ஆகஸ்ட் 14 அன்று வால் ஸ்ட்ரீட் ஜார்னல் (WSJ) பத்திரிக்கை, ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது வர்த்தக நலனுக்காக பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பதிவிடும் வெறுப்புப் பதிவுகளை நீக்குவதில்லை என்றும், அப்பதிவுகளை தொடர்ந்து ஆதரித்து வருவதாகவும் ஒரு கட்டுரையினை வெளியிட்டிருந்தது.
குறிப்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய உயர் அதிகாரியான அங்கி தாஸ் (Ankhi Das) என்பவர் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களின் பதிவுகளுக்கு, வெறுப்பு பேச்சு குறித்தான ஃபேஸ்புக்கின் விதிகளை பயன்படுத்தக் கூடாது என்று அழுத்தம் கொடுத்ததாக ஒரு செய்தியினை வெளியிட்டது.
தெலுங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ டி.ராஜாசிங், ரோகிங்கிய இசுலாமிய அகதிகளை சுட்டுத் தள்ள வேண்டும் என்றும், இந்திய இசுலாமியர்களை துரோகிகள் என்றும் குறிப்பிட்டும், மசூதிகளை இடித்துத் தள்ள வேண்டும் என்றும் பதிவிட்டது சர்ச்சைக்குள்ளானது. அதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு புகார் அளிக்கப்பட்ட போது, அப்பதிவினை நீக்குவதற்கு அங்கி தாஸ் எதிர்ப்பு தெரிவித்ததாக அந்த அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அனந்தகுமார் ஹெக்டே, கபில் மிஸ்ரா போன்ற பாஜக தலைவர்களின் வெறுப்புப் பதிவுகளும் நீக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
மோடியின் கட்சியைச் சேர்ந்தவர்கள் செய்கிற விதிமீறல்களுக்கு, அவர்களின் ஃபேஸ்புக் கணக்குகளின் மீது நடவடிக்கை எடுத்தால், அது இந்தியாவில் தங்கள் வர்த்தக எதிர்காலத்தினை பாதிக்கும் என்று அங்கி தாஸ் ஃபேஸ்புக் பணியாளர்கள் மத்தியில் தெரிவித்ததாகவும் அந்த கட்டுரை வெளிப்படுத்தியது.
இசுலாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் கொரோனா வைரசை இசுலாமியர்கள் வேண்டுமென்றே பரப்பியதாகவும், மேலும் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இந்து பெண்களை இசுலாமிய இளைஞர்கள் சீரழிப்பதாகவும் இந்துத்துவ அமைப்பினர் ஃபேஸ்புக்கில் மேற்கொள்ளும் வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு எதிராகவும் அங்கி தாசின் குழு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் WSJ தெரிவித்தது.
தேர்தல் கால விவகாரங்களிலும் அங்கி தாஸ் ஃபேஸ்புக் நிறுவனம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும்படி பார்த்துக் கொண்டதாகவும் அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.
மோடிக்கு ஆதரவாக இயங்கிய அங்கி தாஸ் – அடுத்த ஆதாரங்கள்
இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து அழுத்தங்களும், எதிர்ப்புகளும் வரத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது மீண்டும் மற்றுமொரு முக்கிய செய்தியினை வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை ஆகஸ்ட் 30 அன்று வெளியிட்டுள்ளது. குறிப்பாக 2012 – 2014 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அங்கி தாஸ் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பணியாளர்களுக்கான குழுவில் அனுப்பிய செய்திகளை வெளியிட்டுள்ளது.
2014 தேர்தலில் மோடியின் வெற்றி அறிவிப்பிற்கு முன்தினம் அங்கி தாஸ்,
”நாம் அவருடைய சமூக வலைதள பிரச்சாரத்திற்கு ஒரு சுடரை ஏற்றி வைத்திருக்கிறோம், மீதத்தை நிச்சயம் வரலாறு சொல்லும்”
என்று பதிவிட்டிருக்கிறார்.
இதேபோல் 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின்போது, பாஜக அணிக்கு பயிற்சி அளித்ததைக் குறிப்பிட்டும், மோடியின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு 1 மில்லியன் ரசிகர்கள் இணைந்திருப்பதைக் குறிப்பிட்டும்,
“நமது குஜராத் பிரச்சாரம் வெற்றியடைந்திருக்கிறது”
என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்குப் பிறகு மோடி தேசிய அளவிலான தலைவராக முன்னிறுத்தப்பட்ட பிறகு, ஃபேஸ்புக் நிறுவனம் மீண்டும் பாஜகவினருக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளித்திருக்கிறது. 2013-ம் ஆண்டு அங்கி தாசுடன் பணிபுரியும் கேட்டி ஹர்பத் என்பவர் தாங்கள் இருவரும் மோடியுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அங்கி தாஸ் தன்னிடம் மோடியை இந்தியாவின் ஜார்ஜ் புஷ் என்று சொன்னதாக பதிவிட்டிருக்கிறார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய முன்னுரிமைகளை சேர்ப்பதற்காக, பாஜகவின் பிரச்சாரத்தில் நாம் பல மாதங்களாக அவர்களுடன் லாபி செய்து வருகிறோம் என்றும், ”இப்போது அவர்கள் தேர்தலுக்கு சென்று வெற்றி பெற வேண்டும் அவ்வளவுதான்” என்றும் 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அங்கி தாஸ் பதிவிட்டுள்ளார்.
மேலும் அங்கி தாஸ் இந்தியாவின் எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்திப் பதிவுகள் செய்ததாகவும் WSJ தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்பு பேஸ்புக் பணியாளர் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு மோடியின் முகநூல் பக்கத்தைக் காட்டிலும் அதிக விருப்பங்கள் இருப்பதைக் காட்டிய போது,
“காங்கிரசுடன் ஒப்பிட்டு அவரை குறைத்துவிட வேண்டாம்..ஹா..எப்படியோ, என் சார்பு நிலை தெரியக் கூடாது”
என்று தாஸ் பதிவிட்டிருக்கிறார்.
தேர்தல் முடிவுக்கு முன்னரே நிறுவனத்தின் சக பணியாளர்கள் மத்தியில் பாஜகவின் கட்சிக்குள் முன்வைக்கப்படும் தேர்தல் வெற்றி கணிப்புகள் குறித்து பேசியிருக்கிறார். பாஜகவில் உள்ள ஒரு மூத்த தலைவரும், தனது நெருங்கிய நண்பருமான ஒருவரிடமிருந்து இந்த தகவல் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்ற போது, இந்தியாவில் முஸ்லிம்கள் ஒரு “சீரழிந்த சமூகம்” என்றும், அவர்களுக்கு “மதத்தின் தூய்மை மற்றும் ஷரியா விஷயத்தை செயல்படுத்துவதைத் தவிர வேறு எதுவுமே முக்கியம் இல்லை” என்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் எழுதிய பதிவினை தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அங்கி தாஸ். அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் மன்னிப்பு கோரியிருக்கிறார் அங்கி தாஸ்.
ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பு
உலகம் முழுதும் பல பகுதிகளிலிருந்து ஃபேஸ்புக் பணியாளர்கள் இந்தியாவில் இருக்கும் குழுவினைப் பற்றி கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். 11 பணியாளர்கள் இணைந்து ஃபேஸ்புக் நிறுவன தலைமைக்கு வெளிப்படையான கடிதம் எழுதியிருக்கின்றனர். இசுலாமியர்களுக்கு எதிரான சகிப்பின்மை இருப்பதனை ஏற்றுக்கொண்டு, அதனைக் கண்டித்து விதிமுறைகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய குழுவில் பல்வேறு தரப்புகளின் பிரதிநிதித்துவமும் இடம்பெற வேண்டும் என்றும் கோரியுள்ளனர். நாங்கள் உங்களிடம் என்ன கேட்கிறோமோ அதனை ஃபேஸ்புக்கில் உள்ள முஸ்லீம் சமூகமும் கேட்க விரும்புகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் இந்தியாவின் தலைமை பொறுப்பாளர் அஜித் மோகன், WSJ செய்தி குறித்து குறிப்பிடும்போது அங்கி தாசுக்கு ஆதரவாக எழுதியுள்ள நிலையில் இக்கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி மார்க் சூகர்பெர்க்-க்கு கடிதம் அனுப்பியுள்ளது
பாஜக தலைவர்களுக்கு ஆதரவாக வெறுப்புப் பேச்சுக்கு எதிரான விதிமுறைகளைக் கைவிட்டுவிட்டு ஃபேஸ்புக் நிறுவனம் செயல்பட்டுள்ளதாகவும், மேலும் நாட்டின் தேர்தல் ஜனநாயகத்திற்குள் தலையிடுவதாகவும் காங்கிரஸ் கட்சி ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் சூகர்பெர்க்-க்கு ஆகஸ்ட் 17-ம் தேதி கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. ஃபேஸ்புக் இந்திய பொறுப்பாளர்கள் மீது விசாரணை நடத்தி அதனை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என கேட்டுள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் வாட்சப் இரண்டும் தொடர்ச்சியாக ஒருதலைப்பட்சமாக இயங்கி வந்திருப்பதாகவும் குற்றச்சாட்டினை வைத்துள்ளது. இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் தலையிடுவது மோசமான பிரச்சினையாகும், இதற்காக பாராளுமன்றக் குழுவின் விசாரணையையும் கேட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜன் தகவல் தொழில்நுட்பம் குறித்த பாராளுமன்றக் குழுவின் தலைவரான சசி தரூருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பாஜக-வுடன் உள்ள தொடர்பு குறித்து குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மியான்மரில் நடைபெற்ற இனப்படுகொலையில் ஃபேஸ்புக் எவ்வாறு மையமாக இருந்தது என்பது பற்றிய ஐ.நாவின் அறிக்கையை குறிப்பிட்டுக் காட்டி, இந்த பிரச்சினையை நாம் தீவிரமாக அணுக வேண்டும் என்று கோரியுள்ளார். ஒரு வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனம் இந்தியாவின் தேர்தலில் தலையிட்டு பாஜகவிற்கு ஆதரவாக வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துவது கிரிமினல் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியான டெரிக் ஓ பிரெய்ன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 2014 மற்றும் 2019 பாராளுமன்றத் தேர்தல்களில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு பற்றி தங்களுக்கு பெரிய அதிருப்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கி வருவது, பாஜகவுக்கும், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் கடிதம்
வெறுப்பு பேச்சு குறித்த விதிமுறைகளை முறைப்படுத்த வலியுறுத்தி 54 ஓய்வுபெற்ற குடிமை அதிகாரிகள் ஆகஸ்ட் 24-ம் தேதி ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். வெறுப்புப் பேச்சு குறித்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் எனவும், அந்த விசாரணைக் குழுவில் அங்கி தாஸ் இடம்பெறக் கூடாது என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது சிறுபான்மையினருக்கு எதிராக டெல்லியில் நடத்தப்பட்ட கலவரங்கள் ஃபேஸ்புக் மற்றும் வாட்சப் மூலமாகவே தூண்டப்பட்டு பரப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
44 ஃபேஸ்புக் பக்கங்களை நீக்க சொன்ன பாஜக
பாராளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாஜக தங்களை விமர்சிக்கக் கூடிய 44 பக்கங்களை நீக்க பேஸ்புக் நிறுவனத்தை வலியுறுத்தியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை செப்டம்பர் 1 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பீம் ஆர்மி அமைப்பின் அதிகாரப்பூர்வ பக்கமும் ஒன்றாகும். அதேபோல் AltNews எனும் உண்மை அறியும் இணையதளத்தின் ஆசிரியரான பிரத்திக் சின்கா நடத்தக் கூடிய The Truth of Gujarat என்ற பக்கமும் அடக்கம்.
பாஜக நீக்க சொன்ன பக்கங்களில் 14 பக்கங்கள் தற்போது இல்லை. ஆனால் ஏற்கனவே விதிமுறை மீறல்களின் காரணமாக நீக்கப்பட்ட 17 இந்துத்துவ பக்கங்கள் பாஜகவின் வலியுறுத்தலின் பேரில் மீண்டும் திரும்ப அளிக்கப்பட்டதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் பாஜகவிற்கு ஆதரவாக இயங்கி வருவதாக தொடர்ச்சியாக வெளியாகி வரும் அடுத்தடுத்த ஆய்வறிக்கைகளால் பேஸ்புக் நிறுவனத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லி சட்டமன்றக் குழுவும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.