அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதனை உயராய்வு நிறுவனம் (Institute of Eminence) என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு முடிவை தன்னிச்சையாக எடுத்து ஒன்றிய அரசுக்கு கடிதம் ஒன்றினை பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் உழைப்பில், தமிழக அரசின் நிதியில் உருவாகி மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக வளர்த்தெடுக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தை ஒன்றிய அரசுக்கு தாரைவார்த்துக் கொடுக்க அந்த விண்ணப்பக் கடிதம் வழிவகுத்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசையும், அதன் பிரதிநிதிகளையும் புறக்கணித்துவிட்டு நேரடியாக ஒன்றிய அரசுக்கு விண்ணப்பத்தினை அனுப்பியிருக்கிறார் சூரப்பா.

தமிழ்நாட்டு மாணவர்களின் வாய்ப்பு பறிபோகும் ஆபத்து
தமிழகத்தின் சமூக, பொருளாதார முன்னேற்றங்களில் அண்ணா பல்கலைகழகத்தின் பங்கு முக்கியமானது. கிராமப்புற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பொறியாளர்களாக உருவாக்கிய தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கை சூரப்பாவின் இந்த செயலால் அடிபட்டுப் போவதோடு, தமிழக மக்களின் நிதியில் உருவான பல்கலைகழகம் வட இந்தியர்களின் களமாக மாறக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டி-ல் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகவே இருக்கிறது. அதைப் போலவே அண்ணா பல்கலைக்கழகமும் மாற்றப்படுவதென்பது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
மாநில அரசிடமிருந்து பறித்திட குறுக்கு வழி கையாளப்படுகிறது
தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழகத்தினை ஒன்றிய அரசின் கையில் ஒப்படைப்பதற்கு ஒப்புதல் தெரிவிக்காத நிலையில், இப்படிப்பட்ட குறுக்கு வழி கையாளப்பட்டுள்ளது. மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் கையில் எடுத்துக் கொண்டு, பல்கலைக்கழகத்தினை இந்தியாவின் உயராய்வு நிறுவனமாக (Institute of Eminence) அறிவித்து, அதில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவது என்பதே அத்திட்டம்.
அவ்வாறு அண்ணா பல்கலைக்கழகத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு 1,500 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், அத்தொகையில் 1,000 கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இந்திய அரசு கோருகிறது.
69% சதவீத இடஒதுக்கீடு இருக்காது
அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம் இந்திய நாட்டில் உள்ள முதல் தர பல்கலைக்கழகங்களில் ஒன்று. அது ஒன்றிய அரசின் வசம் சென்றால், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் – அலுவலர்கள் சேர்க்கை ஆகியவற்றில் கடைபிடிக்கப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பறிபோய்விடும். இதை ஒரு காரணமாக தமிழ்நாடு அரசு கூறி வருகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி தமிழ்நாட்டின் தொழில்நுட்பக் கல்வி உரிமையை இது இல்லாது ஆக்கிவிடும்.
மாநில அரசு ஒப்புக்கொள்ளாத நிலையில் சூரப்பாவின் கடிதம் சட்ட விரோதமானது
அண்ணா பல்கலைக்கழகத்தை இந்திய அரசின் கல்வித் துறையின் வசம் எடுத்துகொள்வது குறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க தமிழ்நாட்டின் ஐந்து அமைச்சர்களைக் கொண்ட ஆய்வுக் குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார். அக்குழு இன்னும் அறிக்கையினை தாக்கல் செய்யவில்லை.
அதற்கு முன்னர் அண்ணா பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் சூரப்பா, இந்திய அரசின் கல்வித்துறைக்கு தன்னிச்சையாக இந்த விண்ணப்பத்தினை அனுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தை உயராய்வுக் கல்வி நிறுவனமாக உடனே ஏற்றுக் கொள்ளுமாறும், இதற்காக செலுத்த வேண்டிய 1,570 கோடி ரூபாயை அண்ணா பல்கலைக்கழகமே செலுத்தும் என்றும், தமிழ்நாடு அரசிடம் அத்தொகையை கேட்க வேண்டியதில்லை என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநில அரசை மீறி மாணவர்களின் பணத்தில் உறுதிமொழி கொடுக்க சூரப்பாவிற்கு அதிகாரமில்லை
அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களிடம் வசூலிக்கும் தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணம், அதன் கீழ் உள்ள கல்லூரிகள் கட்டும் இணைப்புக் கட்டணம் ஆகியவற்றிலிருந்து ஓர் ஆண்டுக்கு 314 கோடி ரூபாய் என ஐந்து ஆண்டுகளில் 1,570 கோடி ரூபாய் செலுத்தி விடுவதாக உறுதி கொடுத்துள்ளார் சூரப்பா.
அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. தன்னாட்சி அமைப்பு அல்ல என்கிற போது மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சூரப்பா 1570 கோடியை மாணவர்களின் கட்டணத்தின் வழியாக கொடுப்பதற்கு தயாரானது சட்ட விரோதமாகும்.
மாநில அரசின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உயர்கல்வி அமைச்சரை இணைவேந்தராகக் கொண்டு இயங்குகிறது அண்ணா பல்கலைக்கழகம். அப்படி இருக்கும்போது துணைவேந்தராக இருக்கும் சூரப்பா தன்னிச்சையாக முடிவெடுப்பது என்பது மாநில அரசின் உரிமையை நேரடியாக மறுப்பதாகும்.
சூரப்பா மீது சட்ட நடவடிக்கை கோரும் தமிழ்நாட்டு கல்வியாளர்கள்
தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையோ ஆலோசனையோ இல்லாமல் கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் ஆக்கினார் தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். அதன் தொடர்ச்சியாக மாநில கல்வி உரிமையை பறிக்கும் ஆர்.எஸ்.எஸ்-சின் திட்டத்தை அமல்படுத்துகிறார் சூரப்பா.

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் அதிகாரத்தை மீறி இருக்கிறார் சூரப்பா. அதன் காரணமாக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாட்டின் கல்வியாளர்கள் மத்தியிலிருந்து கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.