திராவிட தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்

சர் ஏ.டி.பன்னீர் செல்வம்  நினைவு நாள் சிறப்பு பதிவு

திருவாரூர் அருகில் உள்ள செல்வபுரத்தில் 1888ஆம் ஆண்டு ஜூன் மாதம்  1 ஆம் நாள் தாமரைச்செல்வம் – ரத்தினம் அம்மையாருக்கும் மகனாக  பிறந்தார் சர் ஏ.டி.பன்னீர்செல்வம்.
 உயர்நிலைக்கல்வித் தேர்வினை முடித்து ஊர் திரும்பிய பன்னீர் செல்வம் பெற்றோர்களின் சம்மதத்துடன் பொன்னுப்பாப்பம்மாள் என்பவரை மணந்தார்.

கல்லூரியில் இடைநிலை மாணவராக இருந்த பன்னீர் செல்வம் இங்கிலாந்துக்குச் சென்று சட்டக் கல்வி பயில விரும்பினார்.

சாதி பெயர் இல்லாத நீதி கட்சி தலைவர்

 கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து அங்கு சென்று பயின்று ஜனவரி 26,1912 இல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். தம் பெயருக்குப் பின்னால் சாதி பெயர்களைச் சேர்த்துச் சொல்வது மற்றும் எழுதுவதே அப்போது வழக்கமாக இருந்தது. நீதிக்கட்சித் தலைவர்களிடமும் இவ்வொட்டுதல் இருந்தது. இப்படிச் சாதிப்பெயர் ஒட்டு இல்லாத இரு நீதிக்கட்சித் தலைவர்கள் ஏ.டி.பன்னீர் செல்வம், பி.டி.ராஜன் ஆவர்இருவரும் ஒரே காலகட்டத்தில் லண்டனில் கல்வி பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1912 சனவரி மாதம் வழக்கறிஞராக பட்டம் பெற்றபின் சென்னை மாகாணத்துக்கு வந்தவர், சென்னை மாகாண உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துக்கொண்டார். தஞ்சையில் வழக்கறிஞராகத் தொடர்ந்து தொழில் நடத்தினார்.

 1916ஆம் ஆண்டு இறுதியில் நீதிக்கட்சி தொடங்கப்பட்டபோது சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அக்கட்சியின் உறுப்பினராகி முழு மூச்சுடன் கட்சியை வளர்க்கப் பாடுபட்டார். நீதிக்கட்சித் தலைவர்களானசர் பி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், பனகல் அரசர் பி.இராமராய நிங்கர், முத்தையா செட்டியார் போன்றவர்களுக்கு நெருக்கமாகவும், தஞ்சை மாவட்ட மக்களின் ஆதரவு பெற்றதலைவராகவும் விளங்கினார்.

த.வே.உமா மகேசுவரனார் உள்ளிட்டவர்களுடன் பன்னீர் செல்வம்


கரந்தை தமிழ்ச்சங்கத்தை உருவாக்கிய த.வே.உமா மகேசுவரனார், பட்டுக்கோட்டை வேணுகோபால் , நெடும்பலம் ஆர்.சாமியப்பனார், அய்.குமார சாமிப் பிள்ளை, நாகை வி.பி.பி.காயாரோகணம், கும்பகோணம் கந்தசாமி ஆகிய தன் தோழர்களையும் நீதிக்கட்சியில் இணைத்து அவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். மேலும் இயக்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

மாவட்ட மன்றத் தலைவராக

1918ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட மன்றத் தலைவராக தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்தபன்னீர்செல்வம்  தனது நிர்வாகத்திறனாலும், பேச்சு வன்மையாலும் புகழ் பெற்றார். 1920 ஆம் ஆண்டு வரை சிறப்பான நிர்வாகத்தைக் கொடுத்தார். மாவட்டக் கல்விக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 40 பள்ளிகளே செயல்பட்டுக் கொண்டிருந்த தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகள் எண்ணிக்கையை 170 ஆகப் பன்னீர்செல்வம் உயர்த்தி பார்ப்பனரல்லாத குழந்தைகள் பள்ளிக்கல்வியைப் பெற வழிவகை செய்தார். பள்ளிகளே இல்லாத முத்துப்பேட்டை, கூத்தா நல்லூர் போன்ற இடங்களில் நடுநிலைப்பள்ளிகளைத் தோற்றுவித்தார், திருவாரூர், பாபநாசம் பள்ளிகளை மாவட்டக்கழகத்துடன் இணைத்து அப்பள்ளிகளின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தார். தஞ்சையில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கிப்படிப்பதற்கு வசதியாக மாணவர் விடுதியைக் கட்டினார்.

1929 ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாணச் சுயமரியாதை மாநாட்டில் இளைஞர் அரங்கத்திற்குப் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி உரையாற்றினார். 1924 ஆம் ஆண்டு மாவட்ட மன்றத்  தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1930ஆம் ஆண்டு வரை சிறப்பாகப் பணியாற்றினார் .

பன்னீர்செல்வம். மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஒரத்த நாடு, இராசாமடம் போன்ற பகுதிகளில் வழிப்போக்கர்கள் தங்கி, சாப்பிட்டுச் செல்ல அன்னச் சத்திரங்கள் கட்டி அதற்கான நிதியும் வழங்கியிருந்தனர். பின்னர் அச் சத்திரங்கள் அனைத்தும் மாவட்ட மன்றத் நிர்வாகத்தின் கீழ் செயல்படத் தொடங்கின.

மாவட்ட மன்றத் தலைவராக வி.கே.இராமானு ஜாச்சாரி இருந்த காலத்தில் அந்தச் சத்திரங்களில் பார்ப்பனக் குழந்தைகள் தங்கிக் கல்வியும் உணவும் பெற்றுவந்தனர்.பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு அங்கு இடமளிக்கவில்லை. தஞ்சை மாவட்ட மன்றத் தலைவராக சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் பதவியேற்ற பின், பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து சத்திரங்களை மீட்டு எல்லோருக்கும் உணவு வழங்கவும், கல்விகற்கவும்  ஏற்பாடு செய்தார். அந்த காலகட்டத்தில் திருவையாறில் இருந்த சமஸ்கிருதக் கல்லூரியில் பார்ப்பன மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களைக் கல்விகற்க அனுமதிப்பதில்லை. அந்தக் கல்லூரியை அரசர் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்து பார்ப்பனரல்லாத மாணவர்கள் தமிழில் கல்வி கற்கும்படிச் செய்தார்..

வட்ட மேஜை மாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்டு உரை

1930 இல் லண்டனில் நடைபெற்ற முதல் வட்ட மேஜை மாநாட்டில் நீதிக்கட்சியின் சார்பில் கலந்து கொண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மற்றும் தனித்தொகுதி கேட்டு உரையாற்றினார். 1931 இல் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

எதிர்கட்சி தலைவர் பன்னீர் செல்வம்

1937 இல் காங்கிரசுக் கட்சி ஆட்சியின் போது சட்டமன்ற எதிர் கட்சித் தலைவராகச் செயல்பட்டார்.

தந்தை பெரியாருடன் பன்னீர் செல்வம்


இந்தி எதிர்ப்பு காலகட்டத்தில் சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்கள், “சோமசுந்தர பாரதியார், பெரியார். ஆகிய இருவர்தான் இந்தியை எதிர்க்கிறார்கள்” என்று சட்டமன்றத்தில் தெரிவித்தார். இந்தியைப் பற்றி பேசும்போதெல்லாம் கல்வியமைச்சர் அவர்கள் பதிலளிக்காமல் முதலமைச்சர் ராஜாஜி அவர்களே பதிலளிப்பதை நினைவில் கொண்ட சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள், “அப்படியானால் நீங்கள் ஒருவர் தானே இந்தியை ஆதரிக்கிறீர்கள்?” என்று பதிலளித்தார். சட்டமன்றம் மெஜாரிட்டியைப் பொறுத்துத்தானே இருக்கிறது, இரண்டு பேர் ஆதரிப்பது பெரிதா? ஒருவர் ஆதரிப்பது பெரிதா? என்பதுபோல் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் பதிலளித்தது நகைச்சுவையாகவும் அதே நேரம் இந்தித் திணிப்பை கண்டிப்பதாகவும் இருந்தது

நீதி கட்சி தலைமை தாங்க பெரியாரை அழைத்த பன்னீர் செல்வம்.

1937இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி தோல்வி அடைந்தபோது, பன்னீர்செல்வம் கட்சித் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தினார். ராஜாஜி தலைமையில் அப்போது அமைந்த காங்கிரஸ் அரசு இந்தி திணிப்பைக் கொண்டுவந்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் தந்தை பெரியார் கூட்டங்களில் பேசினார்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பணிகளையும், செயல்பாட்டையும் நன்கறிந்த பன்னீர்செல்வம் நீதிக்கட்சியின் தலைவராகப் பெரியாரைத் தேர்வு செய்வதே சரியானது என்று கட்சித் தலைவர்களிடம் பேசி அதில் வெற்றியும் பெற்றார்.

சாதி ஆதிக்கத்தை எதிர்த்து வழக்காடி வென்றவர்

1937ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நீடாமங்கலத்தில் காங்கிரசு மாநாடு நடந்தது. மதிய உணவு வேளையில் 17 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பிற சாதியினருடன் அமர்ந்து உணவு அருந்தியது கண்டு உயர் சாதியினர் அவர்களை வெளியே இழுத்து வந்து, அடித்து, மொட்டை அடித்து, கழுதை மேலே ஏற்றி ஊர்வ லமாக நடத்தினர். அவர்கள் செய்தது பிறருடன் சேர்ந்து சமமாக உணவருந்தியதுதான். விடுதலை ஏட்டில் தந்தை பெரியார் அந்த நிகழ்ச்சியை வன்மையாகக் கண்டித்து எழுதினார். அதை கண்டித்து எழுதிய விடுதலை நாளிதழ்  மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. அந்த சமயம் விடுதலையின் நிலை சார்பாக வாதாடி வெற்றி கண்டவர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஆவார்.

சாதியின் கொடுமை அந்நாளில் நிலவிய விவரம் அது. அத்தகைய சாதிக் கொடுமையைப் போக்க தந்தை பெரியாருக்குத் துணையாக இருந்த தளபதிகளில் முதன்மையானவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்.
 

எதிர்கட்சி தலைவாராக பன்னீர்செல்வம் இருந்த போது முதலைமச்சராக இருந்த ராஜாஜி “பெரியார் என்றால் என்ன?  நீங்கள் தஞ்சாவூர்காரார் ஏன் அடிக்கடி ஈரோட்டுக்கு செல்கிறீர்?” என்று  கிண்டல் செய்து கேள்வி எழுப்பிய போது, ”பெரியார் என்றால் மகாத்மா என்று பொருள். காந்தியடிகள் வாழும் ‘வார்தா’ உங்களுக்கு எவ்வளவு புனிதமான இடமோ அதுபோல் எங்களுக்கு ஈரோடு புனிதமான இடம். அதனால் அங்கு அடிக்கடி செல்கிறேன்”  என்று கூறியவர்.

இந்திய விவகாரங்களுக்கான அமைச்சராக இங்கிலாந்து பயணம்

திராவிட நாடு கோரிக்கை உச்சகட்டமான நேரத்தில் 2-வது உலகப் போர் தொடங்குகிறது. அப்போது அமைக்கப்பட்ட போர்க்கால அமைச்சரவையில் இந்திய விவகாரங்களுக்கான அமைச்சரின் செயலராக சர் ஏ.டி. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தியர் ஒருவருக்கு இப்பதவி வழங்கப்பட்டதும் அதுதான் முதல் முறை. பதவியேற்பு நிகழ்வுக்காக இங்கிலாந்துக்கு இராணுவ அதிகாரிகளுடன் இராணுவ விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். விமானக் கட்டணம், செலவுக்கு கூட பணம்மில்லாததால் 3 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிச்சென்றார்.சென்னையிலிருந்து சென்ற பன்னீர்செல்வம் கராச்சி சென்றடைந்தவுடன் பெரியாருக்கு ஒருகடிதம் எழுதினார்.

விமான நிலையம் கராச்சி  29-2-1940
எனது அன்புள்ள தலைவர் அவர்களுக்கு, நேற்று மாலை பம்பாயிலிருந்து இங்கு வந்து சேர்ந்தேன். இன்று காலை நான் எந்த பிளேனில் போகிறதாயிருந்தேனோ, அந்த பிளேன் இன்னும் இங்கு வந்து சேரவில்லை. அநேகமாய் இன்று மாலை இங்கு வந்துசேரும். நாளை காலை 7 மணி சுமாருக்கு நான் இங்கிருந்து கிளம்புவேன். ஆகவே வரும் திங்கள் கிழமை லண்டன் போய்ச் சேருவேன் என்று எண்ணுகிறேன்.
இப்படிக்கு, தங்களன்புள்ள,
பன்னீர்செல்வம்
அதற்குப் பின் அவரது மரணச் செய்திதான் தமிழர் களின் காதுகளில் தீயாகப் பாய்ந்தது.

மார்ச் 1, 1940 அதிகாலை நேரம் அனிபால் இராணுவ விமானத்தில் பன்னீர் செல்வத்துடன் நான்கு இராணுவ அதிகாரிகளும்,ஆங்கில அதிகாரிகள் மூவரும் சென்றனர்.  ஓமன் தீபகற்பத்தில் விமானம் விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்தவர் யாரும் உயிர் தப்பவில்லை. இச்செய்தி இடியெனத் தமிழ் மக்களைத் தாக்கிற்று. அன்று ஏ.டி. பன்னீர்செல்வம் மட்டும் லண்டன் சென்று பணியில் சேர்ந்திருந்தால் திராவிட நாடு கிடைத்திருக்கும்… ஏ.டி. பன்னீர்செல்வம் இறந்துவிட்டதாக இங்கிலாந்து அரசு அறிவித்தபோது தந்தை பெரியார் துடிதுடித்துப் போனார்.
பெரியாரின் துயரம் எனும் தலைப்பில் குடிஅரசில் வெளிவந்த காலம் சென்ற பன்னீர் செல்வமே! காலம் சென்றுவிட்டாயா? நிஜமாகவா? கனவா? – தமிழர் சாந்தி பெறுவாராக! என்ற தலைப்பிட்டு அப்போது பெரியார் எழுதிய இரங்கல் வரலாற்று சிறப்புமிக்க ஒன்று.


அந்த இரங்கலில், ”என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை; ஒரு பொட்டு கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்தபோதும் இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா, இது பேராசை அல்லவா என்று கருதினேன். 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20 வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை; சிதறவில்லை. பன்னீர்செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் காணுந்தோறும் தமிழர் நிலையை எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கின்றது.” என்று எழுதினார்.

அவர் இறந்த போது பாரதிதாசன் எழுதிய கவிதையில்

எல்லையில் தமிழர் நன்மை
என்னுமோர் முத்துச் சோளக்
கொல்லையில் பார்ப்பானென்ற
கொடுநரி உலவும் போது,
தொல்லைநீக் கிடஎ ழுந்த
தூயரில் பன்னீர்ச் செல்வன்
இல்லையேல் படைத் தலைவன்
இல்லைஎம் தமிழ்வேந் துக்கே


பெரியாரின் படை பன்னீர் செல்வம் இறந்த போது  தமிழ் வேந்தனுக்கு படைத்தலைவன் இல்லையே எனப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் படைத்தலைவனாகவும் போற்றப் பெற்ற, இராவ் பகதூர், சர் ஏ.டி.பன்னீர் செல்வம்  நினைவு நாள் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *