உலக வெப்பமயமாதலின் காரணமாக பிரான்ஸ் நாட்டின் ஆல்பஸ் மலை உருகிக் கொண்டிருக்கிறது. உருக உருக, தனக்குள்ளே ஒளித்து வைத்திருந்த ஏராளமான ரகசியங்களையும் வெளிக்கொண்டு வந்துகொண்டே இருக்கிறது.
மலையில் மோண்ட் பிளாங்க் எனும் பகுதியில் பிரான்சை சேர்ந்த டிமோத்தி என்பவர் தேநீர் விடுதி ஒன்றினை நடத்திக் கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன் பனிப்பாறைகள் உருகிய இடத்தில் செய்தித்தாள்கள் கிடப்பதை அவர் கண்டார். அவற்றில் தலைப்புச் செய்தியாக ”இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமராகிறார்” என்ற செய்தி இருந்தது.
அவை 1966ம் ஆண்டின் செய்தித்தாள்களாக இருந்தன. 1966ம் ஆண்டு ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளின் செய்தித்தாள்கள். இப்படி 10க்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் அவருக்கு கிடைத்தன. தி இந்து, நேஷனல் ஹெரால்ட், தி ஸ்டேட்ஸ்மேன் மற்றும் தி எகனாமிக் டைம்ஸ் ஆகிய செய்தித்தாள்கள் அவற்றில் இருந்தன.
மும்பையிலிருந்து லண்டன் சென்று கொண்டிருந்த ‘கஞ்ஜன்ஜுங்கா’ என பெயரிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஜனவரி 24, 1966 அன்று நடுவழியிலேயே வெடித்து சிதறியது. அது மும்பையிலிருந்து புறப்பட்டு டெல்லி, பெய்ரூட், ஜெனீவா ஆகிய விமான நிலையங்களில் நின்று பின்னர் லண்டனுக்கு செல்லக்கூடிய விமானம் ஆகும்.ஜெனீவாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே, தரையிறங்கும் முன்பே அந்த விமானம் ஃப்ரெஞ்ச் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் வெடித்து சிதறியது. அதில் 177 பேர் இறந்து போனார்கள்.
ரேடாரை கண்காணிப்பவரிடம் இருந்து வந்த உத்தரவை பைலட் தவறாக புரிந்து கொண்டு விமானத்தை இயக்கியதன் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கிறது. இந்த விமானம் வெடித்ததில் பல்வேறு வெளிநாட்டு சதிகள் இருப்பதாக பலராலும் பரப்பப்பட்டது. அதற்கு காரணம் என்னவென்றால் விழுந்து சிதறிய அந்த விமானத்தில் ஹோமி பாபாவும் இருந்தார். அவரும் இறந்து போனார்.
ஹோமிபாபா அப்போது இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவராக இருந்தார். இந்தியாவின் அணுசக்தி தயாரிப்பை குலைப்பதற்காகவே இந்த விமானம் திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கப்பட்டதாக பல கதைகள் பலராலும் பேசப்பட்டன.
இன்று பலரின் கவனத்திலும் மறைந்து விட்ட அந்த சம்பவம் தற்போது கிடைத்திருக்கும் இந்த செய்தித்தாள்களின் மூலம் மீண்டும் கவனத்திற்கு வந்திருக்கிறது.
மேலும் விமானத்தின் சிதறிய பாகங்கள் சிலவும் வெளிவருகின்றன. 2013-ம் ஆண்டு கிடைத்த ஒரு பெட்டியில் விலையுயர்ந்த ரத்தினக் கற்கள் கிடைத்தன. அவை இன்றைய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடையவையாகும். 2017-ம் ஆண்டு இந்த இடத்தில் மனிதர்களின் எலும்புகள் சிலவும் கிடைத்தன. பிரச்சினை என்னவென்றால் இதே இடத்தில் 1950-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த மலபார் பிரின்சஸ் எனும் இன்னொரு விமானமும் விழுந்து நொறுங்கியது. அதனால் அவை எந்த விமானத்தில் சென்றவர்களின் அடையாளங்கள் என்பது தெரியவில்லை.




புவி வெப்பமயமாதலின் காரணமாக பனி மலைகள் உருகிக் கொண்டிருப்பதால், பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டு தீவிர பேரிடர்கள் ஒருபுறம் வந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு புறம் அழகிய ஆல்ப்ஸ் மலை தனக்குள் ஒளித்து வைத்திருந்த நாம் மறந்து போன வரலாற்றையும் வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது.