கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அதிகபட்சமாக 50% சதவீதம் வரைதான் வழங்க முடியும் என்பதை எதிர்த்து, அதனை அதிகப்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்துள்ளது. இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் செல்வதென அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட பிறகு இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நோட்டீசும் கர்நாடகாவின் பதிலும்
1992-ம் ஆண்டு இந்திரா சாஹ்னி வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமா என்று உச்சநீதிமன்றம் அனுப்பிய கேள்விக்கு, இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற அளவினைத் தீர்மானிப்பது மாநில அரசின் தனி அதிகாரமாக இருக்க வேண்டும் என்று கர்நாடகா கூறியுள்ளது.
ஏன் இந்த திடீர் முடிவு?
கடந்த மாதம் பெங்களூரில் பஞ்சமசாலி சமூகத்தினர் மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்தினர். பஞ்சமசாலி என்பது லிங்காயத் சமூகத்தின் ஒரு பிரிவாகும். பஞ்சமசாலி பிரிவினருக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தங்களுக்கு 15% இடஒதுக்கீடு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த பேரணி நடந்தது.

பஞ்சமசாலி பிரிவு என்பது என்ன?
பஞ்சமசாலி என்பதுதான் லிங்காயத் சமூகத்தின் மிகப்பெரிய பிரிவாகும். மொத்தம் 6.25 கோடி மக்கள் தொகை உள்ள கர்நாடகாவில் 17-18 சதவீதம் வரை லிங்காயத் சமூகத்தினர் இருக்கிறார்கள். பெரும் பகுதியினர் கர்நாடகாவின் வடக்கு பிராந்தியத்திலேயே வாழ்கிறார்கள். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 100 தொகுதிகளில் லிங்காயத்துகள் செல்வாக்கு மிக்கவர்களாய் இருக்கிறார்கள்.
லிங்காயத் சமூகத்தில் 70% மக்கள் தொகையை பஞ்சமசாலி பிரிவினர் கொண்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் விவசாய வேலைகள் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். லிங்காயத்தின் மற்ற பிரிவினர் சற்று செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவே லிங்காயத் சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும், அதில் வீர சைவ பிரிவினைச் சேர்ந்தவர். எடியூரப்பா தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பஞ்சமசாலி பிரிவினரின் ஆதரவு முக்கியம் என்பதால் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கூடிக் கொண்டே இருந்தது.
அந்த கட்டாயத்தின் பின்னணியில் இருந்துதான் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் பதியப்பட்டிருக்கிறது.
கர்நாடகாவின் கோரிக்கை
நீதிபதி நக்மோகன் தாஸ் கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கர்நாடகாவின் இட ஒதுக்கீட்டினை 56% சதவீதத்திற்கு மேல் உயர்த்துவதற்கு கோருகிறது.
10% EWS பொருளாதார இட ஒதுக்கீட்டினைத் தவிர்த்து கர்நாடகவில் 7 பிரிவுகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. OBC-ல் 5 பிரிவுகளும், SC மற்று ST -ல் ஒரு பிரிவும் உள்ளடங்கும்.
இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தக் கோரும் மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களை ஆதரித்து கர்நாடகாவும் உச்சநீதிமன்றத்தில் நிற்கிறது. 1992-ம் ஆண்டு தீர்ப்பான 50%வரைதான் அதிகபட்சம் இட ஒதுக்கீட்டினை வழங்க முடியும் எனும் எல்லையை அது மறுஆய்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
மராத்தா பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மகாராஷ்டிரா அரசின் முடிவினை வரவேற்பதாகவும், இடஒதுக்கீட்டின் எல்லையை வரையறுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே விடப்பட வேண்டும் என்று கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.