தமிழ்நாட்டு பெருந்தெய்வக் கோயில்களில் அழகர்கோயில் சில தனித்த நடைமுறைகளை உடையது. அவற்றுள் ஒன்று இக்கோயிலின் தலைவாசல் (ராஜகோபுர வாசல்) எப்பொழுதும் அடைக்கப்பட்டிருப்பதாகும். சிறு தெய்வங்களில் ஒன்றான பதினெட்டாம்படி கருப்பசாமி என்ற தெய்வம் கோபுர வாசலில் உரைக்கின்றது. எனவே கோபுரவாசல் ‘பதினெட்டாம்படி வாசல்’ என்று அழைக்கப்படுகின்றது.
அடைத்த கதவு
“அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கதவுகளுக்கு சந்தனம், குங்குமம், கற்பூரம் முதலியவை பூசி மாலை, புஷ்பம் முதலியவற்றால் அலங்கரித்துப் பூஜை செய்வார்கள். பதினெட்டாம்படி கதவு பிரம்மோத்ஸ்வ காலத்தில் (ஆடி மாதம்) சக்கரத்தாழ்வார் வருவதற்காக மட்டும் வருடம் ஒருமுறை திறக்கப்படும். சில சமயங்களில் ஏதாவது பிரமாணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு அது திறக்கப்படும். ஆகையால் அழகர் கோயில் பிரதான வாசலாகிய பதினெட்டாம்படி வாசல் சாதாரணமாக மூடப்பட்டிருக்கும். இதற்கு வடக்கே உள்ள வண்டி வாசல் என்பதுதான் கோயிலுக்குள் போகும் வழி” என்று ஸ்ரீ கள்ளழகர் கோயில் வரலாறு கூறுகின்றது.
தெய்வமும் உருவமும்
சந்தனம் சாத்தப்பெரும் கதவில் உறைகின்ற தெய்வமே பதினெட்டாம்படிக் கருப்பசாமி ஆகும். “இவருக்கு இங்கே உருவம் இல்லை. இங்கு பதினெட்டாம்படி கோபுரக் கதவுகளையே தெய்வமாக எண்ணி பூஜைகள் நடக்கும். மற்ற இடங்களில் இவர் கையில் ஒரு கொக்கியும் (அரிவாலும்) கதாயுதமும், ஈட்டி முதலியவையும் இருக்கும். காலில் செருப்பு அணிந்து இருப்பார். இவரது தரிசனம் பயங்கரமாகவும், யுத்த பாவனையில் இருக்கும்.” என்றும் கோயில் வரலாறு கூறுகின்றது.
ஆய்வாளருக்கு கிடைத்த ராக்காயி வர்ணிப்பு நாட்டுப்புறப் பாடல், பதினெட்டாம்படி கருப்பசாமி தன் தங்கைக்கும் அவள் மக்களுக்கும் தலையில் உருமால், தோளில் வல்லவேட்டு அரையில் சுங்கு வைத்துக் கட்டிய இருக்கிய கச்சை, கையில் கத்தி, ஈட்டி, வல்லயம், வீச்சரிவாள், தோளில் சாத்திய கட்டாரி, காலில் சல்லடம் ஆகியவற்றோடு காட்சி தந்ததாக குறிப்பிடுகின்றது.
கீழக்குயில்குடி மதுரை சிம்மக்கல் பகுதி காமாட்சி அம்மன் கோயில், சுப்ரமணியபுரம் பகுதி கருப்பசாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரத்தை அடுத்து உள்ள கருப்பசாமி கோயில் ஆகிய இடங்களில் இரண்டு கைகளோடு நின்ற கோலத்தில் தலையில் பெரிய உருமால், நெற்றியில் திருமண், ஓங்கிய கையில் வீச்சரிவாள், தொங்க விடப்பட்டுள்ள கையில் கதை சங்கு (கொசுவம்) வைத்துக் கட்டியதாக முழங்காலுக்கு கீழே வரும் அளவில் இடுப்பில் கச்சை, மிகப் பெரிய தொந்தி, காலில் செருப்பு ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார்.
வடமொழி தியான ஸ்லோகம்
அழகர் கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த கே.என்.ராதாகிருஷ்ணன் பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு உரியதாக ஒரு வடமொழித் தியான சுலோகத்தை கூறுகின்றார்.
”காலனைப் போல கருநிறம் உடையவனும், இரண்டு தோள்களை உடையவனும், இரு கைகளில் கத்தியும் கதையையும் ஏந்தியவனும், அழகிய கோரைப்பற்கள் உடையவனும், பயங்கரமான தோற்றத்தை உடையவனும், வணங்கியவர்களுடைய பயத்தை தீர்ப்பவனும், பாதுகையின் மீதேறி நடமிடுபவனும், இளமையானவனும், இளஞ்சூரியனது ஒளியுடையவனும், சிரித்த முகத்தை உடையவனும், ஆயுதத்தினால் மதங்கொண்டவனும், வளைந்த பாதத்தையுடையவனும், சிதறிய கோபந்தத்தையுடையவனும், தாமரை போன்ற கண்களை உடையவனும், கருநிறம் உடையவனும் ஆன கிருஷ்ண புத்திரனை வணங்குகிறேன்” என்பது வடமொழிச் சுலோகத்தின் பொருளாகும்
தொந்தியும், மீசையும் சொல்லப்படாத தியான ஸ்லோகம்
இத்தியான ஸ்லோகத்தில் கருப்பசாமி சிலைகளில் காணப்படும் பெருத்த தொந்தியும், முறுக்கிய மீசையும் சொல்லப்படவில்லை. ஸ்லோகத்தில் சொல்லப்படும் ‘அழகிய கோரைப்பற்கள்’ சிலைகளில் காணப்படவில்லை. எனவே இத்தெய்வத்தை வழிபடும் அடியவர் ஒருவரால் இத்தியான ஸ்லோகம் இயற்றப்பட்டதாகக் கொள்ள முடியவில்லை. பெரும்பாலும் சிறு தெய்வங்களை வழிபடாத வடமொழி அறிந்தவர் யாரேனும் இச்சுலோகத்தை செய்திருக்கலாம். ஸ்லோகம் கூறும் கிருஷ்ணா புத்திரன் என்ற பெயரை இக்கோயிலின் பிராமணப் பணியாளர் மட்டுமே அறிந்திருக்கின்றனர் என்பதாலும் இவ்வாறு எண்ணத் தோன்றுகிறது.
நாட்டுப்புற மக்கள் பாடும் ராக்காயி வர்ணிப்பு, கருப்பசாமியை அழகருக்கு (திருமாலுக்கு) தம்பியாகவே குறிப்பிடுகின்றது. பதினெட்டாம்படி கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு ’கண்ணா உன் தமையன் கருப்பன்’ எனக் குறிப்பிடுகின்றது.
பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறை வெளியிட்ட ’அழகர் கோயில்’ நூலின் சிறு பகுதியினைத் தான் இங்கு அளித்திருக்கிறோம்.
அழகர் கோயில் ஆய்வு நூல்
1976 முதல் 79 வரையிலான மூன்றாண்டு காலத்தில் தனது முனைவர் பட்ட ஆய்விற்காக இந்த ஆய்வினை மேற்கொண்டு இப்புத்தகத்தை தொ.பரமசிவன் அவர்கள் எழுதினார். பின்னர் 1980இல் பல்கலைக் கழகப் பதிப்பிற்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நூல், ஒன்பதாண்டுகள் அச்சகங்களில் ‘தவம் கிடந்து’, 1989இல் வெளிவந்தது. இருப்பினும் 1997-98ஆம் ஆண்டிற்குப் பிறகே இந்த நூல் சரியான வாசகர்களின் கைகளில் சேர்ந்தது. கோயிலாய்வுகள் என்பன வரலாற்றுத்துறை சார்ந்தன என்ற எல்லையினைத் தாண்டி, அவை பண்பாட்டாய்வின் ஒரு பகுதி என்ற எண்ணம் இன்று மேலெழுந்துள்ளதற்கு இப்புத்தகம் ஒரு முக்கியமான காரணமாகும்.
இந்த ஆய்வைப் பற்றி தொ.பரமசிவன் அவர்கள் குறிப்பிடும்போது, “பண்பாட்டாய்வு என்பது பலமுனைப்பட்டதாகும். மக்களின் வாய்மொழி வழக்காறுகளும் வாய்மொழி அல்லாத வழக்காறுகளும் செல்வமதிப்பு உடையன. இந்த உண்மையை உணர்ந்தவர்களால் மட்டுமே ஓர் இலக்கியப் பனுவலையோ, ஒரு கல்வெட்டினையோ, சமூக நிகழ்வு அல்லது முரண்பாடு ஒன்றினையோ அதன் உள்ளார்ந்த தன்மையுடன் விளங்கிக் கொள்ள முடியும்.” என்று தெரிவிக்கிறார்.