மனிதன் பசியோடு இருப்பதை உணர்த்தும் மூளையின் ஒரு பகுதியில் இருந்தே தனிமையில் இருப்பதை உணர்த்தும் சமிக்ஞையும் வெளிவருவதாக ஆராய்ச்சி வெளிவந்துள்ளது.
மேலும் தனிமையில் இருப்பதை உணர்த்தும் பகுதியிலிருந்தே நினைவூட்டல் மற்றும் எதிர்கால திட்டமிடல் போன்ற செயல்களுக்கு தேவையான மூளையின் தூண்டல் ஏற்படுவதாகவும் மற்றொரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் பரவத் தொடங்கிய கொரோனாவால் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டது அதுபோலவே தனிநபர் இடைவெளி (Social Distancing) மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட(Isolation) காரணங்களால் பலர் மனநல ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளானார்கள்.
மனிதன் தனிமையில் இருந்தால் ஏற்படும் பாதகமான விளைவுகளாக அறியப்பட்ட மறதி, அறிவுத் திறன் குறைதல் மற்றும் தற்கொலை செய்ய தூண்டுதல் போன்ற விளைவுகளைத் தாண்டி தற்போது வெளிவந்துள்ள இரு புதிய ஆராய்ச்சி முடிவுகள் மனித மூளையின் செயல்பாடுகள் குறித்தான புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வந்துள்ளன.
தனிமையில் இருப்பது குறித்த நியூரோ சயின்ஸ் ஆய்வு
கடந்த நவம்பர் 23-ம் ‘நேச்சர் நியூரோ சயின்ஸ்’ எனும் ஆராய்ச்சி இதழில் வெளிவந்த ஒரு ஆராய்ச்சி முடிவில், மூளையின் எந்த பகுதி மனிதன் பசியோடு இருப்பதை உணர்த்துமோ, அதே பகுதியில் இருந்தே ஒருவர் தனிமையில் இருந்தால் அதை உணர்த்தும் சமிக்ஞையும் வெளிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலுக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தனிமைக்குள்ளாகும் ஓருவரின் மூளை எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பதை கண்காணிக்க ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக ஆரோக்கியமான கல்லூரி மாணவர்களை தன்னார்வலர்களாக தேர்வு செய்தது.
ஆராய்ச்சியில் பங்குபெற்ற ஒரு தரப்பு தன்னார்வலர்களை ஆராய்ச்சி குழு எம்ஐடி கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தியது.
தன்னார்வலர்களுக்கு தொலைபேசி கூட வழங்கப்படாமல் ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொள்ள ஒரே ஒரு கணினி மட்டும் அனுமதிக்கப்பட்டு சுமார் பத்து மணி நேரம் ஜன்னல் இல்லாத அறைகளில் அடைக்கப்பட்டனர். இன்னொரு தரப்பு மாணவர்களை 10 மணி நேரம் உணவு எதுவும் வழங்காமல் பட்டினி போட்டனர்.
ஸ்கேனிங் செய்யப்பட்ட தன்னார்வலர்கள்
பத்து மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்டதற்கு பிறகு, ஒவ்வொரு தன்னார்வலரும் எஃப்.எம்.ஆர்.ஐ ஸ்கேனிங்கிற்கு உட்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு தன்னார்வலரும் மற்றவர்களின் உதவியின்றி எஃப்.எம்.ஆர்.ஐ இயந்திரத்தில் தாங்களாகவே ஸ்கேன்களுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். சோதனையில் தவறு ஏற்படுவதைத் தவிர்க்க ஸ்கேன் செய்யும் கருவிகளுக்கு அருகில்கூட பிறர் அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக ஸ்கேன் எடுக்கும் எந்திரத்தில் எவ்வாறு படுத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற தேவையான பயிற்சிகள் தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
ஆராய்ச்சியில் வெளியான வியப்பான தகவல்
பின்னர் பட்டினி போடப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருந்தவர்களுக்கு எஃப்.எம்.ஆர்.ஐ இயந்திரத்தால் ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேன் செய்யும்போது தன்னார்வலர்களுக்கு உணவு, பூக்கள் மற்றும் மக்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் படங்கள் காட்டப்பட்டன.
ஸ்கேன் செய்யும்போது மூளையின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சிறிய பகுதியான ‘சப்ஸ்டாண்டியா நிக்ரா’ (Substantia nigra) மீது ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாக கவனம் செலுத்தி ஆய்வு செய்தனர்.இதில் இரு தரப்பிற்கும் அகநிலை தூண்டல் என்பதனை மூளையின் ஒரே பகுதி மட்டுமே கட்டளையிடுகிறது என ஆராய்ச்சியில் தெளிவானது.
- அதாவது தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மக்கள் தொடர்பு கொள்ளும் படங்களைப் பார்த்தபின் தாங்களும் தொடர்பு கொள்ள வேண்டும் எனும் ஏக்கம் மூளையில் ஏற்படுவதாகவும்.
- அதேபோல், பசியுள்ள நபர் உணவுகளின் படங்களை பார்த்தும் தாங்களும் சாப்பிட வேண்டும் எனும் ஏக்கம் மூளையில் ஏற்படுவதாகவும் தெரிவித்தன.
- மேலும் இந்த இரண்டு ஏக்கமும் முளையின் ஒரே பகுதி சப்ஸ்டாண்டியா நிக்ரா’ (Substantia nigra) செயல்படுவதன் மூலமே வெளிப்பட்டதாக எஃப்.எம்.ஆர்.ஐ முடிவுகள் நிரூபித்தன.
- இந்த குறிப்பிட்ட மூளை அமைப்பு முன்னர் உணவு மற்றும் மருந்துகளுக்கான தேவையை உணர்த்துவதாக கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- இதன் மூலம், உணவைப் போலவே மனிதர்களுக்கு சமூக தொடர்புகள் அத்தியாவசியமானவை. மக்கள் எவ்வாறு நீண்ட பசியுடன் இருக்க முடியாதோ, அதுபோலவே மனிதர்கள் நீண்ட தனிமையைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் என இந்த ஆராய்ச்சியின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
தனிமை குறித்த மற்றொரு ஆய்வு
கடந்த டிசம்பர் 15-ம் தேதி அன்று “நேச்சர் கம்யூனிகேஷன்” ஆய்விதழில் வெளிவந்த மற்றொரு ஆய்வில், தனிமையால் பாதிக்கப்படும் மனித மூளையில் ஒரு தனித்துவமான வடிவமைப்பு உருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு எம்.ஆர்.ஐ தரவை மரபியல் மற்றும் உளவியல் சுய மதிப்பீட்டோடு ஒப்பிட்டு 40,000 நடுத்தர வயது மற்றும் வயதுவந்த தன்னார்வலர்களை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தனிமையை அடிக்கடி உணரும் தன்னார்வலர்களின் தரவுகளை, இதே உணர்வைப் பகிர்ந்து கொள்ளாதவர்களுடன் ஒப்பிடப்பட்டது.
இதில் தனிமையை உணர்த்தும் மூளையின் ஒரு பகுதியிலிருந்தே நினைவூட்டல், எதிர்கால திட்டமிடல், மற்றவர்களைப் பற்றி சிந்தித்தல் மற்றும் கற்பனை செய்தல் போன்ற எண்ணங்களும் தூண்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தனிமையில் இருப்பவர்களின் மூளையின் இப்பகுதியில் இருக்கும் நரம்பு மண்டலங்கள் வலிமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தேவையான சமூக உரையாடல் இல்லாத நிலையில், தனிமையான நபர்கள் சமூக அனுபவங்களை கற்பனை செய்து கொண்டு உள்ளுணர்வுகளின் அடிப்படையில் ஒருதலைசார்பாக இயங்குவார்கள்” என நியூரோ ஆப் மெக்கில் பல்கலைக்கழக ஆய்வின் முதன்மை பேராசிரியர் நாதன் ஸ்ப்ரெங் தெரிவித்தார்.