மாநில அரசுகளின் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையான 2.35 லட்சம் கோடியை ஒன்றிய அரசு வழங்க மறுத்துவிட்டது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நடைமுறையால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக என்று சொல்லி compensation cess முறை நீட்டிக்கப்பட்ட பின்னர், ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு இழப்பீடு கொடுக்க உறுதியளித்தது. ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை. அதுமட்டுமல்லாது நிலுவைத் தொகை கேட்கும் மாநில அரசுகளை தன்னிச்சையாக கடன்பெற்றுக் கொள்ள மத்திய அரசு நிர்பந்திக்கிறது. இந்த போக்கு கூட்டாட்சி அமைப்பின் மீது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது வரி மிதப்பு (tax buoyancy) நெகட்டிவ் மதிப்பில் சென்றதால் உருவான பொருளாதார சரிவு. வரி மிதப்பு என்பது ஒரு நாட்டின் வரி வருவாய் அளவையும், நாட்டின் மொத்த உற்பத்தி அளவையும் ஒப்பிட்டு அளவிடும் விகிதம் ஆகும். வரி வருவாயின் அளவானது, நாட்டின் மொத்த உற்பத்தி விகிதத்தை விட குறைவாக இருந்தால் வரிமிதப்பு நெகட்டிவ் மதிப்பில் செல்கிறது என்று அர்த்தம். இரண்டாவது மத்திய வரித் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய தொகையில் பல்வேறு நெருக்கடிகளை உண்டாக்குதல்.
ஒட்டுமொத்த இந்தியக் கட்டமைப்பையும் பாஜக அரசினை மையப்படுத்திய போக்கு உருவாக்கப்பட்டிருப்பதுதான் இந்த இரண்டு நெருக்கடிகளுக்கும் காரணமாக உள்ளது. இந்த போக்கு பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் தொடர் முரண்பாடுகளுக்கு இட்டுச்செல்கிறது.
வரி மிதப்பு (tax buoyancy) சரிவால் பாதிக்கப்படும் வருவாய்
2019-20ம் ஆண்டில் இந்தியாவில் வரி மிதப்பு அளவானது நெகட்டிவ் நிலைக்கு சென்றுள்ளதை நிதி அமைச்சின் கீழ் செயல்படும் கன்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் அக்கவுண்ட்ஸ் (சிஜிஏ) தரவுகள் வெளிப்படுத்துகிறது. இந்த நிலை 1962-63 ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் ஏற்பட்டுள்ளது.
2017-18 முதல் 2019-20 வரை வரி மிதப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது 2016-17ல் 0.16, 2017-18 இல் 0.12, 2018-19 இல் 0.09 மற்றும் 2019-20 இல் -0.05 ஆக குறைந்துள்ளது.
மாநில அரசுகளின் வரி பற்றாக்குறை சுமையை மைய அரசு பொருடபடுத்தவில்லை
ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கு இடையிலான வரி பகிர்வு பல்வேறு விதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழியுறுத்துகிறது. அந்த பகிர்வு முறை நிதி ஆணையத்தால் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கத்தின் அடிப்படையில் 14-வது நிதி ஆணையம் மத்திய அரசின் வரிகளில் 42% மாநிலங்களின் பங்காக நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 2018-19ம் ஆண்டில் மாநிலங்களுக்கான பங்கு 36.6% எட்டியது. அதன்பின் அதிலிருந்து சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. செஸ் மற்றும் கட்டணங்கள் மத்திய வரிகளில் அதிகரித்து வருகிறது. 2014-15 ஆம் ஆண்டில் 10% க்கும் குறைவாக இருந்தது, ஆனால் படிப்படியாக 2019-20 ஆம் ஆண்டில் 15% ஆக அதிகரித்துள்ளது. இருந்தும் மத்திய அரசு மாநில அரசுகளுடன் முறையாக பகிர்ந்து கொள்வதில்லை.
பெட்ரொல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரி மாநில அரசுகளைவிட லிட்டருக்கு இரண்டு மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சியில் இருந்த காலகட்டத்தில் கூடுதல் லாபங்களை ஒன்றிய அரசே வைத்துக் கொண்டது.
அரசு தகவல்களை பார்க்கும்போது மற்ற ஒன்றிய வரி வருவாயைவிட கலால் விரி விகிதாச்சார அடிப்படையில் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கலால் வரி வருமானம் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை.
மாநில அரசுகளுக்கு தர வேண்டிய உரிய வரி வருமானத்தைக் கொடுக்காமல் ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு தடுத்து வருகிறது. இது நிர்வாக சிக்கல் என்று குறுக்கிவிட முடியாது. டெல்லியில் ஆட்சியைப் பிடித்துக் கொண்டு தனது செல்வாக்கை அதிகரிப்பதற்காக பாஜக அரசு ஒட்டுமொத்த நிர்வாகத்தையும், தனது கட்சியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தி வருகிறது. மாநில கட்சிகள் பல்வேறு பொது நலத்திட்டங்களினூடாக செல்வாக்கு பெருவதை தடுத்து ஒன்றிய பாஜக அரசுதான் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகிறது.
எந்தவித செயல்வடிவமும் இல்லாத பல நலத்திட்டங்களை விளம்பரத்திற்காக அறிவித்து அதற்கான கட்டமைப்பு செலவுகளை தொடர்ந்து பாஜக செய்து வருகிறது. இதற்கான நிதியை மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டியதில் இருந்து எடுத்துக் கொள்கிறது.
ஒருபக்கம் மாநில கட்சிகளின் நலத்திட்டத்தை முடக்குவது, மறுபக்கம் தனது கட்சிக்கான செல்வாக்கை அதிகப்படுத்த தொண்டர்ளை வைத்து இந்த திட்டங்களை பரப்புரை செய்யது வருகிறது மோடி அரசு. மாநில அரசுகளின் மீதான பாஜக-வின் அரசியல் தாக்குதல் நிதி கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு அழித்து வருகிறது.
நன்றி: Hindustan Times