கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி விநியோகிப்பதில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம்!

ஒன்றிய பாஜக அரசின் தவறான தடுப்பூசி கொள்கையின் காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் மாநிலங்களிடையே ஏற்றத்தாழ்வு நிலவுவது தெரிய வந்துள்ளது. 18-44 வயதுடையோருக்கான தடுப்பூசி செலுத்தும் பொறுப்பை மாநிலங்களின் மீது சுமத்தியுள்ளது ஒன்றிய அரசு.

மே 1-ம் தேதி தொடங்கிய 18-44 வயது பிரிவினருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிக்காக ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு மே12-ம் தேதி வரையில் 34,66,000 பேருக்கான தடுப்பூசியை மட்டுமே வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிய இந்த மொத்த எண்ணிக்கையில் 85 சதவீத தடுப்பூசிகளை 7 வட மாநிலங்களுக்கு மட்டும் ஒதுக்கியுள்ளது.

பாதிப்பு அதிகமாக உள்ள தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிக தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்ட 7 மாநிலங்கள்

மகாராஷ்டிரா – 6.25 லட்சம்
ராஜஸ்தான் – 5.49 லட்சம்
டெல்லி – 4.71 லட்சம்
குஜராத் – 3.86 லட்சம்
ஹரியானா – 3.55 லட்சம்
பீகார் – 3.02 லட்சம்
உத்திரப்பிரதேசம் – 2.65 லட்சம்

தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள்

கர்நாடகா – 74,015
தமிழ்நாடு – 22,326
ஆந்திரப்பிரதேசம் – 1,133
கேரளா – 771

இப்படி மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தென்மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதிக தொற்று எண்ணிக்கை இருந்தாலும் குறைவான தடுப்பூசிகள்

இதேபோல் மேற்கு வங்கத்திற்கு 12,751 தடுப்பூசிகளும், சட்டீஸ்கருக்கு 1,026 தடுப்பூசிகளும் மட்டுமே ஒன்றிய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட 13 மாநிலங்களில் டெல்லியை தவிர்த்து மீதமுள்ள 12 மாநிலங்கள், இந்தியாவின் மொத்த கொரோனா நோயாளிகளில் 82.51 சதவீதத்தினரை கொண்டுள்ளவை.

மாநிலங்களின் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் ஒன்றிய அரசினால் வஞ்சிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிகபட்சமாக 5.87 லட்சம் கொரோனா நோயாளிகளைக் கொண்டு முதலிடத்திலுள்ள கர்நாடகா மாநிலத்திற்கு 74,015 தடுப்பூசிகளும், 4.24 லட்சம் கொரோனா நோயாளிகளைக் கொண்டு மூன்றாம் இடத்திலிருக்கும் கேரளாவிற்கு வெறும் 771 தடுப்பூசிகளும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

22,326 தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1.62 லட்சம் கொரோனா நோயாளிகளைக் கொண்டு ஏழாமிடத்தில் இருக்கிறது.

1.95 லட்சம் கொரோனா நோயாளிகளுடன் ஆந்திர பிரதேசம் ஆறாமிடத்திலும், 1.27 லட்சம் கொரோனா நோயாளிகளுடன் மேற்கு வங்கம் ஒன்பதாவது இடத்திலும், 1.21 லட்சம் நோயாளிகளுடன் சட்டீஸ்கர் பத்தாமிடத்திலும் உள்ள நிலையில் இம்மாநிலங்களுக்கு மொத்த தடுப்பூசி ஒதுக்கீட்டில் 15 சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

18-44 வயதினரின் எண்ணிக்கை அடிப்படையிலும் பாரபட்சமே

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கிடையே ஓரவஞ்சனையாக செயல்படும் அதேவேளையில், ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள 18-44 வயதினரின் எண்ணிக்கையில் அடிப்படையிலான ஒதுக்கீடிலும் பெரும் ஏற்றத்தாழ்வு நிகழ்கிறது.

உதாரணமாக தலா மூன்று கோடி 18-44 வயது பிரிவினரைக் கொண்ட அசாமிற்கு 1.31 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதே எண்ணிக்கை கொண்ட தெலுங்கானாவிற்கு 500 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

18-44 வயது பிரிவினர் ஒரு கோடி பேரைக் கொண்ட உத்தரகாண்ட் 50,968 தடுப்பூசிகளை பெற்றுள்ள அதே வேளையில், மூன்று கோடி பேரைக் கொண்ட பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்டிற்கு முறையே 5,469 மற்றும் 94 தடுப்பூசிகளையும் மட்டுமே பெற்றுள்ளன.

மேற்கூறிய கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒன்றிய அரசிடம் உரிய தடுப்பூசி கொள்கை இல்லாததையும், ஒருவேளை அப்படியொன்று இருக்கும்பட்சத்தில் அதன் தோல்வியையுமே காட்டுகின்றன. இதன் காரணமாகவே ஒன்றிய அரசை நம்பியிராமல் மாநில அரசுகள் நேரடியாக கொரோனா தடுப்பூசிக்கான சர்வதேச டெண்டர்களை நோக்கி நகரத் தொடங்கி விட்டன.

ஆனால் அதற்குள்ளாக கொடுக்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை மிக அதிகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *