மொழி அறியாத மனிதனின் முதல் மொழியாய் ஓவியங்கள் இருந்திருக்கின்றன. குரலற்றவர்களின் குரலாய் வரலாற்றில் ஓவியங்கள் நிலைத்திருக்கின்றன. இந்த கொரோனா பெருந்தொற்று மனிதர்களை துண்டாடியிருக்கிறது. சமூக இடைவெளி எனும் நாம் சகிக்க முடியாத ஒரு உலகத்தினை நம்மிடையே திணித்திருக்கிறது. அருகருகே வீடுகள் இருந்தும் மகிழ்ச்சியாய் குலவ முடியாத மனிதர்களாய் பெருந்தொற்று நம்மை மாற்றியிருக்கிறது. இன்று மொழி அறிந்தும், பேச முடிந்தும் ஊமைகளாய் திரியும் நம் வாழ்வு என்னவாய் இருக்கப் போகிறது என்பதை இந்த ஓவியங்கள் பேசுகின்றன.

ஓவியம்: செரில் எல்.செம்கே
கோவிட் 19-க்கு பின்பான வாழ்வின் இயல்பு மாறுதல்களை பிரதிபலிக்கிறது இந்த ஓவியம்.
அலை புரளும் கூந்தலில் பரவிக்கிடக்கும் கனவுகள் பறவைகளாக பறக்கக்கூடும். இமைப்பொழுதும் பிரியாத இயற்கை பிரியங்களின் ஊடே புகுந்துவிட்ட செயற்கை முகமூடிகளும், கையுறைகளும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் இழந்த வசந்தங்களை!கோரமான காலங்கள்! கொடூரமான இதயங்கள்!

ஓவியம்: வாசு டோலியா
மூடிய கைக்குள் இனியும் எந்த ரகசியங்களையும் காப்பாற்றிவிட இயலாது. வல்லமை கொண்ட தேசங்களின் பலங்களையே பலவீனங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது கண்ணுக்கு தெரியாத கிருமி.
அழுத்த அழுத்த மேலெழுகிறது பெரு நோயின் பேரச்சம்.

ஓவியம்: டினா டி’ஆர்கோ
இதுவரை கடந்த வாழ்விலிருந்து காலமற்ற, அர்த்தமற்ற வெற்றிட பெருவெளிக்குள் நுழைகிறது மனித குலம். அழகான நாட்களை களவு கொள்கிறது காணயியலா நுண்கிருமி. வாழ்ந்த கணங்கள் எல்லாம் உதிரும் வண்ண மலராக வீழ்கிறது. மலருக்கு மட்டுமேயான குறுகிய வாழ்வு மனிதனுக்கும் அருளப்படுகிறது. மரணத்தின் வாசனை அழகிய பட்டு துகிலென மேனியில் படரும்போது வாசனை இழக்கிறேன். வாழ்வின் ருசி இழந்து காலப்பெருவெளிக்குள் எடுத்து வைக்கிறேன் என் காலடிகளை ஒரு நடனமென.