செயற்கைக்கோளை ஏவும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் செயற்கைக்கோளை ஏவுதலின் பகுதியாக ஒவ்வொரு கட்டத்திற்கும் அதன் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பப்பட்ட பகுதி அல்லது அதன் பயன்பாடு முடிந்த பகுதி ராக்கெட்டின் முதன்மை பகுதியிலிருந்து பிரிக்கப்படும். இவை பெரும்பாலும் கணிக்கப்பட்ட இடத்திலோ அல்லது ஆளில்லாத கடலிலோ விழும்படி ஏவப்படும். விண்வெளியை அடைந்தவுடன் செயற்கைக்கோள் தனியாக பிரிந்துசென்றுவிடும். அதன்பின் ராக்கெட்டின் மீதமிருக்கும் பகுதி விண்வெளியிலேயே சுற்றிக் கொண்டிருக்கும். இதை விண்வெளிக் குப்பை (Space Junk) என்று கூறப்படும். இவை பூமியின் வளிமண்டலத்தில் நுழையாதவாறு முன்கூட்டியே அதன் விண்வெளிப்பாதை தீர்மானிக்கப்படும்.
சீனா விண்வெளியில் கட்டும் விண்வெளி நிலையம்
விண்வெளியில் தனக்கான ஒரு புதிய விண்வெளி நிலையத்தைக் கட்டும் முயற்சியை சீனா தொடங்கியிருக்கிறது. தியான்ஹே விண்வெளி நிலையம் (Tianhe space station) என்று பெயரிடப்பட்ட அந்த நிலையத்தின் கட்டுமானத்தின் முதல் பகுதியாகக் கடந்த ஏப்ரல் 29, 2021-ம் தேதி சீனாவின் ஹைனான் மாகாணத்தில் (Hainan Province) வென்ச்சாங் (Wenchang) ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 5பி (Long March 5B) எனும் ராக்கெட் ஏவப்பட்டது. வென்சாங்கில் ஏவிய பின்னர் அது விண்வெளி மையத்தை அடைந்து அங்கு விண்வெளி மையத்திற்கான ஒரு பகுதியை பிரித்துவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பும் என்று சீனா தெரிவித்தது.
20 டன் எடை கொண்ட ராக்கெட்
20 டன் எடை கொண்ட சீன ராக்கெட் லாங் மார்ச் -5 பி சமீபத்தில் நாட்டின் புதிய விண்வெளி நிலையத்திற்கான முதல் தொகுதியை சுற்றுப்பாதையில் ஏவியது. அதன் மையப்பகுதி பிரிக்கப்பட்ட பிறகு மீதமுள்ள ராக்கெட் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வளிமண்டல பாதையைப் பின்பற்றி அது கடலுக்குள் விழுந்திருக்க வேண்டும்.

எங்கு தரையிறங்கும் என தெளிவாக அறிய முடியவில்லை
ஆனால் இப்போது அது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒருமுறை சுமார் 17,324 மைல் வேகத்தில் பூமியை சுற்றி வருவதால் அது எங்கு தரையிறங்கும் என்று தெளிவாக அறிய முடியவில்லை. அது வளிமண்டலத்தின் வழியாக உயர்ந்தும், தாழ்ந்தும் மெதுவாக அதன் உயரத்தைக் குறைத்து வருகிறது. அதன் மிக அதிகமான வேகத்தினால் அதன் தரையிறங்கும் இடத்தை கணிக்க முடியவில்லை. ஆனால் ஒரு அபாயமாக நிலத்திலும் மோதக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மே 8-ம் தேதி வளிமண்டலத்தில் நுழையக் கூடும்
இப்போது அமெரிக்க விண்வெளி கட்டளை நிலையம் (U.S. Space Command) விண்வெளியில் சீனாவின் லாங் மார்ச் 5 பி இருப்பிடத்தைக் கண்காணிக்கிறது. பூமியின் வளிமண்டலத்தில் சீன ராக்கெட் எங்கு, எப்போது உள்நுழைகிறது என்பதை இப்போதே கண்டறிய முடியாது என்று தெரிவித்திருக்கிறது. பூமியின் வளிமண்டலத்தில் 2021, மே 8-ம் தேதி அன்று நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து ( 04/04/2021) விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் 27,000 க்கும் மேற்பட்ட மனிதனால் ஏவப்பட்ட பொருட்களைக் கண்காணிக்கும் அமெரிக்காவின் 18-வது விண்வெளி கட்டுப்பாட்டுப் படை (8th Space Control Squadron) சீன ராக்கெட்டின் இருப்பிடம் குறித்த தினசரி தகவல்களை வழங்குகிறது. பல நாடுகளின் விண்வெளி நிறுவனங்களும் அதன் இயக்கத்தை தொடர்ந்து கண்காணிக்கின்றன.
எங்கு விழும்?
சீன ராக்கெட் எங்கு தரையில் மோதும் என்று பல யூகங்கள் இருந்தபோதிலும், புவியின் வான்வெளியில் நுழைந்தவுடன் அது வேகத்தினாலும், உராய்வினாலும் சிதறக்கூடும். அப்போது அதன் குப்பைகள் எங்கு விழும் என்பது யாருக்கும் தெரியாது. அதன் சிதறிய பாகங்கள் அமெரிக்கா, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலத்தில் விழும் வாய்ப்பைக் கொண்டுள்ளது.

குறிப்பிடப்பட்ட பகுதியில் பெரும்பகுதி 70% சதவிகிதத்திற்கும் மேலாக கடலாக இருப்பதால் அதில் இந்த ராக்கெட்டின் சிதறிய பாகங்கள் விழக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. இருப்பினும், கட்டுப்பாடில்லாமல் மீண்டும் நுழையும் மிகப்பெரிய விண்கலங்களில் ஒன்றாக இருப்பதாலும் அதன் சிதறும் பாகங்கள் ஏராளமாக இருக்கக்கூடிய ஆபத்து இருப்பதாலும் மக்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதியிலும் விழக்கூடிய ஆபத்துகளும் இருக்கின்றன. ஆனால் இதற்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கின்றது. ஏனெனில் புவியின் வளிமண்டலத்தில் உள்நுழையும்போது அதன் உராய்வு வேகத்தில் அதன் பாகங்கள் எரிந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

இந்த ராக்கெட்டின் கட்டுப்பாடற்ற பாகத்திற்கு 2021-035 பி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் சுமார் 99 அடி நீளமும், 16 அடி அகலமும் கொண்டது, தற்போது விண்வெளியில் வினாடிக்கு 4 மைல்களுக்கு மேல் மிகவேகமாக பயணிக்கிறது. இந்த சீன ராக்கெட் ஏன் கட்டுப்பாடில்லாமல் இறங்குகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பொதுவாக அமெரிக்க ராக்கெட்டுகள் (மற்றும் பெரும்பாலானவை) தெற்கு பசிபிக் கடலில் மீது தரையிறங்குமாறு அதன் விண்வெளிப்பதைகளும், இயங்கு கட்டளைகளும் முன்கூட்டியே திட்டமிடப்படுகின்றன.
1990-ம் ஆண்டிலிருந்து 10 டன் எடைக்கு மேலான பொருட்கள் எதுவும் மீண்டும் புவிக்கு திரும்புவதற்காக விண்வெளி சுற்றுப்பாதையில் விடப்படவில்லை என்று விண்வெளிப் பயண பார்வையாளர் ஜொனாதன் மெக்டொவல் (Jonathan McDowell) கூறியிருக்கிறார். இப்போது லாங் மார்ச் 5 பி ராக்கெட்டின் மைய நிலையில் அதன் உந்துசக்தி முற்றிலும் செயலிழந்திருக்கிறது. மேலும் அதன் நான்கு பக்கங்களிலிருக்கும் பூஸ்டர்களை சேர்க்காமல் அது 21 மெட்ரிக் டன் எடையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சீன விண்கலங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள்
தொடர்ச்சியாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (China National Space Administration) கடந்த காலங்களில் அதன் விண்கலங்கள் பூமியில் மீண்டும் உள்நுழைவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கின்றன. கடந்த 2018-ம் ஆண்டில், சீனாவின் செயலிழந்த விண்வெளி நிலையமான தியாங்காங்-1 (Tiangong-1) அதன் கட்டுப்பாட்டை இழந்தது பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கியது. கடந்த ஆண்டு 2020, மே மாதம் முன்பு ஏவப்பட்ட லாங் மார்ச் -5 பி ராக்கெட் வளிமண்டலத்தில் நுழைந்து இறுதியில் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரைக்கு அருகே தரையிறங்கியது.
பிப்ரவரி 2003-ல் இதேபோன்று கொலம்பியா (Shuttle Columbia) என்ற விண்கலம் மக்கள்தொகை கொண்ட பகுதியில் விழுந்த நிகழ்வும் நடந்திருக்கிறது. டெக்சாஸில் 99 டன் எடையுள்ள அந்த விண்கலம் வளிமண்டலத்தில் நுழைந்து உடைந்தபோது கணிசமான அளவு அதன் சிதறிய பாகங்கள் நிலத்தில் விழுந்தன. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
இதேபோல், 1978-ம் ஆண்டு ஸ்கைலேப் (Skylab) என்ற விண்கலம் விழுந்தபோது அதன் சிதறிய பாகங்கள் மேற்கு ஆஸ்திரேலியா மீது விழுந்தன. இதிலும் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
– அருண்குமார் தங்கராஜ், Madras Review