ஸ்டேன் சுவாமி

”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்

பீமா கொரேகான் வழக்கில் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் பாதிரியாரும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சசிதரூர், சுப்ரியா சுலே மற்றும் கனிமொழி ஆகியோரும் ஊபா போன்ற சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுத்திட ஒரு வலுவான இயக்கத்தினை உருவாக்க வேண்டும் என்றும், அச்சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பி.யு.சி.எல் செய்தியாளர் சந்திப்பு

மக்கள் சிவில் உரிமைக் கழகம் (People’s Union for Civil Liberties – PUCL) நேற்று (புதன்கிழமை) ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பல்வேறு அரசியல் தலைவர்கள் பீமா கொரேகான் வழக்கில் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்டு வரும் புலனாய்வு முகமைகள் சட்டத்திற்குப் புறம்பாக செய்து வரும் கைது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டபோதே அதைக் கண்டித்துப் பேசிய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன் தற்போது விளிம்புநிலை மக்களின் குரல்களை இந்த அரசு நசுக்கி வருவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

“இன்று மத்தியில் அமர்ந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக பேசுபவர்களின் குரல்களை நசுக்கி வருகிறது. பாஜக ஆளாத மாநிலங்கள் துன்புறுத்தப்படுகின்றன.அரசியல் சாசன பொறிமுறைகள் உள்நோக்கத்துடன் பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்கும் நிலையை நோக்கி நாம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.

தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற  ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக ஜார்க்கண்டில் பல ஆண்டுகளாக தொலைதூர இடங்களில் கடுமையான உடல் நலக் குறைவுடன் பணியாற்றி வந்த 83 வயதான ஸடேன் சுவாமியின் கைது நடவடிக்கையானது “எல்லா வரம்புகளையும் மீறிவிட்டது”. “இன்று  ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது, நாளை நமக்கும் நடக்கும்” என ஹேமந்த் சோரன் எச்சரித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த அரசு குறித்தான மௌனத்தை மக்கள் உடனே களையவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

“இன்று நாம் அரசியல் கட்சிகளாக ஒருமனதாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஒன்று முழு சமூகமும் அமைதியாய் இருந்து நடப்பவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது பொறுத்தது போதும் என அனைவரும் ஒன்றாகக் கூடி அவர்களை எதிர்க்க வேண்டும். இதில் முதலாவதைத் தேர்வு செய்தால் இன்னும் சில ஆண்டுகளில் நாம் ஜனநாயகத் இந்தியாவை முற்றிலுமாக இழந்து நிற்போம். இந்த அரசாங்கம் நிறைவேற்றி வரும் ஒவ்வொரு சட்டமும் மக்களின் உரிமைகளை பறித்து வருகிறது, இது மவுனத்தை கலைக்க வேண்டிய நேரம்” என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பொடா (POTA) சட்டத்தைப் போன்று ஊபா (UAPA) சட்டமும் மக்களின் குரல்களை நசுக்குவதற்காக தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார். 

“இந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் தனி நடவடிக்கைகள் அல்ல; ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் திட்டமாக இருந்த  இந்து ராஷ்டிரா கனவை நிறுவுவதற்கான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி. இதை ஏற்க முடியாது. இந்த மௌனத்தை உடனடியாக நாம் உடைக்க வேண்டும். நன்மை அமைதியாக இருந்தால் இறுதியில் தீமையே  வெற்றி பெரும். மதச்சார்பற்ற ஜனநாயகத்தை மக்கள் மீட்டெடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் சசி தரூர்

காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், “ஸ்டேன் சுவாமிக்கு அரசு அளிக்க வேண்டியது மரியாதையும் ஆதரவும் தான். சிறைத்தண்டனை அல்ல. எந்த ஒரு ஜெசூட்டும் (Jesuit) எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடுபவர்கள் அல்ல. வன்முறையை நோக்கி யாரையும் மடைமாற்றவும் மாட்டார்கள். இந்த கைது நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ள  வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என சசிதரூர் தெரிவித்தார்.

இந்திய கத்தோலிக்க ஒன்றியம் ம்ற்றும் வடகிழக்கு கத்தோலிக்க ஆராய்ச்சி மன்றம்

ஸ்டன் சுவாமியின் விடுதலைக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் அகில இந்திய கத்தோலிக்க ஒன்றியம் மற்றும் வடகிழக்கு கத்தோலிக்க ஆராய்ச்சி மன்றம் ஆகியவையும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கத்தோலிக்க ஒன்றியம் சுவாமியின் கைது இந்தியாவில்  கருத்து சுதந்திரத்தை நசுக்கும் முயற்சியாகத் தெரிவதாகவும், வடகிழக்கு கத்தோலிக்க ஆராய்ச்சி மன்றம் சுவாமியின் கைது அதிர்ச்சியும் சோகமும் அளிப்பதாகவும், இது போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் கைது என்பது அரசின் “தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு” (selective targeting) என்றும் தெரிவித்தனர்.

ஸ்டேன் சுவாமி கைதும், என்.ஐ.ஏவின் குற்றச்சாட்டும்

ஸ்டேன் சுவாமி இந்த மாத தொடக்கத்தில் ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து கைது செய்யப்பட்டார். தடைசெய்யப்பட்ட அமைப்பான மாவோயிஸ்ட் அமைப்பினரின் செயல்பாடுகளுடன் ஸ்டேன் சுவாமி நெருங்கிய தொடர்பில் இருந்ததாக என்.ஐ.ஏ குற்றம் சாட்டியுள்ளது. 

பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுதிர் தவாலே, ரோனா வில்சன், சுரேந்திரா காட்லிங், அருண் ஃபெரேரா, வெர்னான் கோன்சால்வேஸ், ஹனி பாபு மற்றும் வரவர ராவ் போன்ற சமூக செயற்பாட்டாளர்களுடனும் தொடர்பில் இருந்ததாகவும் கூறுகின்றனர். பீமா கொரேகான் வழக்கின் குற்றப் பத்திரிக்கையிலும் ஸ்டேன் சுவாமியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *