வேதசகாயகுமார்

வேதசகாயகுமாருடன்: பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்

இந்த கட்டுரையின் முதல் பாகத்தை கீழ்காணும் இணைப்பில் படிக்கலாம்.

வேதசகாய குமாருடன் :பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

அறிமுகப்படலம்

அப்போது நான் ஒரு வடநாட்டு விசைத்தறி வேட்டிக்குழுமத்தின் படிநிகராளியாகப் (Rep.)பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஊர்சுற்றிப்பிழைப்பே. அதனைச் சாக்கிட்டே நான் முதன்முதலாகச் சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன், நாகர்கோயில் பாலமோர் சாலையில் ‘சுதர்ஸன்’ துணியகத்தில். அதற்கு எதிர்வரிசையில் தான் உள்ளது என் பெரியப்பாவின் ‘கண்டன்’ஸ் காஃபி மார்ட்’. சுரா பழகுதற்கு இனியவர். உரையாடலில் என்னைப் பேசவைத்து ஆர்வமாய்ச் செவிமடுப்பார்.ஏனெனக் கேட்டேன்.

“ஒரு காலத்தில் பொதுவுடைமை இயக்கத் தொடர்பில் இருந்தபோது மக்களோடு பழக வாய்த்தது. அப்புறம் இழையறுந்து போயிற்று. இப்போது இயக்கம் , இலக்கியம், ஊர்சுற்றி வணிகப்பணி என அலைக்கழியும் உங்களைப் போன்றோரிடம் புதுப்புது அனுபவங்களைத் தெரிந்து கொள்ளத்தான்” என்றார்.

அடுத்தடுத்து சந்திக்க வாய்க்கையில் “தனியாக வந்தீர்களா மனைவியுடனா” எனக் கேட்பார்.தனியாக எனில் கடையில் உள்ள அவர் அறையில் சந்தித்துப் பேசுவோம்.பின் வீட்டிற்கும் அழைத்துச் செல்வார். மனைவியுடன் சென்றிருப்பின், நாங்கள் தங்கியுள்ள உறவினர் இல்லத்திற்குக் காரனுப்பி அவர் இல்லத்துக்கு அழைத்துக் கொள்வார். அவருடைய ‘சுந்தர விலாஸ்’ இல்லத்தில் வைத்தே  சகாயகுமார் உடனான அறிமுகமும் நேர்ந்தது.

என் அம்மைவழிப் பூர்வீகம் நெல்லை கடையநல்லூர். மனைவிக்கு தந்தை வழிப் பூர்வீகம் திசையன்விளை. எங்களுக்கு மணமாகி ஓரிரண்டாண்டில் நெல்லை, குமரி, திருவனந்தபுரம் என இருவர்வழி உறவினர் இல்லங்களில் எங்களுக்கு விருந்தழைப்பு. சுரா இல்லத்தில் எங்களைச் சந்தித்த சகாயகுமார் அவர் இல்லத்துக்கும் மறுநாள் எங்களை வருமாறு அழைத்தார். இருவரும் சென்றோம். அவர் இல்ல முகவரியைத் தேடிக் கொண்டிருக்கையில் ஒரு பெரியவர் உடன்வந்தே வழிகாட்டினார். குமார் வீட்டைச் சற்றுத்தள்ளி நின்றே அடையாளங் காட்டிவிட்டுத் திரும்பலானார்.  ‘அய்யா நீங்க’ என்ற என்னிடம் ‘நீங்க தேடிவந்த புரபொசருக்க அப்பாதான், அவர் என்னோட பேசமாட்டார், நீங்க போய்ப் பாருங்க’ ன்னு விடைபெற்றார். புகழ்பெற்ற சித்தமருத்துவரவர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். புதுமைப்பித்தனைப் போலவும், கவிஞர் சுகுமாறனைப் போலவும் நம் குமாருக்கும் தந்தையாருடன் என்ன பஞ்சாயத்தோ நானறியேன்.

என் இணையர் ஆண்டாள் வெற்பன் ஆங்கில இலக்கியம் பயின்றவர். எம் சிலிக்குயிலின் முதல் வெளியீடான ‘சிலிக்குயிலுக்கு ஓர் செங்கவிதாஞ்சலி’ நூலிலவர் பாப்லோ நெருடாவின்  இந்திய வருகை குறித்த ‘நேருவின் பாராமுகமும் சுங்கச்சாவடி கெடுபிடிகளும்’ எனும் ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ கட்டுரையைத் தமிழாக்கம் செய்துள்ளார். 

குமார் தாம் பணியாற்றும் கல்லூரித் தமிழ்த்துறை முதுகலை, ஆய்வு மாணவர்களூடே எங்களுடனான ஒரு கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்தார். பேரா. ஜேசுதாசன் இணையர், சுரா, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற அந்த கலந்துரையாடல் நிறைவாக அமைந்தது. பெரும்பாலும் புதுமைப்பித்தன் கதைகள் பாப்லோ நெருடா கவிதை தொடர்பானவையாக அது அமைந்தது.

புதுமைப்பித்தன் கதைகள்: பதிப்பரசியல்

 அ). காலச்சுவட்டுடன் எனக்கு வாய்த்த அனுபவம்

“சுந்தர ராமசாமி அவர்களின் நாகர்கோவில் இல்லத்தில் நடந்த புதுமைப்பித்தன் பதிப்பாலோசனைக் கூட்டத்தில், அவர் (சகாயகுமார்) உணர்ச்சி வயப்பட்டிருந்ததை உடல்மொழி அப்பட்டமாகக் காட்டியது. புதுமைப்பித்தன் குறித்த எதையும் பகிர்ந்து கொள்ள இயலாத உடைமை உணர்ச்சி மீதூர்ந்த அவரது நிலை கண்டேன். எனக்கு அந்த உணர்ச்சி பிடிபடவில்லை.தருமசங்கடமுற்றேன்.” 
– மதிவாணன் பாலசுந்தரம்.(நேற்றைய பதிவில்).

அக்கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். எனக்கும் மதி குறிப்பிட்டவாறே பட்டது. ஆனால் எனக்கு அறத்துயர் (தர்ம சங்கடம்) ஏதும் இல்லை. “புதுமைப்பித்தன் என் முற்றத்து வெயிலில் காய்ந்தான். மழையில நனைந்தான்” எனப் பாழில் வெறித்தே பேசிநின்றாரவர். இவ்வளவு உடைமை உணர்வு ஏன் என்றே எனக்குந்தான் தோன்றியது.

பின்னால் இத்தொடர்பிலான காலச்சுவட்டின் அணுகுமுறைகள், அடுத்து அது மதுரையில் மீள நடத்திய கூட்ட அனுபவங்கள், அவருடைய ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்’ நூலின் தரப்புகள், காலச்சுவட்டின் பதிப்பரசியல் குறித்த வீ.அரசு, அ.சதீஷ் கட்டவிழ்ப்புப் பதிவுகள் ஆகியவற்றால் வேதசகாயகுமாருக்கு நேர்ந்துபோன காயடிப்பின் வலியை, வடுவை எல்லாம் என்னாலும் உள்வாங்க இயன்றது.

மதுரைக்கூட்டத்தில் சுராவின் புதுமைப்பித்தன் மதிப்பீட்டை விமர்சிக்கும் பிரமிளின் தரப்பை எடுத்துரைத்தபோது சலபதி கடுமையாகக் குறுக்கிட்டார். அதனை முறையாக எதிர் கொள்ளாமல்.

காலச்சுவடு சார்பில் தமிழ் இனி எனும் பேரில் நடந்த விழாவில் என்னைத் ‘தமிழ்ப்பதிப்புவரலாறு’ குறித்த ஆய்வுக்கட்டுரை வாசிக்கக் கேட்டிருந்தனர். என் பெயரை அதற்கு அவர்களிடம்  குறிப்பிட்டவர் சுந்தர் காளி. எனினும் கட்டுரை பின்னர் எனப் பார்வையாளனாகவும் சிலிக்குயில் நூல்விற்பனையாளன் ஆகவும் பங்கேற்றேன். பின்னர் அத்தலைப்பில் ஆய்வுரை எனில் காலச்சுவட்டின் பதிப்பரசியலைப் பேசியே தீரணும் என்பதால் கட்டுரை அனுப்ப இயலாதென மறுதலித்து அவர்கள்  முன்பணமாக அனுப்பி வைத்த காசோலையையும் திருப்பி அனுப்பிவிட்டேன்.

ஆ). ‘தமிழினி’யில் எனக்கு வாய்த்த அனுபவம்

ஜூன் 2000 த்தில் ‘தமிழினி’ வெளியீடுகளாக வசந்தகுமார் எம்.வேதசகாயகுமாரின் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்’, ராஜமார்த்தாண்டனின் ‘புதுமைப்பித்தனும் கயிற்றரவும்’, ராஜ் கௌதமனின்

‘புதுமைப்பித்தன் என்னும் பிரம்ம ராசஷஸ்’, ஆகிய முந்நூல்களையும் வெளிக்கொணர்ந்தார். என் நூலையும் வெளியிட இசைந்தார். தலைப்பைக் கேட்ட மாத்திரத்திலேயே மறுதலித்து விட்டார், ‘புதுமைப்பித்தமும் பிரேமிள் சித்தமும்’. புதுமைப்பித்தனைப்பத்தி எழுதறென்னீங்க அவரப்பத்தி மட்டும் எழுதித்தாங்கன்னார். புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் வெளியிட்டீங்களேன்னதுக்கு, அதெல்லாம் எதுக்கு நான் கேட்ட மாதிரித் தாங்க அவ்ளோதான்னார். நான் ஆர்டருக்கு சப்ளை பண்ண சரக்கு மாஸ்டர் இல்லன்னு மறுத்துவிட்டேன் நானும்.

ஆனால் அண்மையில் தமிழினியின் பதிப்பரசியலை விமர்சிக்காமல் அவரைக்  கால சுப்பிரமணியமே கொண்டாடியதனை விமர்சித்தேன். அதற்கவர் தன்நூலை வெளியிட மறுத்ததற்காக அவரை மறுதலிப்பது சரியில்லை என்றபோதுதான் நீங்களுமா என அதிர்ந்து போனேன். ஏனெனில் பிரேமிளைப்பற்றி எழுதக் கூடாதெனவே வசந்தகுமார் மறுதலித்ததைக் கண்டிக்கமுடியா அவர் நிலைக்கு இரங்கி. இப்போது பிரேமிள் நூலை எதையும் எதிர்பாராமல் தமிழினிதானே விற்பனைக்கு காலசுவுக்கு  உறுதுணை!

இ). வேதசகாயகுமார் வலியும் வடுவும்

‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்-சிறுகதை ஆசிரியர்களாக ஓர் ஒப்பாய்வு’ எனும் தம் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்ட சகாயகுமார் முதன்மை ஆதாரமான கதைத்தொகுப்புகளின் ஒழுங்கு ஜெயகாந்தன் சிறுகதைத்தொகுப்புகளுக்கு அமைந்திருந்தாற் போல் புதுமைப்பித்தன் கதைகளுக்கு இல்லாததனைத் தம் ஆய்வுக்கு மிகப் பெரிய இடையூறாக உணர்கின்றார். அவற்றை வெளியான இதழ்களில இருந்து திரட்டி காலவரிசையில் 145 கதைகள் வெளியான தேதி அல்லது ஆண்டு; வெளியான இதழ், மலர், நூல் ; எப்பெயரில் அதை எழுதினார் ;வெளியீட்டாளர்  என ஒரு முழுமையான. பட்டியலைத் தம் ஆய்வின் பிற்சேர்க்கையாக வைத்துள்ளார். (தழுவல் கதைகள் உட்பட. இது பின்னர் முறைப்படுத்தப்பட்ட பின் 102 என முறைப்படுத்தினார்)

இதனை உருவாக்க அவர் எழுத்தாளர் இல்லங்கள்,பத்திரிகை அலுவலகங்கள், நூலகங்கள்,இதழ் சேகரிப்பாளர் இல்லங்கள் என ஊர்ஊராய் அலைந்துள்ளார். அவமானங்களுக்கும் ஆளாகியுள்ளார். இது குறித்தும் தம்’புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்’ நூலில் விளக்கமாக முன்வைத்துள்ளார். காட்டாகச் சில:

“ஜெராக்ஸ் வசதி பிரபலம் அடையாத அக்காலத்தில் கதைகளைக் கையினால் எழுதி எடுக்க வேண்டியதிருந்தது” 

“திருமதி வராவின் தம்பி என்றார். பலவந்தமாக அறையிலிருந்து வெளியேற்றினார். சிறு தொகையைத் தருவதாகக் கூறினேன். அவரோ ஒவ்வொன்றிற்கும் தனிக்கட்டணம் என்றார். திருடும் குணமோ ஐயாயிரம் ரூபாயோ இருந்திருந்தால் இந்தியா இதழ்கள் என் கைவசம் வந்திருக்கும்”

“விகடன் அலுவலகம் சுலபமாக என்னைத் தூக்கி வெளியில் எறிந்தது”

இவற்றையெல்லாம் வாசிக்க வாசிக்கத்தான் அவருக்கு இருக்கும் உடைமை உணர்வின் உட்கிடை நமக்கும் புலனாகின்றது.

இதற்கும் அப்பால் சுராவின் ஆர்வமும் வாக்குத்தவறாமையும்; ‘காலச்சுவடு’ கண்ணன் இழைத்த இரண்டகமும், சலபதியின் இரண்டகமும், ஆய்வு நேர்மையின்மையும் நமக்கு ஒருசேரவே பிடிபடலாகின்றன:

“சுந்தர ராமசாமியின் பார்வைக்கு (புதுமைப்பித்தன் கதைகள் முழுமைப் பட்டியல்) தந்தேன். தகவல்களை வெளியிடுவதில்லை, கதைகள் குறித்த தன்னுடைய புரிதலுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வேன் என்றார். இந்த உறுதிமொழியை அவர் எக்காலத்ததிலும் மீறவுமில்லை.”

“இந்த ஆய்வேடு நூல் வடிவம் பெற வேண்டுமென்பதில் முதல் ஆர்வம் சுந்தர ராமசாமியினுடையது.”

“புதுமைப்பித்தனின் கதைகள் தொடர்பான முழுமையான விபரங்களடங்கிய இப்பட்டியல் மீது உணர்வு அடிப்படையிலான பிடிப்பு எனக்குண்டு. இது ஓர் இளம் ஆய்வாளனின் தன்னலமற்ற நேர்மையான உழைப்பின் மீது கட்டப்பட்டது. மாதம் நானூறு ரூபாய் மற்றும் வருடம் மூவாயிரம் ரூபாய் என்ற பல்கலைக்கழக மான்யக்குழுவின் உதவியுடன் இத்தனையையும் சாதிக்க முடிந்தது.

‘டிரஸ்ட்டுகளின்’ பின்துணை எனக்குக் கிடைத்ததில்லை. ஆனால் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தார் வெளியிட்ட ‘அன்னை இட்ட தீ’ தொகுப்பில் அதன் தொகுப்பாளர் அவர் சாதனையாக என்னுடைய உழைப்பினைச் சுலபமாக

எடுத்துக்கொண்டுள்ளார். குறிப்பிட்ட தகவல் முதலில் கண்டடையும் ஆய்வாளனுக்கு உரிமையானது என்ற ஆய்வுநெறி இங்கு புறக்கணிக்கப்படுகிறது. என் பெயரைக் குறிப்பிட்டுத்தான் மற்றொரு ஆய்வாளர் இதனைப் பயன்படுத்த வேண்டும். இதுதான் ஆய்வுநேர்மை.”

“காலச்சுவடு இரண்டாம் முறை வெளிவந்தபோது, சில நூல்களையும் கொண்டுவரத் திட்டமிட்டது. ஆய்வை வெளியிடப் பொருளாதாரம் மட்டுமே தடையாக உள்ளது என்றார். காலச்சுவடு உரிமையாளரான கண்ணன். ஆனால் புதுமைப்பித்தன் கதைகளின் தொகுப்பினை வெளியிடத் திட்டமிட்டபோது, புதுமைப்பித்தன் கதைகளின் பட்டியலை மட்டும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டார். ஓர் ஆய்வேடு ஒருவகையில் பல்கலைக்கழகச் சொத்து. இதை உருவாக்க அது முதலீடு செய்துள்ளது. ஆய்வேட்டைப் பிரித்து வெளியிட அது அனுமதிக்காது. நேர்மையும் அல்ல. ஆனால் காலச்சுவடு நிறுவனம் பட்டியலை வேங்கடாசலபதிக்கு உரிமையாக்கி என்னை எதிர்கொண்டது.” 
-எம். வேதசகாயகுமார்

ஈ). காலச்சுவட்டின் பதிப்பரசியல்: அ.சதீஸ் கட்டவிழ்ப்பில்…

“தொ.மு.சி. ரகுநாதனின் ஆலோசனையின் பேரில் தொகுக்கப்பட்டிருந்த புதுமைப்பித்தன் கதைகள் (ஐந்திணைப் பதிப்பகம் 1988) மற்றும் அவரிடமிருந்த கையெழுத்துப்பிரதிகள் எம்.வேதசகாயகுமாரின் பல்லாண்டுக்கால உழைப்பினால் உருவாகிய பு.பி.யின் கதைகளின் வெளியீட்டு விவரங்கள் அடங்கிய பட்டியல்.

வீ.அரசு அவர்களால் வ.ரா. வீட்டிலிருந்து பெறப்பட்ட மணிக்கொடி இதழ்கள் மற்றும் பு.பி.யின் முதல் பதிப்பு நூல்கள்.

ஆகிய அடிப்படையான ஆதாரங்களை எல்லாம் அவர்களின் அனுமதியின்றிப் பெற்றுக்கொண்டு டாட்டா அறக்கட்டளை வழங்கிய நிதியின் அடிப்படையில் காலச்சுவடு நிறுவனம் புதுமைப்பித்தன் கதைகளை வெளியிட்டது.”

“நம்பகமான பதிப்பு என்றும் செம்பதிப்பு என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு நான்கு பதிப்புகளைக் கண்டுள்ளது. இது காலச்சுவடு நிறுவனத்திற்கும் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கருதப்பட்டாலும் உண்மையில் ஒரு பல்கலைக்கழக ஆய்வாளனாக இருந்து தனிப்பட்ட முறையில் உழைத்த உழைப்பிற்கும், பு.பி.யைத் தோள்மேல் சுமந்த அவரது தனித்த வாசகர்களுக்கும் இது பெரும் தோல்வியாகவே அமைந்தது.

பல்லாண்டு கால ஆய்வு உழைப்பிற்குக் கிடைக்காத அங்கீகாரத்தை, சர்ரத்தன் டாட்டா அறக்கட்டளை வழங்கிய நிதியின் மூலம் ஒருவர் அடைந்துவிட முடியும் என்பதையே இது புலப்படுத்திற்று. பதிப்பாசிரியரின் ‘அறவியல் பார்வை’ நன்றிகூறலைக் கூட அது வசையாகப் பொழிந்தது. மிகப்பெரிய நிதி ஆதாரங்களுடன் செய்யப்படும் ஆய்வு முந்தைய ஆய்வுகளைக் காட்டிலும் சிறப்பாக வெளிவரும் என்பது உண்மையே. ஆனால் முந்தைய ஆய்வுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு அதிலுள்ள சிறிய தவறுகளைப் பூதாகரமாக மாற்றித் தன்னுடைய ஆய்வை முன்னிறுத்தும்போது ஆய்வுநேர்மை என்பது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. முதல் பதிப்பிலிருந்த வசைகள் பின்னர் நீக்கப்பட்டடுள்ளதன் காரணம் என்ன? புதுமைப்பித்தனை உரிமை கொண்டாடிய காலச்சுவடு நிறுவனத்தின் ‘புதுமைப்பித்தன் கதைகள்’ வெளிவருவதற்குப் பின்னால் உள்ள இத்தகைய தன்மைதான் ‘ஆய்வு’ ‘வணிகப்பொருள் என்பதை விளக்கிற்று.” 
– அ. சதீஸ் (‘நூல் பதிப்பும் நுண் அரசியலும்)

முற்றும்!

– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Radicals)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *