இந்தியாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் மேல் நிகழும் அடக்குமுறை மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) ஆணையர் மிச்செல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.
“இந்தியா நீண்ட காலமாக ஒரு வலுவான சிவில் சமுதாய அமைப்பைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி உலகளவில் மனித உரிமை செயல்பாட்டில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் தற்போது எதிர்மறையான சட்ட திட்டங்களால் இந்த குரல்வளைகள் நசுக்கப்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
FCRA சட்டத் திருத்தம்
2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் திருத்தம் செய்யப்பட்ட Foreign Contribution Regulation Act (FCRA) குறித்து மிச்செல் பேச்லெட் மற்றும் ஐ.நாவின் பல்வேறு உறுப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இத்திருத்தங்கள் மனித உரிமை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதற்கும் உரிமைகளை நிலைநாட்டுவதற்குமான முயற்சிகளுக்கு தடைகளாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்த சட்டத்திருத்தங்கள் அலுவல் ரீதியாக பல இடர்பாடுகளை மனித உரிமை ஆர்வலர்கள் மீது தொடர்ச்சியாக ஏற்படுத்தும் விதமாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அதன் காரணமாக அவர்கள் அலுவலகத்தினை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஐ.நா-வுடன் தொடர்பில் இருக்கும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் அலுவலகங்களும் கூட பல ஆண்டுகளாக ரெய்டு செய்வது, வங்கி கணக்குகளை முடக்குவது, அங்கீகாரத்தை ரத்து செய்வது என பல வகையில் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்படுவது FCRA சட்டத்தின் மூலம் நியாயப்படுத்தப்பட்டு வருவதாக மிச்செல் பேச்சலெட் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்கும் அரசு சாரா அமைப்புகளை தண்டிப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் மட்டுமே ஜனநாயகத்தின் ரத்தநாளங்களாக இருக்க முடியும். அந்த விமர்சனங்கள் அரசு அதிகாரிகளுக்கு அசௌகரியமானதாக இருந்தாலும் கூட, அவை சட்டவிரோதமாக்கப்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
அமைப்பாக இயங்குவதற்கான சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்யும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையில் (International Covenant on Civil and Political Rights) இந்தியா கையெழுத்திட்டுள்ளதை அவர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்
சமீப காலங்களில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதால் 1,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பலர் ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஊபா சட்டமும் கூட சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு எதிராக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டு வரும் 83 வயதான சமூக ஆர்வலர் மற்றும் பாதிரியார் ஸ்டான் சுவாமியை NIA புலனாய்வு முகமை கைது செய்தது.
தன் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துபவர்கள் மற்றும் அமைதியான முறையில் பொது இடத்தில் கூடுபவர்கள் மீது அரசு கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், அந்த உரிமைகளை மக்கள் மேலும் முழுமையாக மேற்கொள்ள சட்டம் மற்றும் கொள்கைகளில் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இந்தியாவின் சட்டங்கள் சர்வதேச மனித உரிமைகள் சட்ட திட்டங்களுடன் முரண்கள் இல்லாத வண்ணம் எஃப்.சி.ஆர்.ஏ (FCRA) சட்டத் திருத்தத்தை மறுஆய்வு செய்வதோடு, ஊபா போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிவில் சமூக அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வளர்ச்சி அளிப்பதற்கு இந்திய அரசு சட்ட மற்றும் சமூகப் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான பிரச்சினைகளில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இந்திய அரசுடன் தொடர்ந்து நெருக்கமாக ஈடுபடும் என்றும், இந்தியாவில் அடிப்படை உரிமைகளை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் ஆணையர் பேச்லெட் கூறியுள்ளார்.