கொரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் பலருக்கும் பல்வேறு விதமான கேள்விகள் இருக்கின்றன. இதில் முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களுக்கும், கைக்குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்களுக்கு இருக்கின்ற கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை குறித்த ஒரு விளக்கத்தினை மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதனை விரிவாகப் பார்ப்போம்.
மருத்துவர் சிவராமன் விளக்கம்
இருபதே நானோமீட்டர் உயிரி. என்னவெல்லாம் படுத்துகின்றது! உண்மையில் மருத்துவ உலகம் சற்று விக்கித்துதான் நிற்கின்றது.
கொரோனாவின் புதிய அவதாரங்கள் (மாற்றுருக்கள்) பலம் பொருந்தியதாகின்றதா? பலகீனமடைகின்றதா? என உறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. இப்போதைய மாற்றுருக்கள் படுவேகமாகப் பரவுவதையும், நுரையீரலை வேகமாக சென்று தாக்குவதையும் அறிய முடிகிறது. வைரஸுக்கும் நமக்குமான போர்க்களத்தில் நுரையீரலில் குவியும் அழற்சி அணுக்கள்( inflammatory components) சிலருக்கு புயலாக, சிலருக்கு நெகிழ்வை விலக்கி கடினமாக்கும்படியாக என புரியாத பல மாற்றங்களை நிகழ்த்துகின்றது.
இச்சுழலில் கருத்தரித்த மகளிர் இடையே பாலூட்டும் மகளிரிடையே பல கேள்விகள். தாய்ப்பால் கொடுக்கலாமா? எனக்கு வந்திருக்கும் கோவிட் என் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவைத் தாக்குமா? நானெடுக்கும் மருந்துகள் என் சிசுவின் எதிர்கால வாழ்வை ஏதெங்கிலும் பாதிக்குமா? இந்த சமயத்தில் கருத்தரிக்கலாமா வேண்டாமா? என பல கேள்விகள்.
புதிய வைரஸ். தினம் தினம் உருவாகும் மாற்றுருக்கள்..ஆதலால் இன்னும் சில கேள்விகளுக்கு தீர்க்கமான முடிவுகளை அறிவியல் உலகால் எட்ட முடியவில்லை. சிலவற்றிற்கு இதுவரை(கடந்த 16 மாத அனுபவங்களைக் கொண்டு) கிடைத்த தரவுகளால் சில முடிவுகளை அறிவியலாளர்கள், அறிவிக்கின்றனர்.
அவற்றில் சில பின்வருமாறு-
- தாய்ப்பால் கொடுப்பது முழுமையாய் பாதுகாப்பானது. (தாய்க்கு கோவிட் இருந்தாலும், வந்து சென்றிருந்தாலும், வாக்சின் போட்டிருந்தாலும்) நோயிருந்தால் “மாஸ்க்” போட்டு பால் கொடுக்க வேண்டும்.
- சித்த மருத்துவம் பரிந்துரைக்கும் சதாவரி லேகியம், மாதுளை மணப்பாகு இவற்றுடன் வெள்ளைப்பூண்டு வெந்தயம் சுறாப்புட்டு போன்றவற்றை இந்தக்காலத்தில் பாலூட்டும் பெண் சேர்ப்பது நிச்சயம் பலம் தரும். நல்ல பால்சுரப்பிற்கு இவை உதவும்.
- பிரசவத்தையும், பிரசவம் பார்க்கப் போகும் மருத்துவரையும் மிக முன்னதாக சரியாக திட்டமிடுதல் முக்கியம். கோவிட் காலத்தில் கடைசி நேர அவசரங்களை அது தவிர்க்க உதவும்.
- தாயின் தாய்-சேய் இணைப்புத்திசு வழி இந்த வைரஸ் சிசுவை தாக்கும் வாய்ப்பு இல்லாமலில்லை. ஆனால் மிகக் குறைவு (vertical transmission), மிகச் சிலரின் umbilical cord plasma இல் வைரஸ் ஜீனோம் கண்டறியப்பட்டாலும் கூட இதுவரை கிடைத்த தரவுகள் போதாது, நிறைய ஆய்வுகள் வேண்டும் என்றே CDC உள்ளிட்ட பல அமைப்புகள் சொல்கின்றன.
- ஒருவேளை மகப்பேறு கொண்ட தாய், பிரசவத்திற்கு சிலகாலம் முன், கோவிட் நோய் பெற்று இருந்தால், குழந்தைக்கு தாய்ப்பாலின்வழி கோவிட் நோயை எதிர்க்கும் எதிர்ப்பாற்றலை வழங்குவார்கள். எச்.ஐ.வி நோயில் இச்சர்ச்சை இருக்கையில் எங்கள் பேராசிரியர் செ.நெ.தெய்வநாயகம் “தாய்ப்பால் குடும்மா” என எச்.ஐ.வி நோய் பெற்ற தாயை சொல்வது இங்கே நினைவிற்கு வருகின்றது.
- கருத்தரிக்கும் சமயம் கோவிட் வந்தால் குழந்தைக்கு பாதிப்பாகுமா? என்ற கேள்விக்கும் முழுமையாய் பதில் இல்லை. முதல் மூன்று மாதங்களில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. ஆனால் அது முழுமையாய் கோவிட் நோயாலா? வைரஸாலா? என சொல்ல முடியவில்லை என்கிறார்கள். பெரும்பாலும் இந்த சிக்கல் இதுவரை மிகச் சொற்பமானவருக்குத்தான் ஏற்படுகின்றது.
- இதைப்பற்றி இன்னும் விசாலமாய் வாசிக்க உலகின் மிக முக்கிய ஆய்விதழான Nature இதழில் ஒரு முக்கிய கட்டுரை உள்ளது. ஆர்வமிருப்பவர்கள் வாசித்து விபரம் அறியலாம். (Clinical manifestations and perinatal outcomes of pregnant women with COVID-19: a systematic review and meta-analysis)
- கர்ப்பிணிப் பெண்களுக்கு வாக்சின் பாதுகாப்பு பற்றி இன்னும் தீர்மானமான கருத்து எட்டப்படவில்லை. Federation of Gynaecology and Obstetrics, என்கிற மகளிர் மருத்துவகளுக்கான உலகளாவிய கூட்டமைப்பு, கர்ப்பிணிகள் வாக்சின் தவிர்த்தால், அதை வரவேற்று கர்ப்பக்காலத்தில் பாதுகாப்பாக இருக்கச் சொல்கின்றது.
- வைரஸ் எதிர் மருந்துகள் (ரெடம்சிவிர் உள்ளிட்ட) குறித்து, ஆங்காங்கே பல தகவல்கள் எட்டப்பட்டிருந்தாலும், இன்னும் தீர்மானமான முடிவிற்குள் வரமுடியவில்லை.
- மரபும் சித்த மருத்துவமும் எப்போதும் வலியுறுத்தும் கீரைகள், பயறுகள், மாதுளை முதலான பழங்கள், மீன் இவை அனைத்துமே கருத்தரித்த அம்மாவை பாதுகாக்கவும், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உடலின் எதிர்ப்பாற்றலை வலு ஏற்படுத்தவும் உதவுவன. அதை தாய்க்கும் தாய்மைக்கு காத்திருக்கும் பெண்ணுக்கும் துளி குறைவின்றி கொடுப்பது மிக அவசியம்.
அறிவியலின் தரவுகள் ஆய்வுகள் வர வர மாறிக்கொண்டுதான் இருக்கும். “மாறத்தானே போகிறது”, என்கிற அலட்சியம் கொள்ளாது, உன்னிப்பாக கவனிப்பதும் நம்மை அதற்கேற்றாற்போல் தயார் செய்து கொள்வதும் அறிவின் அறத்தின் அம்சம்.
கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பது கோவிட் காலத்தில் மிக மிக அவசியமானது. முதியோரை, துணை நோய் உள்ளவர்களை பாதுகாப்பதைவிட கூடுதல் அக்கறையுடன் பாதுகாக்க வேண்டும்.