தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன்: அங்கனூர் ஆரம்பப் பள்ளி முதல் நாடாளுமன்றம் வரை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

தொல்.திருமாவளவன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அங்கனூரில் இராமசாமி (தந்தை பின்னர் தொல்காப்பியன் என்று பெயர் மாற்றிக்கொண்டார் )பெரியாம்மாள் தம்பதிக்கு இரண்டாவது பிள்ளையாக 1962-ல் பிறந்தார். இவருக்கு வான்மதி என்ற அக்காவும் செங்குட்டுவன், பாரிவள்ளல் என இரு தம்பிகள் உள்ளனர். அவரது அக்கா வான்மதி கொரோனா தொற்றின் காரணமாக சமீபத்தில் உயிர்நீத்தார்.

ஆரம்பப் பள்ளியை சொந்த கிராமத்தில் படித்த திருமாவளவன், விருத்தாசலம்  அருள்மிகு கொளஞ்சியப்பர் கல்லூரியில் புதுமுக வகுப்பும், சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை வேதியியல், முதுநிலை குற்றவியல் படிப்பும் முடித்து, 1988-ல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார்.

அரசியலுக்கு இழுத்து வந்த ஈழப் போராட்டம்

சென்னையில் மாநிலக் கல்லூரியில் படிக்கிற காலத்திலிருந்து எம்.சி.ராஜா விடுதியில் தங்கிப் படித்தார். அந்த காலக்கட்டமான 1983-ல் ஈழத் தமிழர் பிரச்சினை வெடிக்கத் தொடங்கியது. மாணவர்களோடு இணைந்து ஈழத் தமிழருக்கான போராட்டங்களில் பங்கேற்கத் தொடங்கியதுதான் அவரை அரசியலை நோக்கி அழைத்து வந்தது.

அப்பொழுது விடுதலைப் புலி என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிக்கை ஒன்றையும் நடத்தினார். மாணவர் விடுதிகளுக்கு 

கவிஞர் காசிஆனந்தன், பேராசிரியர் அன்பழகன், வைகோ, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டவர்களை அழைத்து வந்து கூட்டங்கள் நடத்தி மாணவர்களை ஒன்று திரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். 

1984-ல் பெரியார் திடலில் ஈழ ஆதரவு மாணவர் மாநாட்டினையும், சைக்கிள் பேரணியையும் நடத்தினார்.

1985-ல் தலித், மீனவ மாணவர்களுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வு கொடுக்க தன் ஓய்வு நேரங்களை செலவழித்தார். அதற்காக இளைஞர் நல இயக்கம் என்பதை உருவாக்கி, அதன்  பொதுச்செயலராகவும் பொறுப்பு வகித்தார்.

சட்டக் கல்லூரியில் படிக்கும்போது, அன்று சேலம் அருள்மொழி என்று அறியப்பட்ட வழக்கறிகன்ர் அருள்மொழி போன்றவர்களுடன் இணைந்து 1987 நவோதயா எதிர்ப்பு போராட்டத்திலும், ஈழ ஆதரவுப் போராட்டத்திலும்.  தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

தலித் பேந்தர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் இயக்கம்

1988-ல் அரசுப் பணியாளராக மதுரை சென்ற பொழுதுதான், அங்கு பல அரசியல் நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். முக்கியமாக 1982-ம் ஆண்டு அம்பேத்கரின் மனைவி சவீதா உருவாக்கிய பாரதிய தலித் பாந்தர் இயக்கத்தின் தமிழ்நாட்டுப் பொறுப்பாளர் மலைச்சாமி அறிமுகமாகிறார். அவருடன் இணைந்து அந்த இயக்கத்தில் தீவிரமாக செயல்படுகிறார். 1989-ம் ஆண்டு மலைச்சாமி அவர்கள் இறந்து விட, இயக்கத்தின் தலைமைப் பொறுப்பினை திருமாவளவன் ஏற்கிறார். மலைச்சாமி அவர்கள்தான் தலித் அரசியல் குறித்த பார்வையை தனக்கு ஏற்படுத்தியதாக திருமாவளவன் சில பேட்டிகளில் கூறியுள்ளார். அந்த அமைப்பு 1991-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் அமைப்பாக உருவானது.

தலித் பேந்தர் (DPI) இயக்கத்தில் திருமாவளவன்

துவக்கத்தில் தேர்தல் அரசியலில் இருந்து விலகி நின்று, தலித் மக்களின் முன்னேற்றம், தமிழீழ விடுதலை, பஞ்சமி நில மீட்பு என பல போராட்டங்களை முன்னெடுத்த இயக்கம், அரசின் ஒடுக்குமுறை காரணமாக தேர்தலில் பங்கெடுக்கும் கட்சியாக உருவெடுத்தது.

அரசியல் கட்சியாக தேர்தல் பாதையில்

சந்தித்த முதல் தேர்தலிலேயே பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றதால், திருமாவளவன் அவர்களை அரசியல் உலகு திரும்பிப் பார்த்தது. அவர்களுடன் கூட்டணி வைத்திருந்த தமிழ மாநில காங்கிரசின் ப.சிதம்பரம் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் பெற்ற வாக்குகளை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

2001 மங்களூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் திமுக கூட்டணியில் இருந்து விலகியத்தோடு, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 2009 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழில் பெயர்கள் மாற்றம்

தமிழர்களுக்கு சமஸ்கிருதத்திலும், ஆங்கிலத்தில் இருக்கும் பெயர்களை மாற்றி தூய தமிழில் பெயரை சூட்டிக் கொள்ள ஒரு லட்சம் பேருக்கு தமிழில் பெயர் மாற்றும் இயக்கத்தையும் முன்னெடுத்தார். விடுதலை சிறுத்தைகள் அனைவரும் தங்கள் பெயரினை தூய தமிழில் மாற்றிக் கொண்டனர்.

முனைவர் பட்ட ஆய்வு

1981-ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் இசுலாமியர்களாக மதம் மாறினர். இது அகில இந்தியாவையும் உலுக்கியது. அதனை மையமாக வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் “Mass Religious Conversion of Meenakshipuram – A Victimological Perspective” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்துள்ளார். இந்த ஆய்வு அறிக்கை மதமும் மதமாற்றமும் என்ற தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான தாய்மண் இதழில் இவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அமைப்பாய் திரள்வோம் என்ற தலைப்பில் புத்தகமாக கொண்டு வந்துள்ளார்கள். அவர் எழுதிய நூல்கள் பதினேழு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

அரசியல் முழக்கங்கள்

கல்லூரி காலம் முதலே கவிதை எழுதும் திருமாவளவன் அவர்கள், விடுதலை சிறுத்தைகளின் சுவர் எழுத்து முதல் அரசியல் முழக்கங்கள் வரையும் அவரேதான் எழுதுவார். 

”தீலிபன் 
தன்னைத் தொட
தண்ணீருக்கு 
தாகம் கொடுத்தவன் ”

”சாதி ஒழிப்பே
தமிழ்த் தேச மக்கள் விடுதலை”,

”சாதியத்தை வேரறுப்போம்
தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்”,

“இருட்டும் திருட்டும் ஒரு முடிவுக்கு வரும்
அதிகாரமும் எதிர்காலமும் நம் கைகளுக்கு வரும்.” 

”கடைசி மனிதனுக்கும் அதிகாரம் 
எளிய மனிதருக்கும் ஜனநாயகம்!”

ஆகிய முழக்கங்கள் இதில் முக்கியமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *