விவசாயிகள் போராட்டம் உணவுச் சந்தை

உணவுச் சந்தை கார்ப்பரேட்டுகளிடம் போய்விடும்; விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் பொருளாதார அறிஞர்கள்

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பொருளாதார அறிஞர்கள் இந்திய ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பல்வேறு தளங்களில் பணியாற்றும் இப்பொருளாதார அறிஞர்கள், மூன்று வேளாண் சட்டங்கள் எவ்வகையில் விவசாயிகளுக்கு பாதிப்பேற்படுத்தும் என்பதை விளக்கி கூட்டறிக்கையொன்றை தயாரித்தனர். அந்த கூட்டறிக்கையை இந்திய ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமோருக்கு அனுப்பி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக் கேட்டுள்ளனர். 

தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான ஒப்பந்த சாகுபடி சட்டம், தனியார் பெரு நிறுவனங்களின் உணவுப் பொருள் விற்பனை சந்தைக்கு ஆதரவான அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், அரசினுடைய விவசாயப் பொருட்கள் கொள்முதல் நிறுவனங்களை அழிக்கும் வகையிலான தனியாரிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு நிர்பந்தப்படுத்தும் சட்டம் முதலான மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது முதலே விவசாயிகள் இச்சட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்தனர். இந்நிலையில் இச்சட்டங்களுக்கு எதிராக கடந்த மாதம் இறுதியிலிருந்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

பல்வேறு தரப்பினர் அளித்த ஆதரவு

விவசாயிகளினுடைய டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. அரசியல் கட்சியினர், தொழிற் சங்கங்கள், வணிக சங்கங்கள், மாணவர்கள், இராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு மட்டத்தினரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

அதனது தொடர்ச்சியாக தற்போது, விவசாயிகளினுடைய போராட்டத்தின் நியாயமான காரணங்களை எடுத்துரைக்கும் விதமாக பொருளாதார அறிஞர்கள் கூட்டறிக்கை தயாரித்து மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியுள்ளனர். இவர்கள் அனைவரும் வேளாண் பொருளாதாரம் தொடர்பாக நிபுணத்துவம் உடையவர்களாவர்.

மாநிலங்களின் கூட்டாட்சி உரிமையை பறிக்கும்

தங்களது அறிக்கையில் மூன்று வேளாண் சட்டங்களின் குறைப்பாடுகளையும், பிரச்சனைகளையும் சுட்டிக் காட்டியுள்ளனர். அவற்றில் முதலாவதாக, குறிப்பிட்ட வேளாண் சட்டங்கள் மாநிலங்களின் கூட்டாட்சி உரிமையைப் பறித்துள்ளதைக் கோடிட்டு காட்டியுள்ளனர். ஒன்றிய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்கள், வேளாண் துறையின் மீது மாநில அரசுகளுக்குள்ள அதிகாரங்களை புறக்கணிக்கக் கூடியதாகவும், அவற்றை வலுவிழக்கச் செய்வதாகவும் உள்ளது. 

அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் இடைவெளியை உருவாக்கும்

மேலும் மாநில அரசுகளே விவசாயிகளுடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கின்றன. விவசாயிகளும் எளிதில் அணுகும் விதமாக மாநில அரசுகளே உள்ளன. மாநில அரசுகளால் மட்டுமே விவசாயிகளுக்கு வேண்டியவற்றை நிறைவேற்றிக் கொடுக்கும் நடைமுறைச் சூழல் உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு இவற்றில் தலையிடுவதன் மூலம் அரசும்- விவசாயிகளுக்குமான உறவில் இடைவெளியை ஏற்படுத்துவதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளனர். 

மண்டிகளுக்கு வெளியே உருவாகும் ஒழுங்கற்ற சந்தை விவசாயிகளை பாதிக்கும்

மாநில அரசுகள், மின்னணு பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வசதிகளுக்காக தனியார் மண்டிகளை உணவுப் பொருள் சந்தையில் அனுமதிக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன. தற்போது ஒன்றிய அரசும் மண்டிகள் தொடர்பாக சட்டத்தை இயற்றியுள்ளது. ஒரே விடயம் தொடர்பாக மாநில அரசமைப்பு ஒரு முடிவும், ஒன்றிய அரசமைப்பு ஒரு முடிவும் எடுப்பதானது மாநில அரசுகளின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் மண்டிகளுக்கு வெளியேயான ‘ஒழுங்கற்ற விவசாய சந்தை’ நடைமுறைக்கு வழிவகுப்பதாக அமையும். இதன் காரணமாக உருவாகும் புதுவகை விவசாய விளைபொருள் விற்பனைத் தளமானது விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) உறுதிபடுத்தாது

மாநில அரசின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விவசாய விளைபொருள் விற்பனை கழகங்கள் (கொள்முதல் நிலையங்கள்) விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை உத்திரவாதப்படுத்திக் கொடுக்கின்றன. கொள்முதல் நிலையங்கள் நிர்ணயிக்கும் விலை விவசாய விளைபொருள் சந்தையின் அளவுகோலாக உள்ளது. அவை நிர்ணயிக்கும் விலையிலோ அல்லது அதனை விட கூடுதல் விலையிலோ தான் தனியார் கொள்முதல் நடைபெறுகிறது. 

அரசினுடைய விவசாய விளைபொருள் விற்பனை நிலையங்களை இல்லாமல் செய்வது விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச உத்திரவாத விலையை உறுதிப்படுத்தாது; விவசாயிகள் தங்கள் உற்பத்தியை மிகக் குறைந்த விலைக்கு விற்க நேரிடும். 

பீகார் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நிலை இந்தியா முழுதும் வரும்

2006-ம் ஆண்டு பீகாரில் அரசு, தனது விவசாய விளைப் பொருள் விற்பனை நிலையங்களை நீக்கியதானது, விவசாய விளைப் பொருட்களுக்கான விற்பனையில் விவசாயிகளின் பேர வலிமையை இல்லாமல் செய்தது; மற்ற மாநிலங்களை ஒப்பிடும்பொழுது பீகார் விவசாயிகள் குறைந்த விலைக்கே தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்க நேர்ந்தது. ஒன்றிய அரசு இயற்றியிருக்கும் வேளாண் சட்டங்களும் இப்படியானதொரு நிலையையே இந்தியா முழுமைக்கும் உருவாக்கும்.

சிறு விவசாயிகளையும், கார்ப்பரேட்டுகளையும் ஒரே எடையில் நிறுத்துகிறது

அதுபோன்றே மூன்று வேளாண் சட்டங்களில் ஒன்றான ஒப்பந்த சாகுபடி சட்டமானது, ஒப்பந்தத்தின் வாயிலாக வலிமை குன்றிய சிறு, குறு விவசாயிகளையும் பலம் பொருந்திய கார்ப்பரேட் பெரு நிறுவனங்களையும் ஒப்பந்ததாரர்களாக ஒரே நிலையில் நிறுத்தும் போக்கு பெரும் சமச்சீரற்ற (Huge Asymmetric) நிலைக்கு இட்டுச்செல்லும். 

நடைமுறையில் உரிய எழுத்து ரீதியிலான ஒப்பந்தங்களற்ற ஒப்பந்த சாகுபடியில் நிலவுகின்ற குறைபாடுகளை ஒன்றிய அரசு இயற்றியுள்ள ஒப்பந்த சாகுபடி சட்டமும் நீக்கவில்லை. எனவே தற்போதைய நடைமுறையிலுள்ள ஒப்பந்த சாகுபடியில், கார்பரேட் பெரு நிறுவனங்களிடம் விவசாயிகளுக்கு இருக்கும் பாதுகப்பற்ற நிலையே இச்சட்டத்திற்குப் பின்னும் நீடிக்கும் என பொருளாதார அறிஞர்கள் குழு தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உணவுச் சந்தை பெருநிறுவனங்களிடம் செல்லும்

இறுதியாக தங்களது அறிக்கையில், இம்மூன்று சட்டங்களும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடப்பது போல உணவுச் சந்தையை முற்றிலுமாக பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு சேர்க்கும்; மக்களை பெருநிறுவனங்களிடமிருந்தே வாங்கு, இல்லையென்றால் வெளியே போ (Get-big or Get-out) என்ற நிலைக்குத் தள்ளும் என எச்சரித்துள்ளனர். 

உண்மையில் அரசு செய்ய வேண்டியது என்ன?

விவசாயிகளுக்கு அரசு செய்ய வேண்டியவை விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கான உரிய விலை பெறும் வகையிலான பேர வழிமுறையுடன் கூடிய விற்பனைத் தளங்களை ஏற்படுத்தித் தருவதும், அவ்விற்பனைத் தளங்களுக்கு விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை உரிய நேரத்தில் எடுத்து செல்வதற்கான கட்டமைப்பு வசதிகளும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான சேமிப்பு வசதிகளையுமே அரசு ஏற்படுத்தி தர வேண்டும்; விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்களை ஏற்படுத்தி தர வேண்டும். 

இவையனைத்தும் விவசயிகள் மற்றும் விவசாய விளைபொருள் விற்பனையில் பங்கெடுக்கும் பங்குதாரர்களை கலந்தாலோசித்து அதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட வேண்டும். இதுவே ஜனநாயக வழிமுறை மற்றும் விவசாயிகளுக்குத் தேவையானவற்றை செய்யும் சரியான முறையாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த கூட்டு அறிக்கைத் தயாரிப்பில் பங்கெடுத்த மற்றும் கையெழுத்திட்ட பொருளாதார அறிஞர்களின் விபரம் பின்வருமாறு

பேரா. நரசிம்ம ரெட்டி, ஹைதராபாத் பல்கலைகழகத்தினுடைய பொருளாதார துறையின் முன்னாள் பேராசிரியர்; 

பேரா. கமல் நயன் கப்ரா, இந்திய பொது நிர்வாகக் கழகத்தின் முன்னாள் பொருளாதாரத் துறை பேராசிரியர்; 

பேரா. அருண் குமார், மால்கம் எஸ் ஆதிசேஷய்யா இருக்கையின் சமூக அறிவியல் நிறுவனத்தின் பேராசியர்; 

பேரா. ஹரிலால், கேரள மாநில திட்டக் குழுவின் உறுப்பினர்; 

பேரா. ராம்குமார், டாடா சமூக அறிவியல் நிறுவனத்தினுடைய நபார்டின் தலைமைப் பேராசிரியர்; 

பேரா. விகாஸ் ராவல் மற்றும் பேரா. ஹிமன்ஷூ, தில்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைகழகத்தினுடைய பொருளாதாரத் துறையின் இணைப் பேராசிரியர்கள். 

விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக சொன்ன அரசு பொருளாதார நிபுணர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது?

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் அடிப்படை பிரச்சனைக்கு முகங் கொடுக்காமல், விவசாயிகளினுடைய டெல்லி முற்றுகைப் போராட்டத்தினை ‘தூண்டிவிட்டு நடத்தப்படும் போராட்டம்’, ‘காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் போராட்டம்’, ‘கம்யூனிஸ்ட்/ நக்ஸல்களின் போராட்டம்’, ‘பீட்சா விவசாயிகளின் போராட்டம்’ என அவதூறு செய்கிறது ஆளும் பாஜக அரசு. 

மூன்று வேளாண் சட்டங்களின் பிரச்சனையாக விவசாயிகள் சுட்டிக்காட்டுவதை, மண்டி முதலாளிகளின் நலனுக்காக பேசுவதாக பாஜக அரசியல் தலைவர்களும், தகவல் தொழில்நுட்ப அணியினரும் திரித்துக் கூறுகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் சுட்டுக் காட்டும் அதே பிரச்ச்னையையே தான் பொருளாதார அறிஞர்களும் சுட்டிக்காட்டி விவசாய சட்டங்களை திரும்ப பெறக் கேட்டுள்ளனர். 

விவசாயிகளை சுயமாக பொருளாதாரம் பேசுகின்ற தகுதியற்றவற்றவர்கள் என்ற ரீதியில், அவர்களின் கோரிக்கையை ‘தூண்டிவிட்டு பேசக்கூடியதாக’ சித்தரிக்கின்ற பாஜக, தற்போது இப்பொருளாதார அறிஞர்களின் கூட்டற்றிக்கைக்கு என்ன பதில் சொல்லப் போகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *