனை மக்களிடம் பாஸ்டேக் முறை மூலம் முன்பணமக பெரிய மூலதனமாக திரட்டுகிறார்கள்.
தமிழ்நாட்டின் சுங்கச்சாவடி வசூல்
தமிழ்நாட்டில் உள்ள சுங்க்சாவடிகளில் 2017-18 நிதியாண்டில் ரூ.751.37 கோடியை வசூலித்திருந்தனர். அடுத்த நிதியாண்டான 2018-19ல், 70 கோடி அதிகரித்து ரூ819.42 கோடியாக உயர்ந்துள்ளது.
2018 மற்றும் 19 நிதியாண்டில் இந்தியாவில் மொத்த சுங்கசாவடி வசூலில் 11% கொடுத்து தமிழ்நாடு இரண்டாவது மாநிலமாக இருந்தது. இந்த சாராசரியை வைத்து பார்க்கும்போதே ஆண்டுக்கு 70 கோடி உயர்ந்திருந்தாலும் இன்று தமிழ்நாட்டின் சுங்கக் கட்டண வசூல் ஆண்டுக்கு ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கும்.
முன்பணமாக திரட்டப்படும் முதலீடு
2018-19 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த சுங்க வசூல் 24,396 கோடியாகும். இப்பொழுது பாஸ்டேக் என்ற பெயரில் கிட்டதட்ட 25000 கோடிக்கு மேல் மக்களிடம் இருந்து முன்னரே வசூலிக்கபட்டுள்ளது.
நிதி மேலாண்மை குறித்து அறிந்தவர்களுக்குத் தெரியும், பாஸ்டேக்-ன் பெயரில் திரட்டப்பட்டிருக்கும் 25,000 கோடி என்பது. அதன் மூலம் வரும் முதலீடுகளின் வருமானம் என்னவென்று.
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையின் நுழைவாயில்களில் மாதம்தோறும் வசூலிக்கப்படும் 20 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு மட்டும் தேசியமயமாக்கபட்ட வங்கிகளில் வைப்பு நிதிக்கு கொடுக்கப்படும் கொடுக்கப்படுகிற குறைந்தபட்ச வட்டி விகிதத்தில் பார்த்தாலே 59,59,000 ரூபாய் வருகிறது. இதை ஒரு ஆண்டுக்கு கணக்கிட்டால் 7,15,08,000 ரூபாய் வருகிறது.
2018-19 ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த தமிழகத்தில் மாதம் ஒன்றிற்கு சராசரியாக வசூலிக்கபட்ட 68.285 கோடி வருகிறது. இந்த தொகைக்கும் மேலே குறிப்பிட்டதைப் போல் வட்டிவிகிதத்தைக் கணக்கிட்டால் ஆண்டு ஒன்றிற்கு ரூபாய் 24,17,28,900 வருகிறது. இது இந்திய அளவிலான வசூலில் 11% சதவீதமாகும்.
தமிழ்நாட்டில் இருந்து மட்டும், அதுவும் வட்டியில் இருந்து மட்டும் வரும் தொகையே 24 கோடி ரூபாய் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சேர்த்து இந்த வட்டித் தொகையைக் கணக்கிட்டால் 200 கோடியைத் தாண்டிவிடும்.
இத்தனை வருமானம் தரும் முதலீட்டைத் தான் நேரம் மிச்சப்படுத்துவதாக மட்டும் காரணம் சொல்லி, வேறு எந்த பலனையும் கொடுக்காமல் தமிழக மக்களிடமும், இந்திய மக்களிடமும், சிறு குறு வணிகர்களிடமும் இருந்து எடுத்து தனியாருக்கு தருகிறது மத்திய நெடுசாலைதுறை.
பணமதிப்பிழப்பு தொடங்கி இந்த பாஸ்டேக் வரை மக்கள் கையில் இருக்கும் பணத்தை எப்படி எடுத்து நிதி திரட்சியாக மாற்றுவது என்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது மத்திய அரசு.