அண்ணா பல்கலைக்கழகம்

சூரப்பாவை பதவி நீக்க வலுக்கும் கோரிக்கை – அண்ணா பல்கலைக்கழக பிரச்சினை கடந்து வந்த பாதை

2019-ம் ஆண்டுக்கான இந்திய ஒன்றிய அரசின் உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் 14 கல்வி நிலையங்களைக் கொண்ட இரண்டாவது பட்டியல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பெற்றிருந்தது. பட்டியலில் இருந்த 10 அரசு பல்கலைக்கழகங்களில் எட்டு பல்கலைக்கழகங்கள் ஒன்றிய அரசால் நடத்தப்படுபவையாக இருந்தன. அண்ணா பல்கலைக்கழகமும், ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் மட்டுமே மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களாக இருந்தன. 

உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் என்பதுதான் பிரச்சினையின் மூலமாக இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டால் அதில் தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் 69% இட ஒதுக்கீட்டினை பின்பற்ற முடியாது என்றும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கான இடமாக அண்ணா பல்கலைக்கழகம் இல்லாமல் போய்விடும் என்று பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

தமிழக மக்களின் நிதியில் உருவான பல்கலைக்கழகம் வட இந்தியர்களின் களமாக மாறக் கூடிய சூழல் ஏற்படும் என்றும், ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டி-ல் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகவே இருப்பதைப் போலவே அண்ணா பல்கலைக்கழகமும் மாற்றப்படும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தமிழ்நாட்டின் தொழில்நுட்பக் கல்வி உரிமையை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இல்லாமல் ஆக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இதையும் படிக்க: பறிபோகிறது அண்ணா பல்கலைக்கழகமும் கூடவே தமிழ்நாட்டு மாநில உரிமையும்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த விவகாரம் சார்ந்து தமிழ்நாட்டில் நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

நவம்பர் 19, 2019

தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர் சிறப்பு அந்தஸ்து  தொடர்பாக அமைச்சரவையைக் கூட்டி விவாதித்தது. அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகம் (Institute Of Eminence) மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் என இரண்டு பல்கலைக்கழகங்களாக பிரிப்பது என்றும், இதற்கேற்றபடி 1978-ம் ஆண்டின் அண்ணா பல்கலைக்கழக சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை உருவாக்குவதென்றும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் இப்படி பிரிப்பதனால் இடஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த குழுவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் பி.ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஜூன் 2, 2020

அண்ணா பல்கலைக்கழகத்தை உயராய்வு நிறுவனமாக (Institute of Eminence) ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்வதற்கு ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு 1,500 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், அத்தொகையில் 1,000 கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இந்திய அரசு கோரியது. தமிழ்நாடு அரசு அமைத்த குழு அண்ணா பல்கலைக்கழகம் குறித்த தனது முடிவினை அறிவிப்பதற்கு முன்பாகவே, ஜூன் மாதம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பா, இந்திய ஒன்றிய உயர் கல்வித் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தை உயராய்வுக் கல்வி நிறுவனமாக உடனே ஏற்றுக் கொள்ளுமாறும், இதற்காக செலுத்த வேண்டிய 1,570 கோடி ரூபாயை அண்ணா பல்கலைக்கழகமே செலுத்தும் என்றும், தமிழ்நாடு அரசிடம் அத்தொகையை கேட்க வேண்டியதில்லை என்றும் எழுதினார். இந்தக் கடிதம்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானதில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

செப்டம்பர் 21, 2020 

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து செப்டம்பர் 21 முதல் போராட்டத்தை தொடங்கினர். அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாகப் பிரிக்கும் சட்டவரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் வகுப்புகள் எதையும் புறக்கணிக்காமல் ஜனநாயக ரீதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

செப்டம்பர் 30, 2020   

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால் உலக அளவில் அதற்குரிய பெயரும் தரமும் குறைந்துவிடும். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ தெரிவித்தார்.

அக்டோபர் 12, 2020 

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதற்கான உயர்சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்றும் மாநில அரசை மீறி முடிவெடுத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநிலத்தின் மற்றொரு முதல்வரா? அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தைக் காவிமயமாக்க முதல்வர் – ஆளுநர் – துணைவேந்தர் ரகசியக் கூட்டணி வைத்துள்ளனரா என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அக்டோபர் 14, 2020  

அத்துமீறி செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுனார். தமிழ்நாட்டில் பழனிச்சாமி ஆட்சி நடக்கிறதா? சூரப்பா ஆட்சி நடக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அக்டோபர் 15, 2020

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

அக்டோபர் 16, 2020

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும். சிறப்பு அந்தஸ்து கோரி பல்லைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாகக் கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சரியான விளக்கம் தராவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

அக்டோபர் 16, 2020 

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை வரவேற்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  தெரிவித்தார். அரசு இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இறுதி வரை இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரப்பா தன்னிச்சையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அக்டோபர் 18, 2020

அண்ணா பல்கலைக்கழகத்தைத் தரம் உயர்த்த தேவையில்லை என்றும்  துணைவேந்தரின் நடவடிக்கைகளை அரசு வேடிக்கைப் பார்க்காது என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இந்த நிலைப்பாட்டில் அரசு நிலையாக உறுதியாக இருத்தல் வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

அக்டோபர் 21, 2020   

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. முதலிலேயே ”சூரப்பா நீ யாரப்பா?” என்று தமிழக அரசு கேட்டிருந்தால் இப்படி கேட்காமல் தன்னிச்சையாக கடிதம் எழுதும் நிலை வந்திருக்கிறாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *