நிர்மலா சீத்தாராமன் பீகார் தேர்தல் அறிக்கை

பீகாருக்கு மட்டும்தான் இலவச கொரோனா தடுப்பூசியா? அதுவும் பாஜகவிற்கு வாக்களித்தால்தானா? பாஜக-வின் தேர்தல் அறிக்கை

எதிர்வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு இத்தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையின் முதல் தேர்தல் வாக்குறுதியாக, “கொரோனாவுக்கான தடுப்பூசியை இந்திய மருத்துவ கவுன்சில் கண்டுபிடித்தவுடன் அதிகளவில் அதனை உற்பத்தி செய்து, பீகார் மக்கள் அனைவருக்கும் இலவசமாக போடப்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்தியாவின் அனைத்து மாநில மக்களுக்கும் இலவசமாக கிடைக்க வேண்டிய உயிர் காக்கும் மருந்தான கொரோனா தடுப்பூசியை, பீகார் தேர்தலில் வாக்கு பெறுவதற்கான தேர்தல் வியூகமாக பாஜக பயன்படுத்தியிருப்பதானது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

தேர்தல் நடந்தால்தான் தடுப்பூசியா?

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,”(பாஜக தலைமையிலான)  இந்திய அரசு கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கான திட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்திய மக்கள் தங்களது மாநில தேர்தல் நடைபெறும் காலத்தைப் பொறுத்து, தங்களுக்கு எப்பொழுது கொரோனா தடுப்பூசி கிடைப்பெறும் என அறிந்துகொள்ளலாம். பாஜகவின் பல பொய் வாக்குறுதிகளைப் போன்றதுதான் இது” என கூறியிருக்கிறார். 

பாஜக ஆளாத மாநிலங்களின் நிலை?

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, “அப்படியென்றால் பாஜக ஆளாத மாநிலங்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? பாஜகவிற்கு வாக்களிக்காத இந்திய மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி கிடைக்காதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனாவை வைத்து அரசியல் செய்வது யார்?

கொரோனா தடுப்புப் பணிகளில் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்படும் விதத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று பாஜக கூறிவந்த நிலையில், “கொரோனாவை வைத்து அரசியல் செய்யாதீங்க என்று ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, நீங்க தேர்தலை அதை முன்னிறுத்தி நடத்துகிறீர்களே, இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் இல்லையா?” என அகில இந்திய கிசான் சபாவினுடைய தமிழ்நாட்டின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். 

உயிர்க் காக்கும் மருந்தை குடிமக்களுக்கு வழங்குவது ஒரு அரசின் அடிப்படை கடமை. அரசியலமைப்பு சட்டப்படி குடிமக்கள் அனைவரும் சமம். ஆனால் ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜக, கொரோனா தடுப்பூசியினை தனது தேர்தல் நலனுக்காக பயன்படுத்துகிறது.

நிர்மலா சீத்தாரமன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!

இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பியுள்ள RTI செயற்பாட்டாளர் சாகத் கோகலே தனது புகார் கடிதத்தில், 

“கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் அதனை மாநிலங்களுக்கு விநியோகிப்பது தொடர்பாக ஒன்றிய அரசு இன்னும் கொள்கை வழிமுறைகளை உருவாக்கவில்லை. மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோக கொள்கை ஒன்றிய அரசால் உருவாக்கப்படாத நிலையில்,  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பீகார் மாநிலத்தில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பை அளிப்பதன் மூலம் பீகார் மக்கள் இலவசமாக கொரோனா தடுப்பூசியை பெற முடியுமென்று கூறி தான் அங்கம் வகிக்கும் ஒன்றிய அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். மேலும் அரசியலைப்புச் சட்டத்தின் பிரிவு-14 கூறும் அனைத்து குடிமக்களும் சமம் என்பதனை மீறக்கூடியதாக இந்த அறிவிப்பு இருக்கிறது. எனவே நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் மீதும், பாரதிய ஜனதா கட்சியின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளார். 

பாஜகவின் பாகுபாடு

பாஜக தேர்தலில் ஓட்டு கேட்கும் பீகார் மாநிலத்திற்கு கொரோனா தடுப்பூசிக்கான முன்னுரிமை என மோடி தலைமையிலான அரசு கூறுவதன் மூலம் பிற மாநிலங்களிடையே பாகுபாட்டைக் கடைப்பிடிக்கிறது. 

கொரோனா தடுப்பூசிக்கான முன் நிபந்தனையாக பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டுமென கோருகிறது. ஆளும் பாஜக அரசின் இப்போக்கானது, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும்பட்சத்தில் அதனை விநியோகிப்பதில் பாஜக அல்லாத கட்சி ஆட்சியிலுள்ள மாநிலங்களிடமும், பாஜகவிற்கு வாக்கு வங்கியில்லாத மாநிலங்களிடமும் பாரபட்சத்துடன் செயல்படுமோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *