இந்த உலகம் எதனால் ஆக்கப்பட்டது என்ற கேள்விக்கான பதில் நாம் அனைவரும் அறிந்ததே.நெருப்பு,நிலம்,காற்று,நீர் மற்றும் ஆகாயம் அகிய ஐம்பூதங்களால் ஆனது. இதை தமிழர்களின் தொன்மையான நூலான தொல்காப்பியம் விவரிக்கிறது.
”நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”
– (தொல். பொருள். மரபியல் – 635)
எப்படி இந்த உலகம் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவாகியதோ அதேபோல் நம் உடலும் இந்த ஐம்பூதங்களால் ஆனதே. இதை நம் சித்தர்கள் பாடல்கள் தெளிவாக குறிப்பிடுகிறது.
“அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்”
“அண்டமும்,பிண்டமும் ஒன்றே அறிந்து தான் பார்க்கும் போது”
ஐம்பூதமும் உடல் உறுப்புகளும்
நெருப்பு
இருதயம், சிறுகுடல், இருதய மேலுறை, மூவெப்ப மண்டலம். இந்த உறுப்புகள் நெருப்பு மூலகத்தோடு தொடர்புடையவை.
இதயமானது ரத்த ஓட்டம் மூலமாக உடல் முழுவதும் தேவையான வெப்பத்தை பரவச் செய்கிறது. சிறுகுடலானது நாம் உண்ட உணவை வெப்பத்தில் மூலமாக் சிதைத்து உடலுக்கு தேவையான ஆற்றலை பெற துணை செய்கிறது.
இதே போல இருதய மேலுறையும், கண்ணுக்கு தெரியாத ஆற்றல் வடிவிலான மூவெப்ப மண்டலமும் உடல் வெப்பநிலை பராமரிப்பு வேலையை செய்கிறது.
இப்படி இருதயம் அதன் துணை உறுப்பான சிறுகுடல், இருதய மேலுறை அதன் துணை உறுப்பான மூவெப்ப மண்டலம் ஆகியவை இணைந்து வேலை செய்வதன் மூலமாக உடலுக்கு தேவையான வெப்ப ஆற்றல் கிடைக்கப் பெறுகிறது. இந்த உறுப்புகள் இயங்குவதில் குறைபாடு ஏற்படும்போது உடலில் நெருப்பு மூலகம் தொடர்பான தொந்தரவுகள் ஏற்படுகிறது.
இந்த நெருப்பு மூலகத்தின் முக்கிய பணிகள்
- உடலிற்கு தேவையான வெப்பத்தை பராமரிப்பது.
- நெருப்பின் வெளிப்புற உறுப்பான நாக்கு பராமரிப்பு.
- இதயம் சுருங்கி விரியும் இயக்கம் மூலம் இரத்த ஓட்டத்தை தீர்மானிப்பது.
- நாம் உண்ணும் உணவிலிருந்து வெப்பத்தை பிரித்தெடுப்பது.
- வெப்ப கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றுவது.
நிலம்
மண்ணீரலும் இரைப்பையும் நிலத்தோடு தொடர்புடையவை.
எப்படி நிலமானது தன்னுள் விழுந்த விதைக்கு உயிர் கொடுத்து செடியாக மரமாக வளர்க்கிறதோ, அதேபோல இரைப்பைக்குள் விழுந்த உணவை மண்ணீரலும் இரைப்பையும் இணைந்து உயிராற்றலைப் பிரித்து உடலுக்கு கொடுக்கிறது.
இந்த உறுப்புகளின் இயக்க குறைபாடு ஏற்படும்போது நிலம் மூலகம் தொடர்பான தொந்தரவுகள் ஏற்படுகிறது. என்னதான் சத்தான உணவு உட்கொண்டாலும் செரிமான ஆற்றல் குறைந்து உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. உண்ட உணவில் ஆற்றல் பிரித்தெடுக்கப்படாமல் கழிவாக மட்டுமே வெளியேறுகிறது. எனவே தான் பசித்துப் புசி என்று பசி எடுத்து உண்ணும் அவசியத்தை நம் முன்னோர்கள் உணர்த்தியுள்ளார்கள்.
இரைப்பையானது மண்ணீரல் நன்றாக இயங்கும் தன்மையோடு இருக்கும்போது உடலுக்கு ஆற்றல் தேவை ஏற்படுகிறபோது பசி மூலமாக அறிவிக்கிறது. அந்த நேரத்தில் இரைப்பையில் செரிமானத்திற்கேற்ற பொருட்கள் தயார் நிலையில் இருக்கிறது. இரைப்பைக்கு தேவையான ஆற்றலை பசியுள்ள நிலையில் மண்ணீரலானது வழங்குகிறது.
எப்படி அளவுக்கு அதிகமான ரசாயனக் கழிவுகளை மண்ணில் கொட்டும்போது நிலத்தின் தன்மை கெடுமோ, அதேபோல நாம் உண்ணும் உணவில் அதிகப்படியான செயற்கை ரசாயனங்கள் கலக்கப்படும்போது இரைப்பையின் தன்மை கெட்டு இந்த உறுப்புகள் இயங்குவதில் சீர்கேடு ஏற்படுகிறது. இதன் காரணமாக பசியற்ற நிலை, செரிமானப் பிரச்சினை அல்லது அளவுக்கு அதிகமான பசி போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.
நிலம் மூலகத்தின் முக்கியப் பணிகள்
- உணவுப்பொருட்கள் மூலமாக ஆற்றலைப் பிரித்தெடுப்பது.
- இரத்தம் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- இதன் வெளிப்புற உறுப்பு உதடு. மண்ணீரல் இரைப்பையில் பாதிப்பு ஏற்படும்போது உதடு, வாய்ப் புண்,உதடு வெடிப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படுகிறது.
- உடல் உள்ளுறுப்புகளின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.
- எச்சில் மூலமாக கழிவு வெளியேற்றம்.
- ஈறுகளை பராமரிக்கிறது.
- கவலை என்ற உணர்ச்சிக்கு தொடர்புடையது.
காற்று
நுரையீரலும் அதன் துணை உறுப்பான பெருங்குடலும் ஐம்பூதங்களில் ஒன்றான காற்றோடு தொடர்புடையவை.
இந்த இரண்டு உறுப்புகளும் இணைந்து உடலுக்கு தேவையான காற்று மூலாக தேவைப்படுகிற ஆற்றலை உடலுக்கு கொடுக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசுக்களை வடிகட்டி உள்ளே அனுப்புகிறது. அதே சமயத்தில் காற்றில் அதிகப்படியான நச்சுக்கள் இருக்கும்போது நுரையீரலால் அதை எதிர்கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு நுரையீரல் இயக்க சீர்கேடு அடைகிறது.
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் 10க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போபால் விச வாயுப் பேரழிவு தொடங்கி சமீபத்திய ஆந்திர மாநில விசவாயு வரை அரசின் அலட்சியப்போக்கு நீண்டு கொண்டே செல்கிறது. பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்காக ஸ்டெர்லைட் ஆலை, அணு உலைகள் என மக்கள் சுவாசிக்கும் சுத்த காற்றில் நச்சு கலக்க அனுமதித்தும், சுத்தமான இயற்கை காற்றை உற்பத்தி செய்யும் இயற்கை வளங்களை வளர்ச்சி, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அழிக்கிறது அரசு.
காற்று மூலகத்தின் முக்கியப் பணிகள்
- நுரையீரல் நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து ஆற்றலைப் பிரித்து உடலுக்கு கொடுக்கிறது.
- காற்றிலிருக்கும் உடலுக்கு எதிரான பொருட்களை வடிகட்டி வெளியேற்றுகிறது.
- உடலில் தேங்கியுள்ள கழிவுகளை சளி மூலமாக வெளியேற்றுகிறது.
- இதன் வெளிப்புற உறுப்பு மூக்கு.
- தோல் பராமரிப்பு – தோல் தொடர்பான தொந்தரவுகளுக்கு காற்று மூலக சீர்கேடு காரணமாக அமைகிறது.
- காற்று மூலக இயக்கக் குறைபாடு ஏற்படும்போது பெருங்குடல் இயக்கம் குறைந்து மலச்சிக்கல் ஏற்படுகிறது.
நீர் மூலகம்
சிறுநீரகமும், சிறுநீர்ப்பையும் ஐம்பூதங்களில் ஒன்றான நீரோடு தொடர்புடையவை.
இவ்விரு உறுப்புகளும் இணைந்து உடலுக்கு நீர் மூலமாக தேவைப்படுகிற ஆற்றலைக் கொடுக்கிறது. மேலும் நீர் கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. உடலின் முக்கிய சுத்திகரிப்பு வேலைகளை செய்கிறது.
நீர் மூலகத்தின் முக்கியப் பணிகள்
- உடல் கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவது.
- உடல் நீர் சமநிலை பராமரிப்பு.
- இதன் வெளிப்புற உறுப்பு காது.
- உடல் மூட்டுகளுக்கும் முதுகுத் தண்டிற்கும் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது.
- தலைமுடி, நகங்கள், எலும்புகள், பற்கள், தொண்டை, குரல் பராமரிப்பு.
- பயம் என்ற உணர்ச்சியோடு தொடர்புடையது.
ஆகாயம்
கல்லீரலும் பித்தப்பையும் ஆகாயத்தோடு தொடர்புடையவை.
அக்குபங்சர் மருத்துவ முறையில் மரம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆகாயம்/மரம் நம்மைச் சுற்றி இந்த வெளியில் உள்ள நச்சுக்களை கிரகித்து சுத்தப்படுத்தும் வேலையை செய்கிறது. காற்றில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் முக்கியப் பணியை மரம் செய்கிறது. கல்லீரல் உடலில் உருவாகும் நச்சுக் கழிவுகளை நீக்கும் முக்கியப் பணியை செய்கிறது.
ஆகாய மூலகத்தின் முக்கியப் பணிகள்
- நாம் உண்ணும் உணவு, நீர் ஆகியவற்றில் உள்ள ரசாயன நச்சுக் கழிவுகளை உடலிலிருந்து அகற்றுகிறது.
- இதன் வெளிப்புற உறுப்பு கண். கல்லீரலில் ஏற்படும் பலவீனம் கண்களில் வெளிப்படலாம்.
- உடல் தசைகளை பராமரிக்கிறது.
- உணவு செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரக்கிறது
- தேவைக்கு அதிமான குளுக்கோசை கிளைகோஜனாக மாற்றி சேமிக்கிறது. உடலின் அவசர காலக்கட்டத்தில் இந்த கிளைகோஜனை உடல் பயன்படுத்துகிறது.
- கல்லீரல், பித்தப்பை இயக்கத்தில் சீர்கேடு அடையும்போது உடல் தசைகள் பலவீனப்படுகிறது. உடலின் நச்சுகள் நீக்கப்படாமல் உடலிலேயே தேங்கி நோய்களுக்கு வழி வகுக்கிறது
ஐம்பூதங்களோடு தொடர்புடைய இந்த உறுப்புகள் சீராக இயங்கும்போது உடல் ஆரோக்கியத்தோடு இயங்க முடிகிறது. இந்த உறுப்புகளில் இயக்க குறைபாடு ஏற்படும்போது உடலில் நடக்கும் இயல்பான பணிகள் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படுகிறது.
ஏன் இந்த உறுப்புகளில் இயக்கக் குறைபாடு ஏற்படுகிறது?
மனிதன் இயற்கை விதிகளைப் பின்பற்றி வாழும்போது எந்த நோய்களும் ஏற்படுவதில்லை. இயற்கை விதிகளை மீறும்போது உடலில் கழிவு தேக்கம் ஏற்பட்டு ஐம்பூத தன்மையின் சமநிலை பாதிக்கப்பட்டு, அதுதொடர்பான உடல் உள்ளுறுப்புகளின் இயக்கக் குறைபாடு ஏற்படுகிறது. இந்த இயக்கக் குறைபாட்டின் காரணமாக உடல் தொந்தரவு ஏற்படுகிறது.
இயற்கை விதி மீறல்கள்
- பசிக்காமல் உண்பது, பசித்தும் உண்ணாமல் இருப்பது.
- பசியின் அளவிற்கு அதிகமாக உண்ணுவது.
- செயற்கை ரசாயனங்கள் கலக்கப்பட்ட உணவுகள் உண்பது.
- இரவு 9 மணிக்கு மேல் உணவு எடுப்பது.
- தாகத்தின் போது தண்ணீர் குடிக்காமல் இருப்பது.
- தாகமற்ற நிலையில் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது.
- அடிக்கடி பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவது.
- மது,புகைப்பிடித்தல்.
- இரவு 10 மணிக்கு மேல் தூங்காமல் கண் விழிப்பது.
- உடல் சோர்வு, தொந்தரவுகள் ஏற்படும்போது ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து உழைப்பது.
- உடல் உழைப்பு இல்லாமல் உடல் மூட்டுகளுக்கு அசைவு கொடுக்காமல் இருப்பது.
- மன அழுத்தத்தில் இருப்பது.
அரசின் கொள்கைகளால் நிகழும் இயற்கை விதிமீறல்கள்
தனிமனித இயற்கை விதிமீறல் தவிர அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.
- மனிதனின் ஒவ்வொரு செல்லையும் பாதிக்கும் கதிர்வீச்சை வெளிப்படுத்தும் அணுமின் நிலையங்கள் அமைத்தல்.
- மழைப் பொழிவிற்கும் சுத்த காற்றிற்கும் ஆதாரமாக விளங்கும் மலைகளை அழிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தல்.
- விரைவுப் போக்குவரத்து என்ற பெயரில் தேவை இல்லாத போதும் எட்டு வழிச்சாலை என்ற பெயரில் மரங்களை அழித்தல்.
- தன் நாட்டு மக்களை பசியில் வாடும் நிலையில் வைத்திருப்பது.
- மீத்தேன் ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் நிலத்தை மாசுபடுத்துவது.
- நச்சு வாயுக்களை கக்கும் ஆலைகளை விதிமுறைகள் மீறி அமைக்க அனுமதிப்பது.
- உணவுப்பொருட்களில் கலப்படத்தை தடுக்கத் தவறுவது.
- பசுமைப் புரட்சி என்ற பெயரில் நச்சுக்களைத் தெளித்து உணவுப் பொருட்களை நஞ்சாக்கியது.
உடல் உறுப்புகள் தனித்தனியானவை அல்ல
ஒவ்வொரு உறுப்பும் குறிப்பிட்ட பணிகளை செய்தாலும், அனைத்து உறுப்புகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. நெருப்பிலிருந்து நிலம் உருவாகிறது. நிலத்திலிருந்து காற்று, காற்றிலிருந்து நீர், நீரிலிருந்து மரம்..இப்படி ஐம்பூதங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்று மற்றொன்றை உருவாக்கும் அல்லது கட்டுப்படுத்தும். நெருப்பு நீரை அணைக்கும், காற்று இல்லாமல் நெருப்பு எரிய முடியாது. அதிவேகக் காற்று மரத்தை முறிக்கும். நீரை நிலத்தைக் கொண்டு தேக்க முடியும். அதிகப்படியாக வீசும் காற்றானது நிலத்தை வறண்டு போகச்செய்யும்.
அதேபோல் மேற்கண்ட உடல் உள்ளுறுப்புகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இயங்குகிறது. மரபுவழி மருத்துவங்கள் உடல் உறுப்புகளை தனித்தனியாக பார்ப்பதில்லை. ஒருங்கிணைந்த உடலாகவே பார்க்கிறது.
தலைவலிக்கு காரணம் தலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இரவு தூக்கத்தை தவிர்த்த காரணத்தால் கல்லீரல் சோர்வடைந்து தலைவலி ஏற்படும். மலச்சிக்கல் இருக்குமானால் தலைவலி ஏற்படும். மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கு காரணம் சிறுநீரக ஆற்றல் குறைபாடாக இருக்கலாம். ஈறுகளில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு மண்ணீரல் இயக்கக் குறைபாடு காரணமாக இருக்கும்.
இப்படி உடலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு ஒருங்கிணைந்த உடலாக கருத்தில் கொண்டு, இயற்கை விதிகளைக் கடைபிடித்து வாழும்போது ஐம்பூதத் தன்மை சீராக இருந்து உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கும். உடல் நலம் பெறும்.