அர்னாப் கோஸ்வாமி கைது

அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 53 வயது மதிக்கத்தக்க கட்டிடக் கலை வடிவமைப்பாளரான அன்வாய் நாயிக் மற்றும் அவரது தாயார் இருவரும் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ரிபப்ளிக் டிவியின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவர் மகாராஷ்டிரா காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அன்வாய் நாயிக் ’கான்கார்ட் டிசைன் பிரைவேட் லிமிடெட்’ என்ற கட்டிடக் கலை நிறுவனத்தை நடத்தி வந்தார். அவருக்கு ரிபப்ளிக் டிவியின் தாய் நிறுவனமான ARG அவுட்லையர்ஸ் நிறுவனம், ஸ்கை மீடியா மற்றும் ஸ்மார்ட் ஒர்க்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து 5.40 கோடி ரூபாய் தர வேண்டி இருந்திருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களும் அந்த பணத்தினை அன்வாய் நாயிக்கிற்கு அளிக்காததால் அவரும், அவரது தாயும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். 

இந்த மூன்று நிறுவனத்தினரும் தங்களுக்கு தர வேண்டிய பணத்தினைத் தராததால் தான் தாங்கள் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டதாக ஒரு தற்கொலைக் கடிதத்தினையும் அன்வாய் நாயிக்கின் வீட்டில் காவல்துறையினர் கண்டெடுத்திருந்தனர். இதனையொட்டி அன்வாய்க் நாயிக்கின் மனைவி அக்‌ஷதா அர்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ், சர்தா உள்ளிட்ட மூன்று பேரின் மீதும் புகார் அளித்திருந்தார். ஒரு வருட விசாரணை காலத்திற்குப் பிறகு அந்த வழக்கினை அலிபாக் காவல்துறையினர் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்து மூடியிருந்தனர். 

நாயிக்கின் மகள் அளித்த வேண்டுகோளின் பேரில் இந்த வழக்கினை சி.ஐ.டி போலிசார் மீண்டும் விசாரிப்பர் என்று இந்த ஆண்டு மே மாதத்தில் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அறிவித்திருந்தார். இப்போது அந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அர்னாப் கைது செய்யப்பட்ட போது

சில மாதங்களுக்கு முன்பு அர்னாப் கோஸ்வாமிக்கு ஒன்றிய அரசினால் Y ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 6 மணியளவில் காவல்துறையினர் அர்னாப் கோஸ்வாமியின் வீட்டை அடைந்தனர். அர்னாப் கோஸ்வாமியும், அவரது மனைவி சத்யபிரதாவும் ஒரு மணிநேரமாக கதவை திறக்க மறுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. தவறான குற்றச்சாட்டுகள் காவல்துறையினர் மீது வைக்கப்படுவதை தவிர்ப்பதற்காக இந்த மொத்த நேரத்தையும் வீடியோ பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

அர்னாப் கதவை திறந்தபோது, அவரது மனைவி வீடியோ ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்துள்ளார். மேலும் காவல்துறையினர் அர்னாப்பை தாக்கியதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். கைது செய்வதற்கான அறிவிப்பை காவல்துறையினர் கையளித்தபோது, அர்னாப்பின் மனைவி அந்த பேப்பரை கிழித்து போட்டிருக்கிறார். அதன்பிறகு காவல்துறையினர் கட்டாயமாக அர்னாப்பை காவல்துறை வண்டியில் ஏற்றி கைது செய்திருக்கிறார்கள். 

அர்னாப் கோஸ்வாமி தாக்கப்பட்டதாகவும், கட்டாயமாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இந்தியர்கள் அனைவரும் ஜனநாயகத்தைக் காக்க முன்வர வேண்டும் என்று ரிபப்ளிக் டிவி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

பாஜக தலைவர்களின் கண்டனம்

பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். மகாராஷ்டிரா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை எமெர்ஜென்சியை ஞாபகப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஊடக சுதந்திரத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றும் தெரிவித்துள்ளனர். 

பாஜக ஆட்சியில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்

பாஜகவின் முக்கியத் தலைவர்கள் ஜனநாயகம் குறித்தும், ஊடக சுதந்திரம் குறித்தும் பேசுவது முக்கியமான விடயம் என்றாலும், அர்னாப் கோஸ்வாமிக்காக மட்டுமே ஜனநாயகம் தேவை என்று சொல்வதுதான் முரணாக இருக்கிறது. அர்னாப் கோஸ்வாமியை மகாராஷ்டிர சிவசேனா அரசு கைது செய்ததால்தான் இந்தியாவின் ஊடக சுதந்திரம் ஆபத்திற்கு உள்ளாகியிருக்கிறதா?

பாஜக ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் 200-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது. 40 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்கள் நடத்திய ஒருவர் கூட குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்படவில்லை. 2019ம் ஆண்டு டிசம்பர் 11 முதல் 21ம் தேதி வரையிலான CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது மட்டும் 14 ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராசில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தைப் பார்க்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் மீது ஊபா வழக்கு உத்திரப் பிரதேச அரசினால் பதியப்பட்டுள்ளது. 

இப்படி ஊடக சுதந்திரம் பெரும்பாலும் ஆபத்துக்கு தள்ளப்பட்ட காலங்களில் எல்லாம் எதுவும் பேசாமல், அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டபோது மட்டும் எமர்ஜென்சி என்றும், ஜனநாயகம் என்றும் பாஜக தலைவர்கள் பேசுவது இரட்டைத் தன்மையுடையதாகவே இருக்கிறது.

அர்னாப் கோஸ்வாமிக்காக எழுகிற இந்த குரல்கள் அனைத்து ஊடகவியலாளார்களுக்காகவும் எழ வேண்டும். அர்னாப்பின் சுதந்திரம் மட்டுமல்ல, அனைத்து ஊடகவியலாளர்களின் சுதந்திரமும் மதிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *