WHO அமெரிக்கா

WHO-வில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதால் என்ன நடக்கும்?

ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனத்தில்(WHO) இருந்து அமெரிக்கா வெளியேற உள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் அறிவித்துள்ளார். இதற்கு காரணங்களாக உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு சாதகமாக செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணாமாக அமெரிக்காவால் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஒதுக்கப்படும் பெரும் நிதிகள், வளங்கள் குறைந்து போய்விடும் என்பதுபோல் தெரிந்தாலும், அமெரிக்கா போன்ற வல்லரசு சக்தியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு உலக சுகாதார அமைப்பு ஜனநாயக முறையில் இயங்க முடியும் என்பதே உண்மையாக இருக்கிறது என்று சர்வதேச அரசியல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஜூலை மாதம் அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா

அடுத்த ஆண்டிலிருந்து உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதாக ஜூலை மாதம் அமெரிக்க அரசு ஐ.நா-வின் பொதுச்செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்திற்கு எதிராக தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரம் செய்து, அந்நிறுவனத்திற்கு அமெரிக்கா தருவதாக ஏற்றுக் கொண்டிருந்த நிதியினையும் அளிக்க மறுத்து வந்த நிலையில், தற்போது வெளியேறும் அறிவிப்பு வந்திருக்கிறது. 

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு உலக அளவிலான சுகாதார அமைப்பிற்கு அதிக ஆதரவு தேவைப்படும் நெருக்கடியான சூழலில் இந்த முடிவினை அமெரிக்கா எடுத்திருக்கிறது. அமெரிக்க அரசு ஐ.நா-வின் அனைத்து ஜனநாயக தூண்களையும் சிதைப்பதற்கு எப்போதுமே சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துதான் இருந்திருக்கிறது. இதனை பல நாடுகள் கண்டித்தும் வந்துள்ளனர்.

தனது தோல்வியினை மறைக்க WHO-வை பலிகடாவாக்க முயற்சிக்கும் அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு ட்ரம்ப் அரசாங்கத்தின் நிர்வாக தோல்வியும் மற்றும் லாப நோக்கில் மட்டுமே இயக்கப்பட்ட அமெரிக்க மருத்துவ கட்டமைப்புமே காரணம் என்பது உலக அளவில் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இச்சூழலில் உலக சுகாதார அமைப்பை குற்றம் சாட்டி பலி ஆடாக்கி தனது நிர்வாக தோல்வியினை மறைக்க முயல்கிறது ட்ரம்ப் அரசு. சீனாவுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுப்பதாகவும், கோவிட்-19 பற்றிய துல்லியமான தகவல்களை வழங்க தவறிவிட்டதாகவும் கூறியதைத் தவிர, உலக சுகாதார நிறுவனம் என்ன தவறு செய்தது என்பதனை அமெரிக்க அரசாங்கத்தினால் குறிப்பிட இயலவில்லை. 

கடந்த ஜனவரி மாதம் சீனாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றைப் பாராட்டி ட்வீட் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதற்கு மாறாக ஜூலை 31 அன்று, கடந்த சில மாதங்களில் சீனாவிற்கு சென்று வந்த வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் நுழைவதற்கு தடவிதித்து உத்தரவிட்டார். இந்த தடை உத்தரவினை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை ட்ரம்ப் சுட்டிக் காட்டி இருந்தார்.

WHA-வினால் பாதுகாக்கப்படும் WHO-வின் சமநிலை

உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக ட்ரம்ப் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த வலுவான ஆதாரமும் இல்லை. உலக சுகாதார அமைப்பின் கொள்கை முடிவுகளை எடுப்பது அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வமான உலக சுகாதார சபையே(World Health Assembly-WHA). இந்த சபையில் உலகின் 194 நாடுகள் உறுப்பினர்களாகவும் மற்றும் இரண்டு நாடுகள் இணை உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். WHA-வின் நடைமுறைகள் சில ஜனநாயக அணுகுமுறைகளைக் கொண்டிருப்பதாலும், அதில் வளரும் நாடுகள் (Developing Countries) மெஜாரிட்டியாக இருப்பதாலும் அதில் எடுக்கப்படும் முடிவுகளில் ஓரளவு சமநிலை என்பது பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சமநிலையை அமெரிக்கா எப்பொழுதுமே சிக்கலாகவே பார்க்கிறது. 

WHO-வால் லாபமடைந்து வந்த அமெரிக்க நிறுவனங்கள்

எப்படி பார்த்தாலும் உலக நிறுவனத்திற்கு உலகின் ஏதோ ஒரு நாட்டின் மீது ஏற்கனவே தனிப்பட்ட சார்பு நிலை இருக்கிறதென்றால், அது அமெரிக்காவை நோக்கிய சார்பு நிலை என்றே சொல்ல முடியும். ஏனென்றால் உலக சுகாதார அமைப்பின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மருத்துவ சேவைகள் எல்லாம் பெரும்பாலும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுடையதாகவே இருக்கிறது. இது உலக அளவில் பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகியது. மேற்கத்திய பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக கொள்கை முடிவுகளை தீர்மானிப்பதற்கு உலக சுகாதார அமைப்பின் அதிகார மட்டத்தில் அமெரிக்க அரசு செல்வாக்கு செலுத்தி வந்துது. இதற்கு எதிராக  உலக நாடுகள் பல முறை கண்டனங்களை தெரிவித்து வந்துள்ளனர். 

இதுகுறித்து மூன்று முறை உலக சுகாதார அமைப்பின் செயலாளராக இருந்த ஹாஃப்தன் மஹ்லேர் (Halfdan mahler) 1998-ம் ஆண்டு டேனிஷ் மொழி இதழான ’பொலிட்டிக்கன்’ எனும் இதழில் எழுதிய கட்டுரையில் உலக சுகாதார அமைப்பின் மீது குறிப்பிட்ட மருந்து நிறுவனங்கள் செலுத்தும் செல்வாக்கு ஆரோக்கியமற்றது என்று எச்சரித்துள்ளார். 

WHO-வில் சீர்திருத்தங்கள் தேவை..ஆனால் அமெரிக்கா சொல்லும் அடிப்படையில் அல்ல

ஐ.நா-வின் உலக சுகாதார அமைப்பு இந்த கொரோனா  நெருக்கடியில் முக்கியமான பங்களிப்பை செய்து வருவது நாம் அறிந்ததே. குறிப்பாக நோய் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பல்வேறு நாடுகளுடன் ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது, நெறிமுறைகளை வகுப்பது, ஒருங்கிணைந்து ஆய்வுகளை ஊக்குவிப்பது, பிற நாடுகளுக்கு தேவையான உபகரணங்களையும் கொடுத்து உதவுவது என தொடர்ச்சியாக பல வேலைகளை செய்து வருகிறது.

இன்னும் உலக சுகாதார அமைப்பின் உள்கட்ட ஜனநாயகத்தை பலப்படுத்துவது மற்றும் அமைப்பின் செயல்பாடுகளுக்கு பொறுப்பான நெறிமுறைகளை வகுப்பது போன்ற முக்கியமான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் WHO-வில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் ட்ரம்ப் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படக்கூடாது. 

இது போன்ற பேரிடர் காலங்களில் உலக சுகாதார நிறுவனம் போன்ற அமைப்புகளின் உதவி தவிர்க்கப்பட முடியாத ஒன்றே. தொடர்ந்து இந்த அமைப்பின் வேலைத்திட்டம் ஒரு நோய்க்கு எதிரான மருந்துகளை கண்டுபிடிப்பதுடன் நின்றுவிடாமல், அது வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மருத்துவ பொருட்களை வணிகமயமாக்கல், அறிவுசார் சொத்துடமை என்ற பெயரில் ஒற்றை நிறுவனத்தின் சார்புடையதாக ஆக்குதல் போன்றவற்றை தடுத்திட உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை ஆதிக்கத்துடன் எதிர்கொள்ளும் அமெரிக்கா

கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேரவேண்டிய மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை கொள்ளையடிப்பதைப் போன்று வலுக்கட்டாயமாக அமெரிக்கா தன் நாட்டிற்கு பெற்றுச் சென்றது. இதேபோல் ஜெர்மனி, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டிய உபகரணங்களும் அமெரிக்காவிற்கு திருப்பி விடப்பட்டது. இந்த வஞ்சகமான செயலுக்கு உலக நாடுகள் அமெரிக்காவிற்கு கண்டனங்களை தெரிவித்தனர் ஆனால் இந்தியா அமைதி காத்தது. இவையெல்லாம் உலகத்தில் தனக்கு இணை எவருமில்லை என்ற அடிப்படையில் அமெரிக்கா செய்த மோசமான விடயங்களாகும்.

WHOவிற்கு ஒப்புக் கொண்ட நிதியையும் முறையாக கட்டவில்லை

அமெரிக்க அரசு உலக சுகாதார நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய ஆண்டு நிலுவைத் தொகைகளைத் தர தொடர்ச்சியாக மறுத்தே வந்துள்ளது. ஐ.நா அமைப்பு என்பது அதில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளின் வருடாந்திர நிதிப் பங்களிப்பை வைத்துதான் செயல்படுகிறது. ஒவ்வொரு நாடும் அளிக்க வேண்டிய தொகை என்பது அந்த நாட்டின் செல்வவளம் மற்றும் மக்கள்தொகை அளவினை அடிப்படையாகக் கொண்டது.

எந்தெந்த நாடுகள் எவ்வளவு நிதி அளிக்கிறார்கள்?

இதில் அமெரிக்க அரசு மொத்த நிதியில் 22% கொடுக்கிறது. இதற்கு பின் ஐரோப்பிய ஒன்றியம்(30%), சீனா(12%), ஜப்பான்(8%), இந்தியா(0.83%) பங்களிக்கின்றனர். 2020-ம் ஆண்டிற்கான உலக சுகாதார அமைப்பின் மொத்த பட்ஜெட் 489 மில்லியன் அமெரிக்க டாலர். இதில் 115 மில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்க அரசு வழங்குகிறது. சீனா 57 மில்லியன் டாலர்கள், இந்தியா 4 மில்லியன் டாலர்கள் வழங்கும். இதில் அமெரிக்கா தொடர்ந்து நிலுவை வைத்து வருகிறது. கடந்த வருடம் அமெரிக்கா செலுத்த வேண்டிய தொகையில் மூன்றில் ஒரு பங்கினை மட்டுமே செலுத்தி உள்ளது.

ஒரு உறுப்பு நாடு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முழுமையான நிலுவைத் தொகையை செலுத்தாமல் போகும் பட்சத்தில், அந்த நாட்டின் வாக்குரிமை ரத்தாகும் என்று ஐநாவின் விதிகளின் 19-வது சரத்து(Article 19 of UN charter) கூறுகிறது. 

இது போன்று அமெரிக்காவானது ஐ.நாவின் அமைப்புகளை நிதி ஆதார ரீதியாக முடக்குவது இது முதல் முறையும் அல்ல. குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையை சரியாக செலுத்தி வரும் நிலையில், உலகின் வளர்ச்சியடைந்த முன்னணி நாடாக திகழும் அமெரிக்கா கொடுக்க வேண்டிய நிதியை சரியாக கொடுக்க மறுக்கிறது.

WHO மட்டுமல்ல UNESCO-வும் தப்பவில்லை

அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் முதல் அமைப்பும் WHO அல்ல. ஏற்கனவே 2018-ம் ஆண்டு  யுனெஸ்கோ (UNESCO) அமைப்பில் இருந்து அமெரிக்கா இருமுறை வெளியேறியுள்ளது. UNESCO-வில் பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் அனுமதியுடன் பாலஸ்தீனத்தினை ஒரு உறுப்பினராக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு பாலஸ்தீனின் மாநகரமான ஹெப்ரான் (Hebron) யூனெஸ்கோ-வின் உலக பண்பாட்டு தளமாக (World Heritage Site) அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுகளைக் கண்டித்து 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கா யூனெஸ்கோவில் இருந்து வெளியேறியது.

இதற்கு முன்பே 1984-ம் ஆண்டின் யுனெஸ்கோ அமைப்பின் தலைவராக இருந்த செனகல் நாட்டைச் சேர்ந்த மஹ்தார் மம்போ (Mahtar M’Bbow)-க்கு எதிராக குற்றச்சாட்டை வைத்து அமெரிக்கா வெளியேறியது. அமெரிக்கா வெளியேறியதன் காரணமாக யுனெஸ்கோ அமைப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்த காரணத்தினால் 2013-ம் ஆண்டு மீண்டும் இணைந்து கொண்டது. 

அமெரிக்கா இல்லாமல் சிறப்பாக இயங்கிய யுனெஸ்கோ

யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது அமெரிக்காவிற்குத் தான் பாதகமாக அமைந்தது. 1984-க்கு முன்பு வரை அமெரிக்கா நிறுவனங்களிலிருந்து பெற்றுவந்த சேவைகள், புத்தகங்கள் முதலியவை நிறுத்தப்பட்டன. மேலும் யுனெஸ்கோ அலுவலங்களில் அமெரிக்க அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்தது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் 1984-ம் ஆண்டிற்குப் பின்னர், அமெரிக்காவின் தலையீடுகளும் அடாவடித்தனங்களும் இல்லாததால், யுனெஸ்கோ அமைப்பில் பல ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகள் நடைபெற்றன. 

எனவே உறுப்பினர் தொகையை கட்ட மறுத்ததைத் தொடர்ந்து, WHO-வில் இருந்து வெளியேற அமெரிக்கா எடுத்திருக்கும் முடிவானது, WHO-வையும் ஒரு சிறந்த இடமாக மாற்றக் கூடும்.

அமெரிக்கா வெளியேறுவதால் WHO ஜனநாயகமாகலாம்

WHO-வில் அமெரிக்காவின் பங்களிப்பு 22 சதவீதமாக இருந்தாலும், உலக சுகாதார நிறுவனம் அதை விட அதிக தொகையினை அமெரிக்காவில் தான் செலவிட்டது. மருந்துகள், உபகரணங்கள் என பெரும்பான்மையானவை அமெரிக்க நிறுவனங்களிடமே வாங்கப்பட்டன. எனவே WHO-வினால் அமெரிக்காவுக்கு வரும் ஆதாயம் அதிகமாகவே இருந்தது வருகிறது. அமெரிக்கா இல்லாமல் WHO-வின் முடிவெடுக்கின்ற துறைகள் சுதந்திரமாக இயங்க முடியும். தொடர்ச்சியாக தனது நலனுக்காக உலகின் பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளை WHO-வில் எழாதபடி செய்துவந்த அமெரிக்காவின் செயல்களை தடுத்திட முடியும். 

இதையும் தாண்டி அமெரிக்கா வெளியேறிய உலகளாவிய ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டமைப்புகளின் பட்டியல் மிக நீண்டது.   

  1. பல்லுயிர் தொடர்பான  ஒருங்கிணைவு மற்றும் நெறிமுறைகள் (Convention on Biological Diversity and its protocols)
  2. குயோடோ ஒருங்கிணைவு (Kyoto Protocol)
  3. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் பாசெல் ஒப்பந்தம் (International Criminal Court and Basel Convention)
  4. பாரிஸ் ஒப்பந்தம் (Paris Agreement)
  5. ஐநா மனித உரிமை ஆணையம் UN Human Rights Council)

போன்ற பல ஜனநாயக முன்னெடுப்புகளிலிருந்து வெளியேறி உள்ளது. 

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) மீது அமெரிக்க தொடுத்திருக்கும் இந்த தாக்குதலானது அரசியல் காரணங்களுக்கானது. எப்படி இருந்தாலும் அமெரிக்கா WHO-விலிருந்து வெளியேறுவது குறித்து உலகம் கவலைப்பட வேண்டியதில்லை.

நன்றி : EPW Engage

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *