கேரளாவின் கம்யூனிஸ்ட்களின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்ற மூத்த கம்யூனிஸ்ட் கெளரியம்மா என்றழைக்கப்படும் கெளரி இயற்கை எய்தினார். காய்ச்சல், சுவாசக் கோளாறு மற்றும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஏப்-22ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ஒரு பழம்பெரும் கம்யூனிஸ்டாகவும், ஒரு இடதுசாரி பெண் அமைச்சாரகவும் கேரளத்தின் நவீன சமுக வளர்ச்சியிலும், பெண்களின் வளர்ச்சியிலும் அவரது பங்கு இன்றியமையாதது ஆகும்.
ஈழவ சமூகத்தின் முதல் சட்டப் பட்டதாரி
கெளரியம்மா கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள செர்தாலா எனும் ஊரில் ஜூலை 14, 1919 அன்று பிறந்தார். பிற்படுத்தப்பட்ட ஈழவ சமூகத்தைச் சார்ந்த செல்வச் செழிப்பான குடும்பம் கெளரியம்மாவினுடையது. தனது ஊர்ப் பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற அவர், பின்னர் எர்ணாகுளத்திலுள்ள செயிண்ட் தெரஸா கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். அதன் பின்னர் திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் பயின்று தனது சட்டப்படிப்பை முடித்தார்; பிற்படுத்தப்பட்ட ஈழவ சமூகத்தின் முதல் பெண் சட்டப் பட்டதாரியானார் கெளரியம்மா.
1948-ல் பங்கேற்ற முதல் தேர்தல்
கெளரியம்மா தனது சகோதரரின் கம்யூனிஸ்ட் கட்சித் தொடர்பால், 1948-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதே ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் (இந்திய ஒன்றியத்தோடு இணைவதற்கு முன்னர்) செர்தலா பகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்; அப்போது அவருக்கு வயது 28. இந்திய கம்யூனிஸ்ட்களின் ஆரம்பக் கால தேர்தல் வரலாற்றிலிருந்து அவரது அரசியல் ஆரம்ப காலமும் தொடங்கியது.
போராட்டங்களால் சிறையிலிருந்தபோதே வெற்றி
ஏழை, எளிய பாட்டாளி மக்களுக்கான அரசியல் போராட்டத்தினால் கடும் அடக்குமுறைக்கும், சிறைக் கொடுமைக்கும் கெளரியம்மா ஆளாக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் திருவிதாங்கூர் இந்திய ஒன்றியத்தோடு இணைக்கப்பட்டதை அடுத்து 1952ல் நடந்த திருவிதாங்கூர் – கொச்சின் சட்டப்பேரவைத் தேர்தலில் அரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தல் காலத்தில் கூட பிரச்சாரத்திற்கு வாய்பில்லாமல் கெளரியம்மா சிறையிலிருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து நடைப்பெற்ற 1954-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம்
1957-ம் ஆண்டு நடைபெற்ற கேரள சட்டப்பேரவைத் தேர்தலின் போது, இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் முதன்முதலாக கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. வெற்றிபெற்ற இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் இளம் வயது அமைச்சராக கெளரியம்மா இடம் பெற்றிருந்தார். வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த கெளரியம்மா ‘உழுபவர்களுக்கே நிலம் சொந்தம்’ என்ற அடிப்படையில் நிலச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். கேரள ஏழை விவசாய, விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வில் ஏற்றம் தந்த சீர்திருத்தங்களை செய்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி பிரிவு
தொடர்ந்து 1967, 1980, 1987ம் காலத்திய கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் அமைச்சராக கெளரியம்மா பொறுப்பு வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்தெடுத்தார்.
முதல்வர் பதவி மறுக்கப்பட்டது
1987-ம் ஆண்டைய தேர்தலின்போது கெளரியம்மாவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய போதும், கெளரியம்மாவை முதல்வராக தேர்ந்தெடுக்காமல் இ.கே.நயனார் என்பவரை முதல்வராகத் தேர்ந்தெடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சாதி ரீதியான காரணத்தினாலே தாம் ஓரங்கட்டப்படுவதாக கெளரியம்மா எண்ணினார். கட்சிக்கு விரோதமாக செயல்பட்டாரென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
புதிய கட்சி தொடக்கம்
கெளரியம்மா ஜனாதிபத்திய சம்ரக்ஷனா சமிதி என்ற கட்சியைத் தொடங்கினார். அவரது கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகித்தது. ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியினுடைய ஆட்சியின் போது ஏ.கே.அந்தோனி, உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார்.
தனது 92 வயதில் 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினார்.
கேரள பெண்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவர்
கேரள இடதுசாரி அரசியல் மரபிற்கு கெளரியம்மாவின் பங்களிப்பு இன்றியமையாதது. குறிப்பாக பெண் சமூக வளர்ச்சியில் கேரளா முன்னணி வகிப்பதற்கு கெளரியம்மா கொண்டு வந்த பெண்கள் பாதுகாப்பு மசோதாவிற்கு முக்கியப் பங்குண்டு. இந்திய ஒன்றியத்தை பாசிசம் தன் கோரப் பிடிக்குள் கொண்டு வந்திருக்கும் இச்சூழலில் தென்னிந்திய கேரள மாநிலம் அதற்கெதிரான தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு கெளரியம்மா போன்றவர்களின் உழைப்பும் மிக முக்கிய காரணமாகும்.