புலம்பெயர் தொழிலாளர்கள்

மீண்டும் நகரங்களுக்கு வேலைதேடி திரும்பத் தொடங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்

சொந்த ஊருக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா பாதிப்பு முடிவதற்கு முன்பாகவே நகரங்களை நோக்கி மீண்டும் வேலை தேடி நகரத் தொடங்கியுள்ளதாகவும், தங்கள் தரவுகளின் வழியாக தெரிய வருவதாகவும் பணப்பரிமாற்ற நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

வங்கிக் கணக்குகளில் நிகழும் நேரடி பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பதை அடிப்படையாக வைத்து இந்த செய்தியினை நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கர்நாடகாவும், தமிழ்நாடும் இதுபோன்ற பணப் பரிவர்த்தனையில் விரைந்து மீட்சி கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, சூரத், ஜெய்பூர், ஃபரிதாபாத், ஜாம்ஷெட்பூர், லக்னோ போன்ற தொழில் நகரங்களில் இருந்து பணப் பரிவர்த்தனைகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பரிவர்த்தனைகள் சகஜமான இயல்பு நிலைகளுக்கு திரும்புவதாகவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறை குறைந்து கொண்டு வருவதை இது காட்டுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

சிறிது சிறிதாக பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கியுள்ள மும்பை, டெல்லி போன்ற பெரும் நகரங்களை நோக்கியும் சொந்த ஊர்களுக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வரத் தொடங்கியுள்ளதாக Fino Payments Bank-ன் முதன்மை செயலரான ரிஷி குப்தா கூறுகிறார்.

தொழிலாளர்கள் மீண்டும் நகர்ப்புறங்களை நோக்கி படையெடுக்க முக்கிய காரணம் தற்போது கொரோனா தொற்றானது ஊரகப் பகுதிகளில் அதிகமாகப் பரவத் தொடங்கி இருப்பதாகவும், அதனால் இவர்கள் மீண்டும் நகரங்களுக்கு பணிக்குத் திரும்புவதாகவும் ரிஷி குப்தா தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பகுதிகளில் அடிக்கடி போடப்படும் சிறு லாக் டவுன்கள் அவர்களின் வாழ்வாதாரத்தினை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இத்தனை நாட்கள் அரசுகளின் பண உதவி திட்டங்கள் மற்றும் இலவச உணவுகள் போன்றவை அவர்களையும் அவர்களின் குடும்பத்திற்கு உதவியது. இனி அந்த உதவிகள் நிறுத்தப்படும் வாய்ப்பு இருப்பதால் தொழிலாளர்கள் வேறு வேலைகளை தேடிக் கொள்ளும் நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சொந்த ஊர்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே தங்களுக்கான ஒரு வேலையை கண்டுபிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் முக்கியமாக உத்திரப்பிரதேசம், பீகார், ஹரியானா போன்ற மாநிலங்களிலிருந்து அதிகமான தொழிலாளர்கள் நகரப் பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து செல்லத் துவங்கி விட்டனர் என்கிறார் அஸ்வின் பரேக் ஆலோசனை மைய நிறுவனர் அஸ்வின் பரேக்

லாக்டவுன் காலங்களைக் காட்டிலும் தற்போது 15-20% வரை நேரடி பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இது தொழிலாளர்கள் பலர் தங்கள் பணிகளுக்கு திரும்பிய அறிகுறிகளைக் காட்டுவதாக பே பாயிண்ட் இந்தியா (Pay Point India) என்கிற முன்னணி பண பரிவர்தனையின் செயல் அதிகாரி கேட்டன் தோஷி கூறுகிறார்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 13 கோடியே 90 லட்சம் மக்கள் உள்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களாக இருப்பதாக 2017-ம் ஆண்டின் Economic Survey of India அறிக்கை கூறுகிறது.

நன்றி: Economic Times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *