மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவு மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கிடும் வகையில் அம்மாநில அரசு கொண்டுவந்த சட்டம் அனுமதிக்கப்பட முடியாது என்றும், 50% இட ஒதுக்கீடு என்ற எல்லைக்கு மேல் கொண்டுவரப்படும் எந்த இடஒதுக்கீடு சட்டமும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு அரசியலமைப்பு சாசனத்தின் அட்டவணை 9-ல் சேர்க்கப்பட்டு 69% சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தமிழ்நாட்டின் சமூக நீதியை பாதிக்குமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் கொண்டுவரப்பட்ட சட்டம்
மகாராஷ்டிரா மாநில அரசு 2019-ம் ஆண்டு மராத்தா சமூக மக்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினைக் கொண்டுவந்தது. கெய்க்வாட் ஆணையம் உருவாக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மராத்தா பிரிவு மக்களுக்கு 16% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இந்த சட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வேலைவாய்ப்பில் 12 விழுக்காடு, கல்வியில் 13 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது.
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு
மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கினை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. நீதிபதிகள் அசோக் பூஷன், எல்.என்.ராவ், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பாட், அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. 1992-ம் ஆண்டு இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவு 50 % அளவுக்கு மேல் போகக் கூடாது என்று கூறியிருப்பது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடகாவின் மற்றொரு வழக்கு
1992-ம் ஆண்டின் இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே விடப்பட வேண்டும் என்று கர்நாடக அரசும் ஒரு வழக்கினை உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருந்தது.
நாங்களே தீர்மானிப்போம் என சொல்லும் மாநிலங்கள்
இதேபோல் தமிழ்நாடு, பீகார், ஜார்க்கண்ட், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களும் 50% அளவிற்கு மேல் இடஒதுக்கீட்டினை வழங்கும் அதிகாரம் மாநிலங்களுகு வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சாசன அமர்வின் முன்பு தெரிவித்திருந்தன. ஆனால் தற்போது ஐந்து நீதிபதிகள் பெஞ்ச் வழங்கியுள்ள தீர்ப்பு இம்மாநிலங்களின் கோரிக்கையை மறுத்துள்ளது.
நீதிபதிகள் குறிப்பிட்டது என்ன?
மகராஷ்டிராவின் சட்டம் குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, மராத்தா பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க 50% இடஒதுக்கீட்டு எல்லையை மீறும் அளவிற்கு எந்தவொரு அசாதாரண அல்லது தவிர்க்க முடியாத சூழல் எதுவும் இப்போது இல்லை என்று கூறியுள்ளது. மராத்தாக்கள் நாட்டில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதாகவும், அரசியல் ரீதியாகவும் அதிகாரம் பெற்ற சமூகமாகவும் இருப்பதாகவும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
மராத்தா சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவு 14 மற்றும் பிரிவு 21 ஆகியவற்றை மீறிய செயலாகும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரிவு 14 என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும், பிரிவு 21 சட்டத்தின் அடிப்படையில் எந்தவொரு தனிநபரின் சுதந்திரமும் பறிக்கப்படக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது.
1992 இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும் சமூக ரீதியிலும், கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினர் (Socially and Educationally Backward Classes) பட்டியலில் எந்த சமூகம் இடம்பெற வேண்டும் என்பதை மத்திய அரசே முடிவு செய்ய முடியும் என்றும் நீதிபதிகளில் ஒருவரான ரவீந்திர பாட் தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை பிற நீதிபதிகளும் ஏற்றுள்ளனர்.
மாநிலங்கள் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்- நீதிபதிகள்
அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவு 324A(1)-ன் படி, குடியரசுத் தலைவர்/மத்திய அரசு மட்டுமே சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய எந்தவொரு மாற்றம் குறித்தும் முடிவெடுக்க முடியும் என்றும், மாநில அரசுகள் பரிந்துரைகளை வேண்டுமானால் கொடுக்கலாமே தவிர தனித்து முடிவெடுக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் பட்டியல் மட்டுமே சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினரின் பட்டியலில் இறுதியானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பட்டியலில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மூலம், குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெறுவதன் வழியாகவே செய்ய முடியும் என்றும் கூறியுள்ளனர்.
அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவு 338B அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைகள் வழங்குவதன் மூலமே குடியரசுத் தலைவர் மாற்றங்களை மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விடயத்தில் குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது. எந்தவொரு மாற்றத்தையும் அவரால் ஏற்கவோ நிராகரிக்கவோ முடியும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
50% என்ற அளவிற்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கும் மாநிலங்கள்
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. SC பிரிவினருக்கு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுடன் 18% சதவீதமும், ST பிரிவினருக்கு 1% சதவீதமும், BC பிரிவினருக்கு 30% சதவீதமும், MBC பிரிவினருக்கு 20% சதவீதமும் வழங்கப்படுகிறது. சமீபத்தில் தமிழக அரசு MBC பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% சதவீதம் என்றும், சீர்மரபினருக்கு 7.5% என்றும், இதர மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 2.5% என்றும் சட்டத்தினைக் கொண்டுவந்தது.
தமிழ்நாட்டின் மாநில இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான(EWS) இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்கம்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான (EWS) 10% இடஒதுக்கீடு சேர்க்கப்பட்ட பிறகு மேற்கு வங்கத்தில் 55% இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது.
கேரளா
கேரளாவில் வேலைவாய்ப்பில் 60% சதவீதமும், கல்வியில் 50% சதவீதமும் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
குஜராத்
குஜராத்தில் EWS சேர்க்கப்பட்ட பிறகு 59% இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது.
பஞ்சாப்
பஞ்சாபில் EWS சேர்க்கப்பட்ட பிறகு 60% நடைமுறையில் இருக்கிறது.
ஹரியானா
EWS சேர்க்கப்பட்ட பிறகு 60% நடைமுறையில் இருக்கிறது.
ஆந்திரா
ஆந்திராவில் கபூ சமூக மக்களுக்கு 5% சதவீத தனி ஒதுக்கீடு வழங்கி இடஒதுக்கீட்டின் அளவை 55% சதவீதமாக உயர்த்த ஆந்திர அரசு முடிவெடுத்திருந்தது. அதுவும் நிலுவையில் உள்ளது.
தெலுங்கானா
தெலுங்கானாவில் 50% நடைமுறையில் இருக்கிறது. பழங்குடிகள் மற்றும் இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்கிட மாநில அரசு முயன்று வருகிறது.
ராஜஸ்தான்
EWS 10%, MBC பிரிவினருக்கு 5% வழங்க முடிவெடுக்கப்பட்டு 64% என்ற அளவில் இருக்கிறது. ஆனால் MBC பிரிவினருக்கு 5% வழங்கிடும் முடிவு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
மத்தியப்பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தில் இடஒதுக்கீட்டின் அளவை 73% சதவீதமாக உயர்த்திடும் அரசின் முடிவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.
மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வேறுபட்டு நிற்பது
மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் EWS 10% இடஒதுக்கீடு சேர்க்கப்படாமலேயே 50% க்கும் அதிகமான இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
50% எல்லை என்பதிலிருந்து விலக்கு பெறும் வகையில் தமிழ்நாட்டில் 1994-ம் ஆண்டு அன்றைய ஜெயலலிதா தலைமையிலான அரசினால் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் அச்சட்டத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக சட்டப் பாதுகாப்பு வழங்கிடும் வகையில் மத்திய அரசின் ஒப்புதலுடன் அரசியல் சாசனத்தின் அட்டவணை 9-ல் சேர்க்கப்பட்டது.
தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டினை எதிர்த்த வழக்கு
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கினை மகாராஷ்டிராவின் மராத்தா இடஒதுக்கீடு வழக்குடன் இணைந்து விசாரிக்க வேண்டும் என்று இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் கோரியிருந்தனர். அதற்கு பதில் அளித்த தமிழக அரசு, ”மகாராஷ்டிரா மராத்தா இடஒதுக்கீட்டிற்கு குடியரசுத் தலைவர் அனுமதி பெறப்படவில்லை. ஆனால் தமிழக இடஒதுக்கீட்டில் குடியரசுத் தலைவர் அனுமதி பெறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா வழக்கிற்கும், தமிழ்நாட்டின் வழக்கிற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. எனவே இந்த வழக்கினை மகாராஷ்டிரா வழக்கோடு சேர்த்து விசாரிக்கக் கூடாது” என்று தெரிவித்திருந்தது.
சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாற்றம் செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும், மத்திய அரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் இருப்பதாகவும், மத்திய அரசு பட்டியலை புதிதாக வெளியிட வேண்டும் என்றும் மகாராஷ்டிரா வழக்கில் வெளிவந்துள்ள தீர்ப்பு அடுத்ததாக தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டையும் பறிக்கும் இடத்தை நோக்கி நகருமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
திமுக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – வைகோ
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்தவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், ”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக் கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குவதுடன் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்து இருக்கின்றது பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டு உரிமை மற்றும் மாநில அரசுகளின் உரிமையைப் பாதுகாக்கின்ற வகையில் இந்த தீர்ப்பை கூடுதல் நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்குக் கொண்டுவர, சமூக நீதியின் தாயகமாம் தமிழ்நாட்டில் பொறுப்பேற்கின்ற திமுக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
69% இடஒதுக்கீட்டை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்
தமிழக அரசு உடனடியாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று 69 சதவீத இடஒதுக்கீடு காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் புதிதாக அளிக்கப்பட்டுள்ள சட்ட விளக்கம், இந்தியாவின் பன்முகத்தன்மையால் வெவ்வேறு விதமாக செயல்படுத்தப்படும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் ஆன்மாவை சிதைத்து விடும் என்ற அச்சம் எழுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.