தேர்தலை முன்னிட்டு பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளிவந்திருக்கின்றன. பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொகுத்து சென்னையின் தொகுதிகள் யாருக்கு செல்லும் என்பதைப் பார்க்கலாம். குமுதம் ரிப்போர்டர், ஜூனியர் விகடன், சத்தியம் தொலைக்காட்சி மற்றும் தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
1. துறைமுகம்
திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபு மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். அமமுக சார்பில் சந்தானகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கிச்சா ரமேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
ஆரம்பம் முதலே துறைமுகம் தொகுதி திமுக-வின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. 1977, 1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் தி.மு.க. வேட்பாளர் ஏ.செல்வராஜன் மூன்று முறை தொடர் வெற்றி பெற்றார். 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் கருணாநிதி தொடர் வெற்றி பெற்றார். அதன்பிறகு, 1996, 2001, 2006-ம் ஆண்டுகளில் க.அன்பழகன் வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு மட்டுமே இங்கு திமுக தோல்வியைத் தழுவியது. தற்போது திமுக சார்பாக போட்டியிடும் பி.கே.சேகர்பாபு கடந்த 2016-ம் ஆண்டும் வெற்றி பெற்றார்.
ஜூனியர் விகடன்: திமுக வெற்றி. திமுக வேட்பாளார் சேகர் பாபு 98 மதிப்பெண்களும், பாஜக வேட்பாளர் 86 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இங்கு அமமுக 4 மதிப்பெண்களும், ம.நீ.ம 6 மதிப்பெண்களும் பெற்றுள்ளது.
சத்தியம் தொலைக்காட்சி: திமுக வெற்றி பெறும்.
குமுதம் ரிப்போர்டர்: திமுக வெற்றி பெறும். பாஜக வேட்பாளர் வட இந்தியர்களை மட்டுமே மனதில் நம்பியிருப்பதாகவும், திமுக வேட்பாளர் தொகுதி முழுவதுமே நன்கு அறியப்பட்டவர் என்பதால் அவர் எளிதில் வெற்றி பெறுவார் என்று கூறியுள்ளது.
2. ஆர்.கே.நகர்
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இரண்டு முறை வெற்றி பெற்ற தொகுதி இது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற தொகுதியாகும்.
அதிமுக சார்பில் ராஜேஷ், திமுக சார்பில் ஜே.ஜே.எபினேசரும் போட்டியிடுகின்றனர். மக்கள் நீதி மையம் சார்பாக பாசில், அமமுக சார்பாக டாக்டர் காளிதாஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
அதிமுக ஆறு முறை வெற்றி பெற்றுள்ள இந்த தொகுதியில் இந்த முறையும் அதிமுகவே வெற்றி பெறும் என்று பெரும்பான்மை கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜூனியர் விகடன்: அதிமுக வெற்றி பெறும். அதிமுக வேட்பாளர் ராஜேஷ் 200-க்கு 93 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் எபினேசர் 86 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அமமுக இங்கு 8 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. கமலின் மக்கள் நீதி மய்யம் 7 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி இங்கு 200க்கு 6 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
சத்தியம் தொலைகாட்சி: அதிமுக வெற்றி பெறும்.
குமுதம் ரிப்போர்ட்டர்: அதிமுக வெற்றி பெறும். இத்தொகுதி எம்.எல்.ஏவான டிடிவி தினகரன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி இருப்பதால், அமமுக எதிர்ப்பு மனநிலையே அதிமுகவை வெற்றி பெறச் செய்யும் என்று கூறுகின்றது.
3. திருவிக நகர்
சென்னையில் பெரம்பூர் அருகே உள்ள தொகுதிதான் திரு.வி.க.நகர். இந்த தொகுதி 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். பெரம்பூர் தொகுதியில் இருந்து சில இடங்களும், புரசைவாக்கம் தொகுதியில் இருந்து சில இடங்களும், எழும்பூர் தொகுதியில் இருந்து சில பகுதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட தொகுதி.
திமுக சார்பில் போட்டியிட்டு கடந்த முறை எம்.எல்.ஏ-வான தாயகம் கவி மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தமாகா சார்பாக கல்யாணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதுதவிர தேமுதிக சார்பில் சேகரும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஓபேத் என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் இளவஞ்சியும் போட்டியிடுகிறார்கள்.
இந்த தொகுதியில் மீண்டும் இரண்டாவது முறையாக தாயகம் கவி வெற்றி பெறுவார் என்றே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜூனியர் விகடன்: திமுக வெற்றி பெறும். அதிமுக-வினர் த.மா.க வேட்பாளருக்கு ஒத்துழைக்கவில்லை என்பதும், தொகுதியில் தாயகம் கவி நலத்திட்டங்களை நிறைவேற்றியிருப்பதும் திமுகவிற்கு சாதகம் என்றும், தொகுதிக்குள் அவருக்கு நல்ல பெயர் இருப்பதும் அவரை வெற்றி பெறச் செய்யும் என்றும் கூறியுள்ளது. தாயகம் கவி 200-க்கு 94 மதிப்பெண்களும், த.மா.க வேட்பாளர் 82 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். முரசு சின்னத்தில் போட்டியிடும் தேமுதிக 5 மதிப்பெண்களும், ம.நீ.ம 12 மதிப்பெண்களும், நாம் தமிழர் 7 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
சத்தியம் தொலைக்காட்சி: திமுக வெற்றி பெறும்.
குமுதம் ரிப்போர்ட்டர்: திமுக வெற்றி பெறும். இங்கு தேமுதிக, ம.நீ.ம, நாம் தமிழர் ஆகியவை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும், தாயகம் கவி-க்கு த.மா.க உள்ளிட்ட அனைவரையும் விட ஜெட் வேகத்தில் முன்னேறுகிறார் என்றும் கூறியுள்ளது.
4. எழும்பூர்
இங்கு திமுகவில் வழக்கறிஞர் பரந்தாமனும், அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியனும் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் சார்பாக கீதாலெட்சுமியும், தேமுதிக சார்பாக அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பிரபுவும், மக்கள் நீதி மய்யம் சார்பாக பிரியதர்சினியும் போட்டியிடுகிறார்கள்
அனைத்து கருத்துக்கணிப்புகளும் இந்த தொகுதியில் திமுக வெற்றி பெறும் என்ற ஒத்த கருத்தை வைத்துள்ளன.
தந்தி டிவி: திமுக வெற்றி பெறும். திமுக கூட்டணி 45-51%, அதிமுக கூட்டணி 39-45%, அமமுக கூட்டணி 1-4%, நாம் தமிழர் 3-6%, மநீம 5-8%.
ஜூனியர் விகடன்: திமுக வெற்றி பெறும். திமுக பரந்தாமன் 95 மதிப்பெண், அதிமுக ஜான் பாண்டியன் 84, தேமுதிக 4, ம.நீ.ம 10, நாம் தமிழர் 7.
சத்தியம் தொலைக்காட்சி: திமுக வெற்றி பெறும்.
குமுதம் ரிப்போர்ட்டர்: திமுக வெற்றி பெறும்.
5. திருவொற்றியூர்
திமுக சார்பில் கே.பி.சங்கரும், அதிமுக சார்பில் கே.குப்பனும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும், அமமுக சார்பாக சவுந்திரபாண்டியனும், ம.நீ.ம சார்பாக மோகனும் போட்டியிடுகிறார்கள்.
இத்தொகுதியைப் பொறுத்தவரை ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளன.
தந்தி டிவி: திமுக கூட்டணி 37-43%, அதிமுக கூட்டணி 35-41 %, அமமுக கூட்டணி 3-4%, நாம் தமிழர் 9-15%, மநீம 6-9%. போட்டி கடுமையாக இருக்கிறது.
ஜூனியர் விகடன்: திமுக வெற்றி பெறும். திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் 84 மதிப்பெண்களும், அதிமுக குப்பன் 71 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் சீமான் 200 க்கு 26 மதிப்பெண்களும், அமமுக 7, ம.நீ.ம 6 மதிப்பெண்களும் பெற்றுளனர்.
குமுதம் ரிப்போர்ட்டர்: அதிமுக வேட்பாளர் குப்பன் வெற்றி பெறுவார்.
சத்தியம் தொலைக்காட்சி: திமுக, அதிமுக, நாம் தமிழர் இடையே கடும் போட்டி நிலவுவதாக தெரிவித்துள்ளது.