திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ஆயிரம்விளக்கு தொகுதியில் மருத்துவர் எழிலனும், நடிகை குஷ்பூவும் போட்டியிடுகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள் என முக்கியத் தலைகள் போட்டியிடும் தொகுதிகள் சென்னையில் இருந்தாலும், இந்தமுறை அதிகமாக கவனிக்கப்படும் தொகுதியாக ஆயிரம்விளக்கு இருக்கிறது.
சமூக அக்கறை கொண்ட குடும்பம்
திமுக சார்பாக போட்டியிடும் மருத்துவர் எழிலன் மூன்றாம் தலைமுறையாக சமூக அக்கறையுடன் செயல்படும் குடும்பத்தில் இருந்து வருகிறார். அவரது தாய் வழி பாட்டனார் ஜமத்கனி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். எழிலனின் தந்தை பேராசிரியர் மு.நாகநாதன் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். பொருளாதாரத் துறை பேராசிரியரான இவர் திமுகவின் தேர்தல் அறிக்கைகளை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியவர். சமுகநீதி, மக்கள் நலன் குறித்தும், மாநில உரிமைகள் குறித்தும் தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் வருபவர். முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவராக இருந்தவர்.
எழிலனின் சமூகநீதி பரப்புரைகள்
மருத்துவர் எழிலன் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் போராட்டங்களில் பங்கெடுத்தவர். இளைஞர் இயக்கம் என்ற பெயரில் கடந்த பத்தாண்டுகளாக சமூக நீதி, சமூக சீர்திருத்தம், பகுத்தறிவு என பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகளை செய்து வருகிறார். கிராமப்புற, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வு பரப்புரைகளை செய்துவந்தார்.
சமுக நீதியின் மீதும், சுயமரியாதை மீதும் பற்று கொண்டவர். தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். உயர் சிறப்பு மருத்துவத்தில் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், அரசு மருத்துவமனைகளின் அவசியம், அரசு மருத்துவர்களின் உரிமைகள் என நீண்ட காலமாக இயங்கி வருபவர்.
எளிய மக்களுக்கான தொடர்ந்து இயங்கியவர்
புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை தமிழகத்தில் துவக்கத்திலேயே எச்சரித்தவர்களில் ஒருவர். உயர் சாதியினருக்கான பத்து சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபோது தமிழகத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகளை பரப்புரை செய்தவர்களில் ஒருவர்.
சென்னை வெள்ளம் போன்ற காலங்களில் பாதிக்கபட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்தார். நெடுவாசல் போராட்டத்திற்கு நேரில் சென்று கலந்து கொண்டவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொடர்ச்சியாக சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தவர்.
தன் கல்லூரி காலம் முதல் சமுகநீதி போராட்டங்களில் துடிப்பாக இருந்த அவர், இன்றுவரை அந்த கொள்கைகளில் உறுதியாக இருந்து அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பவர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
எழிலனை வீழ்த்துவதை கொள்கை வெற்றியாகப் பார்க்கும் பாஜக
பாரதிய ஜனதா கட்சி மருத்துவர் எழிலனை வீழ்த்த வேண்டும் என்பதை தன் கொள்கையின் வெற்றியாகப் பார்க்கிறது. மருத்துவரின் எழிலனின் பகுத்தறிவு பிரச்சார வீடியோக்களை பதிவிட்டு அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்று ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகிறது. எழிலனுக்கு கடுமையான போட்டி கொடுக்க வேண்டும் என்றே நடிகை குஷ்பூவை களம் இறக்கி விட்டிருக்கிறது.
எழிலன் அவர்களின் சமூகப் பணி காரணமாக அவருக்கு ஆதாரவாக கட்சி சாராத பல இளைஞர்கள் சமூக அமைப்புகள், தனிநபர்கள் களத்தில் இறங்கி அவருக்காக பரப்புரை செய்கிறார்கள். குஷ்பூ சினிமா நட்சத்திரமாக இருந்தபோதும் திரைத்துறையில் உள்ள சமூக அக்கறை கொண்டவர்கள் எழிலனுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சினிமா பிரபலத்தை மட்டுமே முன்வைத்து இறங்கியிருக்கும் குஷ்பூ
ஒரு பக்கம் தனது சமூகப் பணிகளை மக்களிடையே பேசி களம் இறங்கியிருக்கும் எழிலன், இன்னொரு பக்கம் தனது சினிமா பிரபலத்தை மட்டுமே முன்வைத்து களம் இறங்கியிருக்கும் குஷ்பூ. குஷ்பூ ஆரம்பத்தில் திமுக-வில் இணைந்து தனது அரசியலைத் துவங்கியவர். பின்னர் காங்கிரசிற்குச் சென்றார். காங்கிரசில் இருந்துகொண்டு பாஜகவிற்கு எதிராக தொடர்ந்து வீர வசனங்களை பேசிக் கொண்டிருந்தார்.
திடீரென ”இருக்கின்ற மேடையிலேயே இருக்கின்ற கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் ஒரே தைரியமும் தன்னம்பிக்கையும் எனக்கு மட்டும்தான் இருக்கிறது” என்பது போல பாஜகவிலே சேர்ந்து கொண்டார். ”கட்சி மாறுவதால் என்னை கோழை என்றோ, பச்சோந்தி என்றோ நினைத்துவிட வேண்டாம்” என்ற பாணியில் பேட்டி கொடுத்து சமூக வலைதளங்களில் வைரல் காமெடி மீம் கண்டெண்ட் ஆக மாறிப்போனார்.
சமுக நீதிப் போராட்டத்தின் முகமா? சினிமா பிரபலமா? ஒரு கை பார்த்துவிடலாம் என்று சமூக ஆர்வலர்கள் எழிலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…