பாண்டிச்சேரி

ஆதார் தகவல்களை பாஜக திருடியதாக எழுந்த புகார்; புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்களர்களின் ஆதார் தகவல்களை பாரதிய ஜனதா கட்சி சட்ட விரோதமாக எடுத்து 952 வாட்சப் குழுக்களை உருவாக்கி தொகுதி வாரியாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையம் இப்புகாரில் அலட்சியமாக செயல்படுவதைக் கண்டித்ததுடன், இந்த விசாரணை நடைபெற்று முடியும் வரை புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. 

மார்ச் 31-க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

நீதிபதிகள் சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில் குமார், ஆதார் விவரங்களை பாஜக சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதில் அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம் அதிகாரத்தில் உள்ள கட்சி, அதிகாரத்தில் இல்லாத கட்சி என அனைத்து தரப்பையும் சமமாக கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 

காவல்துறைதான் விசாரிக்க வேண்டும் – தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபாலன், இந்த புகார் தொடர்பாக பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியிருப்பதாகவும், வாக்களர்களின் விவரங்கள் எந்த சோர்சில் இருந்து கிடைத்தன என்பதை விசாரிப்பது காவல்துறையின் கடமை என்றும் தெரிவித்தார்.

ஆதார் தகவல்களை நாங்கள் யாருக்கும் பகிரவில்லை – UIDAI

UIDAI ஆதார் துணை இயக்குநர் ஆர்.எஸ்.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், UIDAI எந்த தரவுகளையும் யாருக்கும் பகிரவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆதார் தகவல்களைப் பயனர்களிடமிருந்து பெறும் User Agencies அந்த தகவல்களை யாரிடமும் பகிரக் கூடாது எனும் கடுமையான விதிமுறைகள் இருக்கிறது. ஆதார் தகவல்களை UIDAI பகிர்ந்ததாக வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

ஆதார் சட்டத்தின் 31வது பிரிவின் படி, ஒருவரின் ஆதார் விவரங்களை உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுடன் மட்டுமே பகிர முடியும் என்றும், அதிலும் சம்மந்தப்பட்ட பயனருக்கு அதில் வாதட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதும் விதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

காவல்துறையால் மிரட்டப்படும் மனுதாரர்

ஆதார் விவரங்களை சட்டவிரோதமாக பாஜக பயன்படுத்துவதாக புகாரை அளித்த மனுதாரர் ஆனந்த் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சுமதி, புதுச்சேரி காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை என்ற போர்வையில் மனுதாரர் ஆனந்தை மிரட்டி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

காவல்துறை தங்கள் கடமைகளில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முகப்புப் படம்: நன்றி – The Federal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *