புதிய கல்விக் கொள்கை

கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் பறிக்கப்படும் மாநில கல்வி உரிமை!

கல்வியை ஒரு விற்பனைப் பண்டமாக மாற்ற வேண்டும் என்பது உலக வர்த்தகக் கழகத்தின் நீண்டநாள் செயல்திட்டம். வளர்ந்த நாடுகளில் உள்ள பெருமுதலாளி வர்க்கத்தின் வர்த்தக நலன்களை வடிவமைப்பதுதான் WTO என்றழைக்கப்படும் உலக வர்த்தகக் கழகம். கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகளை பரிவர்த்தனைப் பொருட்களாக மாற்ற GATS ஒப்பந்தத்தில் இந்தியா போன்ற வளரும் நாடுகளை கையெழுத்திட பல காலம் நிர்பந்தித்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை போன்ற உரிமைகள் தடுக்கப்படும். பொருளாதார அடிப்படையில் நலிந்தவர்களுக்கும், மிகச்சிறந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கும் அதிகபட்சமாக ஒரு சதவீத உதவித்தொகை மட்டும் வழங்கப்படவேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளது. இவ்வளவு இறுக்கமான கட்டுப்பாடுகளை உடைய ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை 2020-ஐ வகுத்திருப்பது மிகவும் ஆபத்தானது.

இந்திய சமூகத்தில் கல்வி

இந்தியத் துணைக்கண்டம் சமூக பொருளாதராத்தில் சமத்துவமற்ற போக்கில்தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. இங்கு கல்வி என்பது பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் உரிமையால் ஏற்கப்பட்டதும், அதேபோல் பிறப்பின் அடிப்படையில் மறுக்கப்படடதுமான கொள்கையில்தான் காலம்காலமாக இருந்து வருகிறது. இங்கு ஒருவர் கல்வி கற்றவராய் இருப்பதற்கும், இன்னொருவர் கல்வி கற்காமல் போனதற்கும் சமூகக் கட்டமைப்பே பிரதான அளவுகோளாக இருந்து வருகிறது. இதுபோன்ற சமத்துவமின்மையை போக்க இடஒதுக்கீடு, உதவித்தொகை போன்ற திட்டங்களை சமூகநீதி போராளிகள் உருவாக்கினார்கள்.

பெரும் நிலப்பரப்பை உடையதும், பல்வேறு மாநில அரசுகளையும் தனித்துவமான இன அடையாளத்தையும் உடைய பல்தேசிய கூட்டமைப்புதான் இந்தியா. அதை மனதில் கொண்டுதான் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையில் கல்வி உரிமை பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் GATS போன்ற ஒப்பந்தங்களை ஏற்பதற்கு முன்னால் மாநில கல்வித் துறையிடம் விவாதித்து முடிவேடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் வர்த்தகத் துறை ஆமைச்சகத்தினால் மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் கல்வி உரிமை சர்வேதச சந்தையில் விற்கப்பட்டுவிட்டது.

புவியியல் ரீதியான பன்முகத் தன்மையையும், சமூக பொருளாதார அடிப்படையிலான சமத்துவமின்மையையும் கணக்கில் கொள்ளாமல் பாஜக அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்ளை 2020, இந்திய சமூகத்தை பின்னோக்கி இழுத்து செல்லும் வகையில் உள்ளது. மேலும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு சிதைக்கிறது.

காலனிய காலத்திலேயே மாகாண உரிமையாக இருந்த கல்வி

கல்வி உரிமையில் மாகாண அரசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து காலனிய காலத்திலேயே உருவாகிவிட்டது. கல்கத்தா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக டாக்டர் மைக்கேல் ஈ.சாட்லர் (Dr. Michael E.Sadler) தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் 1917-ம் ஆண்டு தனது அறிக்கையை சமர்பித்தது. அவ்வறிக்கையில் கல்வி மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் மைய அரசானது அவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. காலனிய ஆட்சிகாலத்தில் இப்படிப்பட்ட நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டது. அதனால்தான் இந்தியாவிலேயே முதன்முதலாக மதராஸ் மாகாணத்தில் மதிய உணவுத் திட்டம் நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகு எழுதப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தில் கல்வி மாநில பட்டியலில்தான் சேர்க்கப்பட்டது. மாநில அரசுகள் தனக்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் பெருக்கிக்கொண்டது. 1947-க்குப் பிறகு சமூக பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு மாநில அரசின் முழு முயற்சியில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டம் தமிழ்நாட்டு பள்ளிக் கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதுபோன்று பல்வேறு மாநிலங்கள் தனக்காக கொள்கைகளை வகுத்துக்கொண்டன. ஆனால் இது அதிக காலம் நீடிக்கவில்லை.

அவசர நிலை காலத்தில் பறிக்கப்பட்ட மாநில கல்வி உரிமை

1976-ம் ஆண்டு ஸ்வரன்சிங் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் இந்திரா காந்தி அரசு அரசியல் அமைப்புச் சட்டத்தில் 42-வது திருத்தத்தைக் கொண்டுவந்தது. அத்திருத்தத்தின் அடிப்படையில் மாநில அரசுக்கு இருந்த கல்வி உரிமை குறைக்கப்பட்டது. மாநில அரசின் கல்வி உரிமையானது, மத்திய-மாநில அரசுகளுக்கு பொதுவான concurrent list என்றழைக்கப்படும் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

பொதுப்பட்டியலில் உள்ள விவகாரங்களில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு என இரண்டு அரசுகளும் சட்டம் இயற்றிக் கொள்ளலாம். ஆனால் ஏதாவது விவகாரத்தில் இரண்டு அரசுகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டால், மத்திய அரசின் சட்ட திட்டத்திற்கு மாநில அரசு கட்டுப்பட வேண்டும். குறிப்பாக அந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடுகள் அதிகமாக இருக்கும். மத்திய அரசின் வழிகாட்டுதல் இல்லாமல் மாநில அரசு சட்டமோ விதிகளோ இயற்ற முடியாது. அப்படி இயற்றினாலும் அது செல்லாது.

“If any provision of a law made by the Legislature of a State is repugnant to any provision of a law made by Parliament which Parliament is competent to enact, or to any provision of an existing law with respect to one of the matters enumerated in the Concurrent List, then, the law made by Parliament, whether passed before or after the law made by the Legislature of such State, or, as the case may be, the existing law, shall prevail and the law made by the Legislature of the State shall, to the extent of the repugnancy, be void”.

ஜனநாயக முறையில் பகிர்ந்தளிக்கப்பட்ட மாநில உரிமையானது இந்திராகாந்தி அரசினால் அவசரநிலை காலகட்டத்தில் எதேச்சதிகாரமாக பறிக்கப்பட்டது. 42-வது சட்டத் திருத்தத்திற்கு முன்பு கல்விக் கொள்கை குறித்து அமைக்கப்பட்ட கோத்தாரி ஆணையம் 1964-ம் ஆண்டு தனது பரிந்துரைகளை சமர்பித்தது. அதில் இதுபோன்ற மாறுதல்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. இந்திராகாந்தி அரசு திட்மிட்டு அவசரநிலை காலக்கட்டத்தில் இந்த திருத்தத்தை செய்தது.

1986-ம் ஆண்டின் முதல் கல்வி கொள்கை

இந்தியாவின் முதல் கல்விக் கொள்கை 1986-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் மத்திய அரசுக்கு உட்பட்ட All India Council for Technical Education (AICTE) மற்றும் National Council for Teacher Education (NCTE) போன்ற ஒழுங்குமுறை ஆணையங்களின் கட்டுப்பாட்டிற்குள் மாநில கல்வி உரிமை கொண்டுவரப்பட்டது. மத்திய அரசின் இந்த அதீதமான அதிகாரக் குவிப்பினை ”தேசத்தில் ஒரு சீரான கல்வியமைப்பபை உருவாக்கினால்தான் வேற்றுமையில் ஒற்றுமையை பாதுகாக்கமுடியும்” என்று காரணங்களைக் கூறி சமாளித்தது அன்றைய இந்திரா அரசு.

2009-ம் ஆண்டின் கட்டாய கல்வி சட்டம்

2009-ம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்ட இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 2009 (Right to Education Act) பள்ளிக் கல்வித் துறையில் திட்டமிடல், நிதி ஒதுக்குதல், ஒழுங்குமுறையாற்றுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் தனது கட்டுப்பாடை இறுக்கிக் கொண்டது. அத்துடன் Child Development Services Programme (ICDS), Early Childhood Care and Education (ECCE) போன்ற பல்வேறு திட்டங்களினூடாக மாநில பள்ளிக் கல்வித்துறையின் சுதந்திரத்தை மத்திய அரசு தனது கண்காணிப்பிற்குள் கொண்டுவந்தது.

கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் அழிக்கப்படும் கூட்டாட்சி தத்துவம்

படிப்படியாக மாநில கல்வி உரிமை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், இன்றைய பாஜக அரசு கூட்டுறவு கூட்டாட்சி (Cooperative Federalism) என்ற போர்வையில் மாநில அரசுகளின் கல்வி உரிமையை மொத்தமாக அடியோடு பறித்திருக்கிறது.

ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன்னிடம் குவித்துக்கொண்டு கார்ப்பரேட் கல்வி சந்தையுடன் கைகோர்த்துக் கொண்டது. பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை 2020 பல்வேறு வகையில் மாநில உரிமைகளை மறுக்கிறது. குறிப்பாக மத்திய அரசு உருவாக்கும் மத்திய ஒழுங்குமுறை ஆணையம் (Central Regulatory Authority) உயர்கல்வித் துறையை ஒட்டுமொத்தமாக அதன் கட்டுப்பாட்டிற்குள்ளும் வழிகாட்டுதல்களுக்குள்ளும் இட்டுச் செல்லும். இந்த போக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 246(3)-ஐ மீறுகிறது.

The Seventh Schedule under Article 246 of the Constitution deals with the division of power between the Union and the States. Article 246 of the Conஅ இன்stitution demarcated the powers of the Union and the State by classifying their powers into 3 lists, namely Union List, State List and the Concurrent List. The constitution of India has provided for the division of powers between the central and the state governments.

உள்நுழைக்கப்படும் வைதீக சார்பு

இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்திய மதச்சார்பற்ற கல்வியை புதிய தேசிய கல்விக் கொள்கை பாதுகாக்கத் தவறுகிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 28(1) பின்வருமாறு கூறுகிறது.

”No religious instruction shall be provided in any educational institution wholly maintained out of State funds”

அரசு நிதியில் நடத்தப்படும் எந்த கல்வி நிறுவனமும் எந்த குறிப்பிட்ட மத வழிமுறைகளையும் பயிற்றுவிக்கக் கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால் புதிய தேசிய கல்விக் கொள்கையில் வேதம், சமஸ்கிருதம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சாணக்கியர், ஆரியபட்டர், பதஞ்சலி, பாஸ்கராச்சாரியர் மற்றும் பாணினி போன்ற வைதீக பார்ப்பன இந்து மரபுக்கு முக்கியத்துவம் தந்தவர்களை முன்னுதாரணமாக நிறுத்துகிறது. இந்த போக்கு மாநிலங்கள் மற்றும் தேசிய இனங்களின் மத நம்பிக்கையில் தலையிடுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். பஞ்சாபில் சீக்கிய மதத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கிறித்தவர்கள் கணிசமாக உள்ளனர். எனவே இந்தியாவில் சில மாநிலங்களில் குறிப்பிட்ட மதத்தினர் அதிகமாக உள்ளதால் இந்து மதக் கொள்கைகளை திணிப்பது மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைக்கும் விரோதமானது.

கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, பரதநாட்டியம் போன்ற பார்ப்பனிய மையப்படுத்தப்பட்ட பண்பாட்டு அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தனித்துவமான இசை உள்ளது. அவற்றை வளர்த்தெடுக்க எந்த பரிந்துரையும் இல்லை.

சிறிய பள்ளிகளை ஒழிக்கும் கூட்டுப் பள்ளி முறை

கடந்த 2016-17ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பழங்குடியினர் 5.2% உள்ளனர். அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிதறி வாழ்கின்றனர். அவர்களுக்கான பள்ளிகள் மலைப் பிரதேசங்களில் மாநில அரசுகளின் முன்முயற்சியில் நடந்து வருகிறது. நிதிச்சுமையை பொருட்படுத்தாமல் மாநில அரசுகள் குறைவான மாணவர்களுக்காக பல பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையில் பழங்குடியினரின் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. அதேபோல் மக்கள்தொகை, சாலைவசதி போன்ற பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து பல சிறிய பள்ளிக் கூடங்களை இணைத்து ஒரு குழுவாக ஒன்றிணைக்க பரிந்துரைத்துள்ளது. இந்த போக்கு மாநிலத்தின் புவியியல் பன்மைத் தன்மையை உள்ளவாங்காமல் வகுக்கப்பட்ட கொள்கையாகும். இதனால் ஏழை மற்றும் பழங்குடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.

மும்மொழிக் கொள்கை எனும் மொழி திணிப்பு

இந்தியாவின் பண்முகத்தன்மையின் அடித்தளமே அதன் மொழிகள்தான். பல்வேறு மொழிகளைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் மும்மொழிக் கொள்கை என்று சொல்லி இந்தியை மறைமுகமாக திணிக்கிறது. மாநில மொழிகளை வளர்ப்பதற்கு எந்த திட்டமும் பரிந்துரைக்கப்படவில்லை. கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இரு மொழிக்கொள்கையை கடைபிடித்துவரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் உரிமையை மறுக்கிறது. அத்தோடு 25000 பேர் மட்டும் பேசும் சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தொன்மையும் வரலாறும் மாநில மொழிகளில்தான் மண்டிக்கிடக்கிறது என்று கலாச்சார மானுடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு தமிழர்களின் சங்க இலக்கியம் ஆகும். மத்திய கங்கை சமவெளியின் சமூக பண்பாட்டு வரலாறுகள் மிக துல்லியமாக பாலி மொழி இலக்கியங்களில் காணப்படுகின்றன. இவற்றை வளர்த்தெடுப்பதற்கான எந்த முயற்சியும் புதிய தேசிய கல்விக் கொள்கையில் இல்லை.

பிராந்திய மொழி, இசை, வரலாறு, பண்பாடு போன்றவற்றை வளர்த்தெடுக்க மாநில அரசுகளால் நிதி ஒதுக்க முடியாத அளவிற்கு ஜி.எஸ்.டி முறையினால் மாநில அரசுகளின் நிதி ஆதாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களில் இருந்து திரட்டப்படும் நிதியை மாநில அரசின் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்குவதில்லை. இவை குறித்தும் புதிய கல்விக் கொள்கையில் எந்த பரிந்துரையும் கொடுக்கப்படவில்லை.

பிராந்திய ரீதியான ஆய்வுகளில் சுதந்திரமின்மை

ஒவ்வொரு மாநிலமும் அதற்கான மொழியில், வரலாறு, தொல்லியல், மானுடவியல், சமூகவியல், கட்டிடக் கலை, இசை போன்ற பல்துறைகளில் சுதந்திரமான ஆய்வுகளை இனிமேல் நடத்த முடியாது. National Research Foundation தேசிய ஆய்வுக் கழகத்திடம் முறையான ஒப்புதல் பெற்றால் மட்டுமே இனி ஆய்வுகள் அங்கீகரிக்கப்படும். இப்போதே தமிழ்நாட்டில் கீழடி போன்ற ஆய்வுகளை சுதந்திரமாக நடத்த மத்திய தொல்லியல்துறை அனுமதிக்கவில்லை. அதற்கான உரிய நிதி போராடி பெறப்பட்டது. சமஸ்கிருத இலக்கியம், வேத இலக்கியம் அவை காட்டும் வரலாற்று ஆய்வுகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பிராந்திய அடையாளங்கள் சார்ந்த ஆய்வுகள் தவிர்க்கப்படும் சூழல் ஏற்படும்.

அதிகாரத்தினை மையப்படுத்தும் புதிய கட்டமைப்புகள்

பல்கலைகழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை (NAAC) போன்ற அனைத்து கட்டமைப்புகளையும் கலைத்துவிட்டு Higher Education Commission of India (HECI) உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும் என்று புதிய தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக கல்வியை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மையப்படுத்தும் யுக்தியாகும். மாநில அரசுகளுக்கு சிறு பங்களிப்பு கூட இருக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே இவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த போக்கு கல்விக் கொள்கையில் பாசிசப் போக்கினை உருவாக்கும்.

இன்றைய சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சித்தாந்தம் மிக எளிமையாக இந்திய கல்வித் துறையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஏதுவான வேலைதிட்டமாகவே இது இருகிறது. புதிதாக அமைக்கப்படும் தேசியக் கல்வி ஆணையம் பிரதமர் தலைமையில் இயங்கும். மேலும், உயர் கல்வி ஒழுங்குபடுத்தும் ஆணையம், ஆராய்ச்சிக்கு நிதி வழங்கும் அமைப்பு, உயர் கல்வி மானியக்குழு என அனைத்தும் முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். மாநில அளவில் முதல்வர்கள் தலைமையில் மாநில கல்வி ஆணையம் உருவாக்கலாம். ஆனால் அவை மத்திய கல்வி ஆணையத்தின் வழிகாட்டுதலில் தான் இயங்கும் என்று புதிய தேசிய கல்விக் கொள்கை குறிப்பிடுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மாநில அரசின் உரிமைகளையும் அதிகாரங்களையும் கேள்விக்குள்ளாக்கும் செயலாகும்.

திணிக்கப்படும் தேசிய நுழைவுத் தேர்வுகள்

உயர் கல்விக்கு கல்லூரிகளில் சேரும் அனைவருக்கும் National Testing Agency என்ற அமைப்பின் மூலம் பொதுவான தகுதித் தேர்வை இந்தியா முழுவதும் நடத்தப்போவதாக புதிய தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 246-ன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை மற்றும் பல்கலைக்கழக ஒழுங்காற்று முறை ஆகியவை குறித்தான அதிகாரம் மாநில அரசின் வரையறைக்கு உட்பட்டதாகும். மாநில அரசினால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்கைக்கான தகுதி, நடைமுறை அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அதை பறிக்க நினைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் புறம்பானதாகும். ஏற்கனவே NEET தேர்வின் மூலமாக மாநில அரசின் மருத்துவ கல்வி உரிமை பறிக்கப்பட்டடுள்ளது.

சனாதனத்தை முன்னிறுத்தி அழிக்கப்படும் கூட்டாட்சி

கூட்டாட்சி என்ற பதத்தையே பாஜக அரசு தேவையற்ற ஒன்றாகப் பார்க்கிறது. கொரோனா காலகட்டத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு 2020-21 சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை குறைத்தபோது 11ம் வகுப்பு ’அரசியல் அறிவியல்’ புத்தகத்தில் உள்ள கூட்டாட்சி தத்துவம் குறித்தான பகுதிகளை நீக்கியது. அத்தோடு உள்ளாட்சி தொடர்பான இரண்டு பாகங்களை நீக்கிவிட்டது.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற பதத்தை பாஜக விரும்பவில்லை. அது சனாதனத்தின் தலைமை என்ற போக்கில் நம்பிக்கை கொள்கிறது. சனாதனம் ஒருபோதும் ஒற்றுமையை விரும்பாது. அது ஆதிக்கத்தைத்தான் விரும்பும். அது பன்மைத் தன்மையையும் பகிர்ந்தளிப்பதையும் அனுமதிக்காது. மாறாக மையப்படுத்துதலையே விரும்பும். நிர்பந்தத்தில் ஒற்றுமையை வென்றெடுக்க முடியாது. நியாயமான உரிமைகளை பகிர்ந்தளிப்பதன் ஊடாகத்தான் ஒற்றுமையை வென்றெடுக்க முடியும் என்பதை அம்பேத்கர் போன்ற மாமேதைகள் அன்றே அறிந்திருந்தனர். அதனால்தான் மாநில அரசுகளுக்கான கல்வி உரிமையை அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதிபடுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *