தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் ஜனநாயகத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கெடுப்பதில் உள்ள சவால்கள், அரசு மற்றும் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தீபக் அவர்களிடம் பேசினோம்.
மாற்றுத்திறனாளிகளின் குரலாக அவர் பேசியது:
தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் பங்கெடுப்பதில் வேட்பாளராக பங்கெடுப்பதிலும், வாக்காளராக பங்கெடுப்பதிலும் இருக்கும் சவால்களை கண்ணுக்குத் தெரியும் சவால்கள், கண்ணுக்குத் தெரியாத சவால்கள் என பிரிக்கலாம்.
மாற்றுத்திறனாளியாக பதிவு செய்வதில் உள்ள சிக்கல்
வாக்காளராக கண்ணுக்குத் தெரிந்த சவால்களை எதிர்கொள்வதில் பல விதமான மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள். வாக்குச்சாவடிகள் அவர்களுக்கு ஏதுவானதாக இருக்கிறதா என்பது முதல் கேள்வி. அடுத்ததாக, மாற்றுத்திறனாளியாக ஒருவர் வாக்காளராக பதிவு செய்வதில் இருந்தே சிக்கல் துவங்குகிறது. வாக்காளர் பெயர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என்று பதிவு செய்தால் மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளைக் கேட்க முடியும்.
மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016-ல் 21 வகையான மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகக் கூறுகிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை 7 வகையான மாற்றுத்திறனாளிகளுக்குத் தான் கொடுக்கப்படுகிறது. மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை கட்சிகள் இப்போதுதான் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இந்த கோரிக்கையிலிருந்துதான் அனைத்தும் துவங்குகிறது. நான் மாற்றுத்திறனாளியாக அடையாளப்படுத்தப்படவே இல்லை என்றால், எப்படி எனது உரிமையைக் கேட்க முடியும்?
வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்கு செலுத்துவது வரை உள்ள சிக்கல்கள்
வாக்கு சாவடிக்கு சக்கர நாற்காலியில் செல்வதென்றால் அதற்கான சாலை வசதி அங்கு இருக்கிறதா? தசை சிதைவு எற்பட்டுள்ள குழந்தைகள், பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் என்று ஒவ்வொரு விதமான மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு விதமான சிக்கல்கள் வாக்கு செலுத்துவதில் இருக்கிறது. காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத, பார்வை தெரியாத மாற்றுத்திறனாளிகள் வாக்கு செலுத்த என்ன வசதி இருக்கிறது?
தேர்தல் அதிகாரிகளுக்கே அவர்களை எப்படி வாக்கு செலுத்த வைப்பது என்று தெரியாது. தொடு சைகை மொழி அங்கு இருக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிந்திருக்குமா? வாக்குச்சாவடியில் சாய்வு தளம் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை இருக்க வேண்டும்.
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதா? இல்லை. யாருடைய உதவியும் இல்லாமல் அவர்கள் வாக்களிக்க எற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் எழுகிறது. இவை அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டும்.
வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு வாக்குச்சாவடிகளின் உள்ளே வைத்து வலிப்பு வந்தால் அவர்களுக்கு எவ்வாறு உதவப் போகிறோம்? இதையெல்லாம் மனதில் கொண்டு வாக்குச்சாவடிகளை வடிவமைக்க வேண்டும். வெளிநாடுகளில் இப்படித்தான் வடிவமைக்கிறார்கள். சக்கர நாற்காலியில் சென்று வாக்களிக்கச் செல்லும் மூத்த குடிமக்கள் சக்கர நாற்காலியை யார் உதவியும் இல்லாமல் இயக்கிச் செல்வதற்கு ஏற்றார்போல் வாக்குச்சாவடி திட்டமிடப்பட வேண்டும்.
குடும்பத்திற்குள்ளும், குடும்பத்திற்கு வெளியிலும் இருக்கும் அழுத்தங்கள்
கண்ணுக்குத் தெரியாத சிக்கல்கள் என்பது குடும்பத்திற்குள்ளும், குடும்பத்திற்கு வெளியிலும் இருக்கும் அழுத்தங்கள். சுதந்திரமாக வாக்கு செலுத்த முடியாத நிலை இருக்கிறது. 95% மாற்றுத்திறனாளிகள் வறுமையில குடும்பத்தினரைச் சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் சொல்பவர்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டிய சூழல் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கிறது. அரசியல் அறிந்து மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு எந்த கட்சி துணையிருக்கும் என்று எல்லாம் பார்த்து வாக்களிக்கும் சுதந்திரம் இல்லை.
தபால் வாக்குகளில் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை
தபால் வாக்குகள் என்று வரும் போது தேர்தல் அதிகாரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு இல்லாமல் வாக்கு செலுத்தவைக்க முடியுமா? அதற்கு தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுகிறது. இவை எல்லாம் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலையை ஏற்படுத்தும் மிக முக்கியமான சிக்கல் ஆகும்.
மாற்றுத்திறனாளிகள் வேட்பாளர்களாக சந்திக்கும் சிக்கல்
வேட்பாளர் என்று வருகிறபோது 2014 நாடாளுமன்றத் தேர்தலில், கோவிந்தசாமி என்கிற மாற்றுத்திறனாளி வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, முதல் தளத்தில் இருந்த தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கீழே இறங்கி வர மறுத்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி வாதாடி சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகே, அவர் இருக்கையிலிருந்து இறங்கி வந்து வாங்கினார்.
இந்த தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முகமது கடாபி என்பவரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்துள்ளனர். அந்த மனுவில் என்ன பிழை இருந்திருக்கும்? அவர் மீது எதும் குற்ற வழக்குகளா இருக்கிறது? அப்படி ஏதும் இல்லை. இதில் தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகளிடம் inclusive-வாக செயல்பட வேண்டும்.
சுற்றுலா தளங்களில் நாம் மாற்றுத்திறனாளி நண்பரை அவரது நண்பர்கள் தோளில் தூக்கி வருவதைப் பார்த்திருப்போம். அது ஒரு அப்பழுக்கில்லாத அன்பு. அவர்கள் தன் நண்பனை தாங்கள் செல்லும் இடங்களுக்கு அழைத்து செல்வதைப் போல தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகளை இணைத்துக் கொண்டு செல்ல வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு தேவை
மேலும் மாற்றுத்திறனாளிகள் 95% பேருக்கு மேல் ஏழைகளாகத் தான் இருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் இடஒதுக்கீடு போன்றவை கொடுத்தாலும் அது அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கியதாக இருக்காது. அதனால் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பாக தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறோம் என்று முடித்தார் தீபக்.