இன்று வாரிசு அரசியல் குறித்து தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் பாஜக பேசுகிறது. பிறப்பின் அடிப்படையில் வாரிசு என்பதாலேயே ஒருவருக்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கிறார்கள் என்பதுதான் பாஜக-வின் குற்றச்சாட்டு. வாரிசு அரசியல் கூடாதுதான். ஆனால் அதன் வேர் எங்கு இருக்கிறது என்பதைப் பார்ப்பது முக்கியம்.
இந்தியத் துணைக் கண்ட சமூக, அரசியல் வரலாற்றில் பிறப்பின் அடிப்படையிலான முன்னுரிமைகளை வழங்குவது, 2000 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் வர்ணாசிரம சனாதனக் கோட்பாடுதான். பிரம்மனின் தலையில் பிறந்தவன் பார்ப்பனன் என்றும், தோளில் பிறந்தவன் சத்ரியன் என்றும், தொடையில் பிறந்தவன் வைசியன் என்றும், காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும் கூறும் சனாதன தர்மம்தான் பிறப்பின் அடிப்படையில் தொழில்களை, அரசுரிமையை வழங்கும் வாரிசு அரசியலின் அடிப்படையாக இருக்கிறது.
வம்சாவளி அதிகாரத்தை தக்கவைக்கவே ஆர்.எஸ்.எஸ்
பாரதிய ஜனதா உள்ளிட்ட சங்க பரிவாரத்தின் தாய் அமைப்பாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் இதே வாரிசு அடிப்படையிலான தலைமைகளையே கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் உருவாவதற்கு முன்பிருந்தே பேஷ்வா பார்ப்பனர்கள் தங்கள் அதிகாரத்தை தக்கவைக்கவும், பிரிட்டிஷ் காலத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருந்து அதிகாரத்தை தக்கவைக்கவும், பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு சனாதனத்தை நேரடியாக நிலைநிறுத்தவும் உருவாக்கப்பட்டதாகத்தான் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது.
பார்ப்பன ராஷ்டிரமும், இந்து ராஷ்டிரமும்
ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான ராஜ்நாராயணன் 1979-ம் ஆண்டு 25-ம் தேதியிட்ட ‘சண்டே’ ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
“கடந்த நாற்பது ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நான் மிகவும் துல்லியமாக கவனித்து வருகிறேன். 1840-ம் ஆண்டில் இவர்கள் காந்தியைத் தாக்கினார்கள். 1942-ஆகஸ்ட் 9-ம் தேதிக்குப் பிறகு காங்கிரஸ்காரர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள்; தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்களின் உளவாளிகளாகவே அவர்கள் செயல்பட்டார்கள். அவர்களுக்கு ஒரு கொள்கை உண்டு. பிரிட்டிஷ்காரர்கள் பேஷ்வா பிராமணர்களிடமிருந்துதான் ஆட்சியைப் பிடித்தனர்; எனவே பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, ஆட்சி மீண்டும் பேஷ்வா பிராமணர்களிடமே திருப்பி வரவேண்டும் என்பது அவர்களின் கொள்கை. ஆனால், பேஷ்வா பிராமணர்களின் ராஜ்யம் என்று சொன்னால் மக்கள் ஆதரவைப் பெறமுடியாது. எனவேதான் அவர்கள் ஏற்கனவே ஒலித்து வந்த கோஷங்களை மாற்றிக் கொண்டு – பார்ப்பன ராஷ்டிரம் என்பதற்கு பதிலாக இந்து ராஷ்டிரம் என்று சொல்ல ஆரம்பித்தனர்.” என்று கூறியிருப்பார்.
அந்த பேஷ்வா பிராமணப் பிரிவான சித்பவன் பார்ப்பனர்களே ஆர்.எஸ்.எஸ் தலைவர்களாக இருந்து வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துவக்க கால தலைவர்களான ஹெட்கேவர், பேராசிரியர் ராஜேந்திர சிங், காந்தி கொலை வழக்கின் மூலதாரியாக குற்றம்சாட்டப்பட்ட சாவர்க்கர், அடுத்த தலைவர் கோல்வாக்கர், அவருக்குப் பின் தலைவராக வந்த தேவரஸ் முதல் இன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத் வரை அனைவருமே சித்பவன் பார்ப்பனர்கள் தான். இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மிகச்சிறிய குழுவான இந்த சித்பவன் பார்ப்பனர்கள் மட்டுமே ஆர்.எஸ்.எஸ் தலைவராக முடியும் என்ற நிலை இருப்பது சனாதனம் கொடுக்கும் பிறப்பு அடிப்படையிலான வாரிசு அரசியல் அல்லாமல் வேறு என்ன?
சிந்தியா குடும்பத்தின் அரசியல்
வசுந்திரா ராஜே சிந்தியாவின் குடும்பத்தின் வாரிசு அரசியலைப் பேசுவார்களா? குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. ஜன சங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரது மகள் தான் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, சிந்தியா இவரது இன்னொரு மகள் யசோதா ராஜ் சிந்தியா மத்திய பிரதேசத்தின் பாஜக தலைமையிலான அரசில் அமைச்சராக இருக்கிறார். வசுந்த்ராவின் மகன் துஷ்யந்த் சிங் பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினர். இந்த குடும்பத்தின் இன்னொரு வாரிசான ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியாவிற்கு காங்கிரசில் மத்தியப் பிரதேச முதல்வர் பதவி கொடுக்கவில்லை என்று பாஜக-விற்கு வந்தபோது வாரி அணைத்துக் கொண்டது பாஜக. இவையெல்லாம் வாரிசு அரசியல் வரையறைக்குள் வராதா?
தமிழ்நட்டில் வாரிசு அரசியலை எதிர்த்து பேசுவதாக சொல்பவர்கள், தன் கட்சிகுள்ளேயே சிந்தியா குடும்பத்து வாரிசுகளை சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறார்கள். ஏனென்றால் சிந்தியா குடும்பம் சனாதான தர்மத்தின்படி மன்னர் குடும்பம் வாழையடி வாழையாக பிறப்பின் அடிப்படையில் அதிகாரத்திற்கு வரவைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-சின் கொள்கையாகும்.
உயர்சாதித் தலைவர்களின் கட்சியாகவே பாஜக
இந்துக்களுக்கான கட்சி என சொல்லிக்கொள்ளும் பாஜகவில் உள்ள 1000 தலைவர்களின் விவரத்தை தனியார் செய்தி நிறுவனம் 2018-ம் ஆண்டு ஆய்வு செய்தது. அதில் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாகவும், பனியாகளாகவுமே உள்ளது தெரியவந்துள்ளது. இது ஈராயிரம் ஆண்டுகளாக வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் கொண்டுவரும் வாரிசு அரசியல் அல்லாமல் வேறு என்ன?
மேலும் அந்த விரிவான ஆய்வில் அதிகாரப் படிநிலையானது மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை உயர்சாதிக்காரர்களாகவும் கீழ்மட்டத்தில் சிறிதளவில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளனர் எனவும், அதுவும் ஓட்டுவங்கி அரசியலுக்காக மட்டுமே அச்சிறிய அளவிலான தலைவர்களாக நியமித்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
பாஜகவின் 50 தேசிய அலுவலர்களில்,
- 17 பேர் பிராமணர்கள்,
- 21 பேர் சத்ரிய மற்றும் பனியா சாதியைச் சேர்ந்தவர்கள்,
- 4 பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்,
- 3 பேர் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள்,
- இருவர் பழங்குடியினர்,
- இருவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்,
- ஒருவர் சீக்கியர்.
பிற்படுத்தப்பட்டவர்களில் இருந்து இந்த நான்கு பேர், 3 பேர் எல்லாம் மண்டல் கமிசனுக்குப் பிறகும், அம்பேத்கர் நூற்றாண்டு விழாவிற்குப் பிறகும் ஏற்பட்ட அரசியல் அழுத்தத்திற்கு பிறகு வந்ததாகும்.
பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனக் கட்டமைப்பு என்பதே பார்ப்பனர்களுக்கும், பனியாக்களுக்கும் அரசியல், சமூக மற்றும் வணிகங்களைக் கொடுப்பதற்கே உருவான கட்சியாக இருப்பதையே இம்முடிவுகள் காட்டுகின்றன. 40 ஆண்டுகளாக இயங்கும் இந்த கட்சியின் அனைத்து அதிகாரங்களும் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்களிடமும், பனியாக்களிடமுமே இருப்பது வாரிசு அரசியல் அல்லாமல் வேறென்ன?
பாஜகவின் வாரிசுகள் பெற்ற பதவிகள்
- அத்மிஷாவின் மகன் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிசிசி தலைவராவது வாரிசு அரசியல் இல்லையா?
- பாஜகவின் அமைச்சரவையில் உள்ள பியூஷ் கோயல், வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்ற வேத் பிரகாஷ் கோயலின் மகன் ஆவார்.
- மேனகா காந்தி, வருன் காந்தியும் கூட பாராளுமன்றத்திற்கு வாரிசுகளாக இருந்ததாலேயே பாஜக அனுப்பியது.
- கோவாவில் வாரிசு அரசியலைத் துவக்கி வைத்ததே பாஜகதான். அம்மாநில முன்னாள் முதல்வர் பிரதாப்சின்ஹ் ரானேவின் மகன் விஷ்வஜித் ரானே அமைச்சராக உள்ளார்.
- மகாராஷ்டிரா பாஜக சார்பாக முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்நாவிஸ் அம்மாநில மேலவை உறுப்பினராக இருந்த கங்காதர்பந்த் ஃபட்நாவிஸ்-இன் மகன் ஆவார். அது மட்டுமின்றி அவருடைய சகோதரி ஷோபா ஃபட்நாவிஸ் மகாராஷ்டிரா அமைச்சராக இருந்துள்ளார்.
- முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகளான பூனம் மகாஜன் மும்பை மத்திய வடக்கு தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஆவார்.
- உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மகன் ராஜ்வீர் எடா தொகுதியில் மக்களவை உறுப்பினரானது வாரிசு என்பதால் தானே!
- மோடி அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் பாஜக உத்திரப் பிரதேசப் பிரிவில் பொதுச்செயலாளராக உள்ளார்.
- முன்னாள் வெளியுறவுத் துறை அமைசரான சுஷ்மா ஸ்வராஜ்-ன் கணவர் ஸ்வராஜ் கௌஷல் மிசோரம் மாநில ஆளுநராக 1990 முதல் 1993 வரை பதவி வகித்துள்ளார்.
இவர்கள் பெரும்பான்மையாக இந்தியத் துணைக்கண்டத்தின் அதிகார வர்க்கமான வர்ணாஸ்ரமம் சொல்லும் படிநிலையில் மேல் அடுக்கில் வரும் பார்ப்பன சத்ரிய பனியா சாதிகளைச் சேர்ந்தவார்கள். இவர்கள் பிறப்பின் அடிப்படையில் முன்னுரிமை பெறுவது பாஜகவில் நடக்கிறது.
தமிழ்நாட்டில் கூட எந்தவித மக்கள் ஆதரவும் இல்லை என்றாலும் தேர்தலில் பங்கெடுக்காவிட்டாலும் பெரும் நிலவுடைமையாளரான மூப்பனாரின் மகனை தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்களவைக்கு அழைத்துச் செல்கிறது பாஜக. அந்த ஜி.கே.வாசனை மேடையில் வைத்துக் கொண்டே பாஜக வாரிசு அரசியல் குறித்து பாடம் எடுப்பதுதான் நகைமுரணாகும்.
வர்ணாசிரம எதிர்ப்பே வாரிசு அரசியல் எதிர்ப்பு; செய்யுமா பாஜக?
2000 வருடமாக பிறப்பின் அடிப்படையிலான உயர்சாதித் தலைமையை நிலைநிறுத்த முயலும் வர்ணாசிரமமே வாரிசு அரசியலின் பிறப்பிடம். அதனை எதிர்க்காமல் வாரிசு அரசியலை எதிர்ப்பதாக சொல்வது கைப்புண்ணாடி கண்ணாடி போடும் வேலையே. பிறப்பின் அடைப்படையில் கொடுக்கப்படும் முன்னுரிமைகளை உணமையிலேயே எதிர்ப்பவர்கள் சனாதனத்தை எதிர்க்க வேண்டும். ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசியல் பதவிகள் உட்பட அனைத்திலும் 100% சமுகநீதி இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ் செய்யுமா?