ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நிவாரண உதவிகள் செய்வதற்காக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அனுமதியளித்தது. அந்த பட்டியலில் ஏறத்தாழ 736 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் துணை அமைப்புகளாக இருக்கின்றன.

ராஷ்டிரிய சேவா பாரதி

இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.பி என்றழைக்கப்படும் ராஷ்டிரிய சேவ பாரதி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வருகிறது. கல்வி, சுகாதாரம், தன்னம்பிக்கை போன்ற பல்வேறு துறைகளில் இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொண்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகங்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது.

ராஷ்டிரிய சேவ பாரதி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியத்திடம் இருந்து நேரடியாக நிதி பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசாங்க அமைப்பான இந்திய உணவுக் கழகத்திடமிருந்து மானிய விலையில் உணவு தானியங்களை வாங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டின் நிலவரப்படி, ராஷ்டிரிய சேவா பாரதியின் கீழ் உள்ள 928 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 57,000-க்கும் அதிகமான சமூக பொருளாதார திட்டங்களில் செயல்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ராஷ்டிரிய சேவா பாரதியின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. 

மத்திய அரசின் நிதி ஆயோக்கினால் நடத்தப்படும் என்.ஜி.ஓ-தர்பன் (NGO-Darpan) என்ற போர்ட்டலில் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் அனைத்தும் சுயாதீனமானவை. ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் கருத்தியல் ரீதியாக மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது என்று ராஷ்டிரிய சேவா பாரதி வலைதளம் கூறுகிறது.

ஆர்.எஸ்.எஸ்-க்கும், ராஷ்டிரிய சேவா பாரதிக்குமான தொடர்பு

ராஷ்டிரிய சேவா பாரதி(RSB) அமைப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது வேலைத்திட்டங்கள் குறித்தான அறிக்கையை வெளியிடும். அந்த அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் பய்யாஜி ஜோஷி பின்வருமாறு தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். 

”இந்த சேவா பாரதி அமைப்புகள் சுயாதீனமானவை, ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவுடன் செயல்படுகிறது. இந்த அமைப்புகளின் பணியாளர்கள் உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்யும் எந்த ஒரு சேவைத் திட்டங்களும் ஆர்.எஸ்.எஸ் பதாகைகளுடன் வேலை செய்யப்படுவதில்லை. இருப்பினும் அவை சுயம்சேவகர்களால் இயக்கப்படுகின்றன”.

அறிய முடியாத ரகசியமான ஆர்.எஸ்.எஸ்-சின் கட்டமைப்பு

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நேரடி கட்டுபாட்டின் கீழ் ஏறத்தால 46 அமைப்புகள் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எல்லைக்குட்பட்ட அமைப்புகளின் சரியான எண்ணிக்கை குறித்து அறிஞர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லை என்பது கவனிக்க வேண்டிய விடயம். 

சங்பரிவாரின் கட்டமைப்பு குறித்து மிகத் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை என்பதுதான் எதார்த்தம். ஆர்.எஸ்.எஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல. மேலும் அது வரி செலுத்தவில்லை. இதனால் சங்க பரிவார் என கூட்டாகக் குறிப்பிடப்படும் இந்த அமைப்புகளின் நிதி மற்றும் கட்டுமானங்கள் குறித்து தெளிவாக அறிவது சாத்தியிமில்லாமல் இருக்கிறது. 

எப்படி நிதி பெறுகிறது?

சங்கத்தின் அடிப்படைக் கொள்கை தன்னார்வத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவையாக வெளிப்படுத்தப்படுகிறது. எந்த வெளி நிறுவனங்களிடம் இருந்தும் நிதி பெறுவதில்லை என்று சொல்லப்படுகிறது. தனக்குத் தேவையான நிதி ஆதாரங்களை சுயேசேவாக்ஸ் என்று அழைக்கப்படும் தன்னார்வ உறுப்பினர்களிடமிருந்து “குருதக்ஷினா” என்று அழைக்கப்படும் நன்கொடை வடிவத்தில் திரட்டுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அங்கமாக விளங்கும் சேவா பாரதி பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம். இந்த நிறுவனம் சமூக பொருளாதார திட்டங்களில் செயல்படும் பிம்பத்தில் நிதிகளைத் திரட்டி  ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பயன்படுத்துகிறது. அரசிடமும் தனியார் நிறுவனங்களிடமும் நேரடியாக சேவா பாரதி நிதி பெற்று வருகிறது.

தனியார் நிறுவனங்கள் அவர்களின் சமூக பொறுப்புணர்வு நிதியை (CORPORATE SOCIAL RESPONSIBILITY FUND) செலவழிக்க வழிவகை செய்யப்படும் என்று ராஷ்டிரிய சேவா பாரதி அமைப்பின் வலைத்தளம் தெரிவிக்கிறது. தற்போதுள்ள சட்டத்தின் கீழ் ஒரு தனியார் நிறுவனம் தனது லாபத்தில் இரண்டு சதவீதத்தை சமூகத் திட்டங்களுக்கு செலவிட வேண்டும். அதன் சொந்த தன்னார்வ நிறுவனத்தின் வாயிலாகவே அல்லது சுயாதீனமான நிறுவனங்கள் மூலமோ இதை செய்யலாம். 

கொரோனா ஊரடங்கில் நிதி ஆயோக் வலியுறுத்திய வழிமுறை

இரண்டாம் கட்ட கொரோனா ஊரடங்கின்போது கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களது சமூக பொருப்புணர்வு செலவினங்களுக்கு பட்டியலிடப்பட்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நிதி ஆயோக் வலியுறுத்தியது. 

கடந்த மார்ச் 23 அன்று, கார்ப்பரேட் விவகார அமைச்சகம் கொரோனா தொடர்பான நிவாரண செலவுகளை CSR ஆக (சமூக பொருப்புணர்வு செலவினம்) கணக்கிட அனுமதித்தது. இதன் விளைவாக ராஷ்டிரிய சேவா பாரதி உட்பட நிதி ஆயோக் போர்ட்டலில் (NGO-Darpan) உள்ள அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த சி.எஸ்.ஆர் நிதிகளை பெறத் துவங்கியது.

மார்ச் மாதம் ஊரடங்கு தொடங்கிய நான்கு நாட்களுக்குப் பிறகு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தி, அரசாங்க நிதி மற்றும் சொத்துக்கள் நிவாரணத்திற்கு பயன்படுத்தலாம் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது. 

கொரோனா நிவாரணத்திற்காக நிதி ஆயோக் உருவாக்கிய குழுக்கள்

லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மார்ச் மாதம் 29-ம் தேதி பதினொன்று “அதிகாரம் பெற்ற குழுக்களை” மத்திய அரசு உருவாக்கியது. அவற்றில் EG 6 என்ற குழு  நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தலைமையில் இயங்கியது. அந்த குழுவின் மைய வேலை “தனியார் துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைத்து கொரோனா நிவாரணத்தில் ஈடுபடுவது”

ஏப்ரல் 5-ம் தேதி ஈ.ஜி 6-ன் முதல் கூட்டம் அமிதாப் காந்த் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் பரிந்துரைப்படி தர்பன் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட 92,000-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்/சி.எஸ்.ஓ-க்களுக்கு கடிதம் மூலமாக அரசாங்கத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதேபோல் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட உள்ளூர் நிர்வாகமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சி.எஸ்.ஓ-களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று தலைமைச் செயலாளகத்தினூடாக வலியுறுத்தப்பட்டது. 

உணவு தானியங்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க பரிந்துறை

இந்த முடிவு குறித்து மோடியுடனான நேரடி ஆலோசனை ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற்றது. பின் ஏப்ரல் 11-ம் தேதி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உணவு தானியங்களை வழங்குவது குறித்த சுற்றறிக்கையை இந்திய உணவுக் கழகத்திற்கு மத்திய அரசு வழங்கியது.

மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-காரர்களுக்கு ஒதுக்குவதா என்று அகிலேஷ் யாதவ் கேள்வி

ஏப்ரல் 25-ம் தேதி நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாநில அரசின் எஸ்.டி.ஆர்.எஃப் (SDFR) நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்திரப் பிரேச மாநிலத்தின் முன்னால் முதலைமைச்சருமான அகிலேஷ் யாதவ் ஆர்.எஸ்.எஸ்-காரர்களுக்கு நிதியும் உணவு தானியங்களும் ஒதுக்கப்படுகிறது என்று வெளிப்படையாக அறிக்கை விட்டார். 

“பாஜக அரசு நேர்மையாக செயல்படுவதற்கு பதிலாக முறைகேடு  செய்கிறது. தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதி மற்றும் உணவுப் பொருட்களை ஆர்.எஸ்.எஸ் கரம்சேவகர்கள் மோடி படமிட்ட பையில்போட்டு சில பாஜக குடும்பங்களுக்கு விநியோகிக்கின்றனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள சமுதாய சமையலறைக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்கத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை” என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். 

ஊரடங்கு காலகட்டத்தில் சேவா பாரதியின் வாயிலாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும், அதனூடாக நேரடியாக கரம்சேவகர்கள் களத்தில் இறக்கப்பட்டதையும் நேரடியாக கண்டித்தார் அகிலேஷ் யாதவ். 

தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதா?

தனியார் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து நிவாரணப் பணியில் ஈடுபடும் போர்வையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு மறைமுகமாக நிதி திரட்டும் 736 சேவா பாரதி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசு எஸ்.டி.ஆர்.எஃப் நிதி, தனியார் நிறுவனங்கள் கையளித்த நிதி, போன்ற எந்த பரிவர்த்தனை குறித்த கணக்குகளும் வெளியிடப்படவில்லை. 

மேலும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விற்கப்படும் உணவு தானியங்களின் அளவு பற்றிய தரவுகளும் பொதுவில் வெளியிடப்படவில்லை.

ராஷ்டிரிய சேவா பாரதியின் தேசிய பொதுச் செயலாளர் ஷ்ரவன்குமாரிடம் ​​அரசாங்கத்திடமிருந்து வரும் நிதி குறித்து தனியார் பத்திரிக்கை கேள்வி எழுப்பிய போது அவர் அதை முற்றிலும் மறுத்தார். அரசு நிர்வாகத்திடம் இருந்து எந்த நிதியும் பெறப்படுவது இல்லை என்று கூறினார். மேலும் அவர் கூறும் போது,

“எங்கள் அனைத்து மாநில சேவ பாரதியின் அமைப்புகளும் சுயாதீனமாக செயல்படுகின்றன. மாநில குழுக்கள் தாங்களே முன்வந்து நிவாரணப் பணியில் ஈடுபடுகின்றனர். எனவே எஸ்.டி.ஆர்.எஃப் (SDFR) நிதி குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களுக்கு உணவுக் கழகத்தின் சுற்றறிக்கை மட்டும்தான் கிடைத்தது. சேவா பாரதி மாநில அமைப்புகளை இந்த திட்டத்தைப் பயன்படுத்தி உணவு தனியங்களை பெற்றுக்கொள்ள வலியுறுத்தினோம்” என்று தெரிவித்தார்.

ஆனால் கேரளா மாநிலத்தின் சேவா பாரதி தலைவர் டி.விஜயனிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, ”உணவுக் கழகத்தின் மானிய விலையில் வழங்கப்பட்ட உணவு தானியங்களுக்காகவும், எஸ்.டி.ஆர்.எஃப். நிதிக்காகவும் நாங்கள் காத்திருக்கிறோம்,  அவற்றை பெறுவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் அரசிடம் சமர்ப்பித்துள்ளோம்” என்று கூறினார்.

பேரிடரைப் பயன்படுத்தி தொண்டு நிறுவனங்களின் பெயரால ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வளர்க்கும் வேலையில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

தரவுகள் :நன்றி – Caravan Magazine

One Reply to “ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *