ரெட்டைமலை சீனிவாசன்

இரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் என்ற திங்களிதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939-ம் ஆண்டுவரை இருந்தவர்.

அவர் ஜூலை 7, 1859 அன்று பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் சடையன் என்பவருக்கு பிறந்தார். தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்கு சீனிவாசன் எனப் பெயரிட்டனர். தொடக்கப் பள்ளியில் தந்தை பெயரின் முன் எழுத்திற்குப் பதிலாக, தந்தையின் முழுப்பெயரையும் சேர்த்து எழுதிவிட்டார்கள். அதனால் இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.

கோயம்புத்தூரில் இவர் கல்வி பயின்ற பள்ளியில் சுமார் 400 மாணவர்களில் 10 மாணவர்களைத் தவிர, மற்ற அனைவருமே பார்ப்பன மாணவர்கள் என தன் வாழ்க்கைச் சுருக்கத்தில் அவரே எழுதியுள்ளார். வறுமை காரணமாக பள்ளிக் கல்வியோடு இவர் படிப்பை முடித்துக் கொண்டார். தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார். 

1887-ம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாள் அவர்களை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகளும், 4 ஆண் பிள்ளைகளும் பிறந்தனர். நீலகிரியில் ஓர் ஆங்கிலேயரின் நிறுவனத்தில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890-ல் சென்னைக்கு வந்தார்.

1891-ல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893 -1900 வரை ‘பறையன்’ என்ற மாத இதழை நடத்தினார். 

இரட்டைமலை சீனிவாசன் 1900-ம் ஆண்டில் வேலைதேடி தென்னாப்ரிக்கா சென்றார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை கிடைத்தது.

இவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916-ல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதில் தன் பங்களிப்பினை சிறப்பாக செயதார். 1921-ல் தென்னாப்ரிக்காவில் இருந்து திரும்பினார்.

சட்டசபை உறுப்பினராக இரட்டைமலை சீனிவாசன்

மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின்படி, 1920-ல் நடைபெற்ற தேர்தலின்போது சென்னை மாகாண சட்டசபைக்கு பட்டியல் பிரிவில் இருந்து ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். 

இரண்டாவது, தேர்தலுக்குப் பின் 19.11.1923-ல் இரட்டைமலை சீனிவாசன், எல்.சி.குருசாமி உள்ளிட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 10 பேர் சட்டசபையின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். 

ஓவியம்: ராஜேஷ் பென்சில்

முன்மொழிந்த இரண்டு தீர்மானங்கள்

இரட்டைமலை சீனிவாசன் இரண்டு முக்கிய தீர்மானங்களை  22.08.1924-ல் சட்டசபையில் முன்மொழிந்தார். அந்த தீர்மானங்களை அரசும் ஏற்றுக்கொண்டது. அவை,

  1. எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும், யாதொரு பட்டணம் அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி தெருவழியாகும் நடக்க அனுமதி அளிப்பது.
  1. இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டிடங்கள் ஆகியன இவைகளுக்குள் போகலாமோ, அம்மாதிரியாகவும் அம்மட்டிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்கும், உபயோகிப்பதற்கும் ஆட்சேபணை இருக்கக் கூடாது.

இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 1939-ம் ஆண்டு சட்டசபை கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் வாழ்வியல் உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார்.

ஆதி திராவிடர் எனும் பெயர்

20.01.1922-ல் எம்.சி.இராஜா சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதி திராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

25.03.1922-ல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதி திராவிடர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924-ல் சட்டசபையில் முறையிட்டார். அதற்கு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.

பரம்பரை மணியக்காரர் முறைக்கு எதிரான குரல்

பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் சேரிகளுக்கு வருவதில்லை. எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட அனைத்து சாதியினரும் மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் என சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதியைச் சேர்ந்த உறுப்பினரான எல்.சி.குருசாமியும் முன் வைத்தார். இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப் பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.

06.02.1925 அன்று சட்டசபையில் பேசிய இரட்டைமலை சீனிவாசன், ”தெலுங்கு மொழி பேசும் தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதி ஆந்திரர் என அழைக்கும்போது புலையர், தீயர்களை ஏன் மலையாள திராவிடர் என அழைக்கக்கூடாது” என கேள்வி எழுப்பினார்.

இரட்டைமலை சீனிவாசன் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பட்ஜெட் உரையின் மீது உரையாற்றுவது வழக்கம். அவரது முதல் பட்ஜெட் உரை 06.02.1925 அன்று தொடங்கியது. ஆதி திராவிட மக்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்தினார். இவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினார். 

மதுக்கடை மூடலுக்கான தீர்மானம்

இரட்டைமலை சீனிவாசனின் மற்றுமொரு முக்கியத் தீர்மானம் மதுக்கடைகளை மூடவேண்டுமென்பது. கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளைத் திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதாக சீனிவாசன் கருதினார். அறவே கடையை மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929-ல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக்கொண்டது.

ஆதி திராவிடர்களின் முதல் மாநாடு

ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு 29.01.1928-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசன் அவர்களை தலைமை ஏற்கும்படி வி.ஜி.வாசுதேவப் பிள்ளை முன்மொழிந்து, வி.ஐ.முனிசாமிப் பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிகளுக்கிடையே இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எம்.சி.மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார்.

 வரவேற்புக் குழுவின் தலைவர் என். சிவராஜ் சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும் ஆகும். இம்மாநாட்டில், 

  • ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும்.
  • 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும்.
  • கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும். 
  • உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை. 1928-ல் தான் முதன்முறையாக ஆதி திராவிட மாணவர்களுக்கு கதவு திறக்கப்பட்டது. மதுரைப் பிள்ளை வரவேற்புரையில் பச்சையப்பன் கல்விக் குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

லண்டன் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன்

வலமிருந்து ஆறாவதாக அம்பேத்கருக்கு பக்கத்தில் வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன்

1930-32 களில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் இவர், அம்பேத்கருடன் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகச் சென்று கலந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றினார். கடைசி வரையில் அம்பேத்கருடனும், தமிழகத்தில் திராவிட இயக்கத்தினருடனும் நட்புணர்வுடன் செயல்பட்டு வந்தார்.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார்.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இவர்கள் இருவரும் தயாரித்துக் கொடுத்த ஆவணம், தாழ்த்தப்பட்ட மக்களின் முழு உரிமையைப் பெற்றுத் தருவதாக அமைந்திருந்தது.

அம்பேத்கர் 1935-ல் தான் மதம் மாற வேண்டும் என அறிவித்தபோது இரட்டைமலை சீனிவாசன் ”நாம் தான் இந்து மதத்தில் இல்லையே (அவர்ணஸ்தர்) வருணம் அற்றவர்கள் ஆயிற்றே, நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன் கருத்தைத் தெரிவித்தார்.

இரட்டைமலை சீனிவாசன் 1945 செப்டம்பர் 18 அன்று மரணமடைந்தார் அவரது நினைவு நாள் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *