கவிதை என்பது சிந்தனையின் சிதறல், வாக்கியங்களை வசப்படுத்தும் கலை. மனதிலிருந்து எழும் எண்ணங்களுக்கு செயற்கையான வண்ணங்கள் பூசுவதாகவே தற்கால கவிதைகள் பெருகி வருகின்றன . மண்ணிலிருந்து, மனதிலிருந்து எழுந்து மக்களுக்காக பேசக்கூடிய கவிதைகள் அபூர்வமானவை. ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வலிகளை, வேதனைகளை, அனுபவங்களை பிரதியெடுத்து சமூகத்தின் வடிகாலாக, பிரதிநிதியாக நின்று பேசும் கவிதைகள் மிக மிக அற்புதமானவை.
ஒரு திரைப்படத்தில் எங்கிருந்தோ வலுக்கட்டாயப்படுத்தி கடத்திக்கொண்டு வந்து வேறொரு நாட்டில் அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் கதையாக விரியும் அதன் திரைக்கதை. வந்த இடத்தில் அந்த மொழியும், நிலமும் அந்நியமாகவே தெரியும். உள்ளக்கிடக்கைகளை பகிர்ந்துகொள்ள ஆளில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் அந்த அடிமைகளுள் ஒருவன் ஒருநாள் ஒரு அலங்கார செடியைப் பார்ப்பான். அது அவனது சிறுவயதில் அவனது சொந்த நாட்டில் தினந்தோறும் விளையாடுகையில் அவனோடு நாள்தோறும் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த செடி. அப்படி நினைவில் இருக்கும் ஒரு செடியை அதுவும் அந்த புதிய மண்ணில் காண்பான். அதை நீண்ட வருடங்களுக்குப் பின் காண்கையில் அவனது கண்களிலில் இருந்து கண்ணீர் ஊற்றெடுக்கும்.
ஒரு செடி அவனது நினைவுகளைக் கிளறி அவனது கடந்த கால வசந்தத்தின் சாட்சியாக நின்று கொண்டிருக்கும். அவனது சொந்த நாட்டிலிருந்து வந்த செடி, அவனது சொந்த நிலத்தை சார்ந்த செடி, இவனைப்போல் அதுவும் மண்ணை பிரிந்து வந்திருக்கும், வந்த இடத்தில் ஒரே மண்ணிற்குரியவர்கள் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டார்கள். மனிதனால் உணர்வுகளை கடத்த முடியும் செடியால் என்ன செய்ய இயலும்? அதுபோல இந்த கவிதை புத்தகங்களில் நிறைந்திருக்கும் கவிதைகளைப் படிப்பவர்களின் கண்கள் கலங்குகின்றன. கவிதைகளோ வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியாக நின்று கொண்டிருக்கின்றன. வாருங்கள் இந்த இரு புத்தகங்களிலும். கண்டுகொள்வோம்..கவிதைகளை நாமும், நம்மை கவிதைகளும்.
இரண்டு கவிதை புத்தகங்கள் பேசும் இரண்டு தொழில்கள்
வாழ்ந்தவர்கள் மனம் விட்டு எழுதியிருக்கிறார்கள். மழையில் எழும் மண்வாசம் போல கவிதைகளில் இருந்து எழும் மனவாசம் கண்களை நனைக்கிறது. இரு நூல்கள்..இரண்டும் இரு வேறுவிதமான தொழில்கள் செய்யும் கவிஞர்களைக் காட்டியிருக்கிறது என்றாலும் நாம் நினைத்துப்பார்க்காத இரு வேறு உலகங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. தனித்தனியாக இவை இரண்டையும் அறிமுகப்படுத்துவதை விட இரண்டையும் ஒன்றாக அறிமுகப்படுத்துவதே சிறப்பு.
முதல் புத்தகம் வாழ்வின் அங்கமான சவரக்காரர்களின் வாழ்வினை சொல்லிச்செல்லும்.
“ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” – எழுதியவர் கலைவாணன் இ.எம்.எஸ்.
இரண்டாம் புத்தகம் பொற்கொல்லர்களின் வாழ்வினை பிரதியெடுக்கும்.
“உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்” – எழுதியவர் தாணு பிச்சையா.
இரண்டு புத்தகங்களையும் படித்தபின் இரு கவிஞர்களிடமும் கவிதைகளைப் பற்றி உரையாடவும் செய்தோம். அவர்களின் உரையாடல்களையும் இங்கு பதிவு செய்கிறோம்.
“ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” – கலைவாணன் இ.எம்.எஸ்
புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே கவிதையொன்று தெரித்து விழுகிறது. அதை தொடர்ந்த பக்கங்கள் ஒவ்வொன்றும் பற்றியெரிகின்றது, நீதி கேட்கின்றது. போலிப்பெருமையை கேள்விக்குள்ளாக்குகிறது. சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியெடுக்கிறது.
“அப்பா
வெட்டியும் வழித்தும்
பெருக்கி கூட்டி
மூலையில் வைத்திருக்கும்
கருப்பும் வெள்ளையுமான
மயிர்களின் வயலில்
அரிசியும் கிழங்கும் விளைந்தன
பிறகு அது
என் உடலில்
இரத்தமும் சதையுமானது”
‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்கிறார் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர். கிறிஸ்துவமோ ”தேவன் மனிதனானார்; வார்த்தை மாம்சமானது; அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; (யோவா.1:14)” என்கிறது.
இங்கு கவிஞர் தான் சொல்லியிருக்கும் மயிர்களின் வயலில் விளைந்த அரிசியும் கிழங்கும், உடலில் இரத்தமும், சதையுமானது என்கிறார். நவீன அறிவியலின் இக்காலகட்டத்தை ஆராய்ந்தால் சலூன் கடைகளிலில் சேமிக்கப்படும் மயிர்கள் பல்வேறு தரப்படுத்தலுக்கு பின்னர் உரமாக மாற்றப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கீரை விளையும் வயல்களில் உரமாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் குழந்தைகள், பெரியவர்கள் விரும்பும் சாக்கலேட்டுகள் தயாரிப்பிலும் மயிர்களின் புரதம் பல்வேறு வேதி மாற்றங்களுக்கு பின் பயன்படுத்தப்படுகிறது. நாவிதர்களுக்கு இரத்தமும் சதையும் கொடுத்த மயிர்களின் வயலில் இன்று கீரைகளும், சாக்லேட்டுகளும் விளைகின்றன. ஆனால் ருசிக்காக சாப்பிடுவதற்கும் பசிக்காக சாப்பிடுவதற்கும் வேறுபாடுண்டு.
“களை கட்டியிருந்தது
பிச்சாண்டி ஆசாரியின்
கல்யாண வீடு
முதல் பந்தியில
பக்கத்து கோவிந்தன் நாயர்
இலைக்கு பருப்பு வந்தது
இப்பவே யாம்புல இருந்தியன்னு
சோறு விளம்புன ஞானபிரகாசம்
ஓடுங்கல நாசுவ தயாளின்னு
எழுப்பி விட்டான்
என்னையும் என் அம்மையையும்
எல்லா விசேஷ வீட்டுலயும்
ஒரு ஞானபிரகாசம் இருப்பான்
எங்களை
விரட்டி விடுகிறதுக்கு.”
பசிப்பிணியே உடலில் உயிர் உள்ளவரை உள்ளிருந்து உணர்த்தும். அதனாலேயே உயிரினங்களுக்கு உணவளித்தலே பெரும் அறம், தன் வாழ்வின் அறம் என பசிப்பிணி தீர்க்க அட்சயப் பாத்திரம் ஏந்தினாள். மணிமேகலை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார் ‘பிணிகளிலே மிக கொடியது பசிப்பிணி’ என்று கருதியே தர்மசாலை உருவாக்கினார். பசி ஒன்றுதான் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. பசிதீர்க்க வந்தவர்களை விரட்டிவிடுதல் எந்தவகையிலும் அறம் ஆகாது என்பதை எல்லோரும் உணரட்டும்.
“சபரிமலை போயிற்று
சப்பிப் போட்ட பனங்கொட்டை மாதிரி
தலைமுடியும் தாடியுமா வந்த
தங்கப்பன் நாயரை
வரணம் வரணம்னு சொல்லி
பல்லுக்காட்டி
செயர்ல இருத்தி
முன்னால கொஞ்சம் முடிவிட்டு
சைடெல்லாம் பொடியா விட்டு
சவரம் பண்ணி மீசை செதுக்கி
மூக்கு காது முடி வெட்டி
முகத்துல தண்ணியடிச்சு
சீனாகாரம் தடவி
குட்டி குரா பவுடரும்
ஸ்னோவும் போட்டு
எழுப்பி நிறுத்தி
அக்குளும் வலிச்ச பொறவு
அவரு சுருட்டி கொடுத்த
அஞ்சு ரூபாய்
அப்பா முதுகு வளைஞ்சு
வாங்கும் போது
ராஜ ராஜ சோழன் சிலையை செய்தவன்
பிச்சையெடுத்தது போல இருந்தது”
எதையுமே சொல்ல தோன்றவில்லை. மலையை போல் கனக்கிறது இக்கவிதை. துயர் மிகும் வரிகளை இன்றிரவு எழுதக்கூடும் என பாப்லோ நெரூடா காதலின் துயரத்தில் சொல்லியிருக்கிறான். ’துயர் மிகும் வரிகளை இன்றிரவு படிக்கக்கூடும்’ என்பதாக என் நினைவு மாறியிருக்கிறது.
“சுகுமாரன் ஏமானே
நன்றாக யோசித்துப் பார்
காலம் ஒரு நாள் மாறும்
உன் கொட்டங்களெல்லாம் அடங்கும்
ஜாதி மதங்களை கடந்து
மனதை நேசிக்கின்ற
ஒரு காலம் வரும்.
அன்று உன் மீது எல்லோரும் காறி
துப்புவார்கள்.
மாறிவிடு இல்லையேல்
மாற்றப்படுவாய்”
இப்படி
நாடக டயலாக்கை
பேசி முடித்தவுடன்
ஸ்கிரினுக்கு பின்னால் வந்து
ஒரு கப்பு சாராயம் குடித்தார்
செத்த வீட்டில் வைத்து
லே நாசுவ பய வந்திட்டானா
என்று நிசாரமாக கேட்ட
சுகுமாரன் நாயர் மேல் இருந்த
கோபம் அப்போதும் தீர்ந்திருக்காது
அப்பாவுக்கு “
ஆஸ்திரேலிய பழங்குடிகள் 18-ம் நூற்றாண்டு வரை காடுகளில் வாழும் விலங்குகள் வகைப்பாட்டில் வைத்திருந்தது அப்போதைய அரசுகள். அறிவு வளர வளர இவை மாறின இன்று பூர்வகுடிகளின் பாரம்பரிய அறிவினை செல்வமாக பறிக்கிறது நாகரீக மனித இனம். ஆனால் சுதந்திரம் அடைந்து விட்டதாக அறிவித்த பின்னரும் அடித்தட்டு மக்களுக்கு இன்னும் சுதந்திரம், சமஉரிமை கிடைக்கவில்லை. உருவகத்திலேயே பழிதீர்க்க வேண்டியிருக்கிறது. இனி வாளேந்தட்டும், போராடட்டும் ஒடுக்கப்படும் மக்கள்.
“இராத்திரி
அப்பா மிச்சம் வைத்த
கஞ்சியை குடிக்க
பசியோடு காத்திருப்பேன்
அதுல….மிச்சர் பொடியும்
எவனுக்கோ
வெட்டி தள்ளிய
அஞ்சாறு முடிகளும் மிதக்கும் “
மகனுக்கு பசிக்கும் என அறிந்து தினமும் மிச்சம் வைக்கும் தந்தையை அறியச்செய்கிறது இக்கவிதை.
“குளிச்சு சாமி கும்பிட்டு
கஞ்சி குடிச்சிட்டு
வாரது வரைக்கும்
மகளுக்கு பிரசவம் பார்க்க
கூப்பிட வந்த
ஆசாரிமார் தெரு
சுப்பம்மா ஆச்சி
காலுல வென்னி
ஊத்துன மாதிரி
எங்க வீட்டு வாசலில்
நிக்க காளியாம இருக்கா
அவ கூட போயி
இன்னும் கொஞ்ச நேரத்துல
சூலி
விசாலாட்சிக்க வயத்துல இருந்து
ஒரு கோம்ப பயல
வெளிய இழுத்து
போட்டுட்டு வருவா அம்மா
புதுசா பொறந்த பய
முதலுல பாத்ததும்
அவனை முதலுல
தொட்டதும் ஒரு
நாசுவத்தின்னு
அந்த மண்டையனுக்கு
தெரியவா போகுது “
இதுவே யதார்த்தம். தாயின் கருவறையிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு குழந்தையின் பின்னாலும் இப்படிப்பட்ட சாமானியர்களின் பங்களிப்பு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது. சமூகம் என்பது அனைவரும் ஒன்றிணைந்ததே.
”பிச்சையெடுத்தாலும்
பார்பர் ஷாப் வேலைக்கு
போக கூடாதுன்னு
சொல்லிட்டா அம்மா
லாரில கிளியா இருக்கும்போது
விருது நகர் பஸ்ஸ்டாண்டு
குளிரூம்ல
நான் குளிச்ச பொறவு
நீ குளில நாசுவத்தாயளின்னுட்டு
சோப்பு நுரையோடு
என்னை வெளியே வர சொல்லி
டிரைவர் குளிக்க போனான்
பல்லு தேச்சுட்டு நின்ன
கண்ட பயக்க எல்லாம்
ஒரு மாதிரியா பாக்கானுக
அப்பதான் தோணிச்சு
கெளரவமா
அப்பாக்க வேலைக்கே
போயிருக்கலாமோன்னு “
அவமானம் ஒரு மனிதனை சிதைக்கக்கூடியவை. காரணமே இல்லாமல் அடையக்கூடிய அவமானங்கள் நிரந்தர நினைவுகளாக துரத்திக்கொண்டே இருப்பவை. சாதியின் பேரால் சகமனிதனை புண்படுத்தும் மனிதர்களை அடையாளமிடுகிறது இக்கவிதை.
“திருவனந்தபுரத்துல
திவாகரன் நாயர் தெருவுக்குள்ளே
ரேவதி அக்காவுக்க வீடு
மக கல்யாணத்துக்கு
கார்டு கொடுக்க போயிருந்தேன்
மருமகனுக்கு
பார்பர்ஷாப்புல
வேலைன்னு சொன்னதும்
வாய பொத்தி
காப்பி தந்து
பஸ் ஏத்தி விட்டுட்டா
என்னை
அவ அங்க
ஒரிஜினல் நாயராம் “
இது நிறைய பேருக்கு தெரியாத வாழ்வின் இருண்டபக்கங்கள். தன் அடையாளத்தை மறைத்துவாழும் இழிநிலையை சகமனிதர்களுக்கு கொடுத்திருப்பது இச்சமூகத்தின் பேரவலம்.
“ராஜ கொட்டாரத்தில்
தாத்தாவுக்க அப்பா
பார்ச்சன் பண்டிதர்
பண்டுவம் முண்டிதம்
இங்கிதம் சங்கீதம் கள்ளு
சுதந்திர தேதிகளில்
தாத்தா கோபாலன் வைத்தியர்
பண்டுவம் இங்கிதம்
முண்டிதம் சாராயம்
கொஞ்ச நாளைக்கு முன்ன
அப்பா சங்கரன் ஆசான்
சங்கீதம் முண்டிதம்
மாம்பட்டை
இப்போது
நான் நாசுவன் மட்டும் “
வரலாறு சதி செய்திருக்கிறதா ? அல்லது வரலாற்றின் பேரில் மனிதர்கள் சதி செய்திருக்கிறார்களா ? மனிதர்களே சதி செய்திருக்கிறார்கள். கைபர் கணவாயின் வழியாக வந்தவர்களால் இம்மண்ணின் பூர்வீக பண்டிதம், மருத்துவப் பண்டிதம் எல்லாவற்றையும் அழித்தாயிற்று. நாசுவன் என்ற சாதி பட்டத்தையும் கொடுத்தாயிற்று.
“சுருங்கிய தோல்
ஒட்டிய கன்னம்
சவர கத்திக்கு
வரைந்த கண்ணாய்
நரை முடியோடு
அம்மா அழகு”
தன்னுடைய தாயை பற்றி பதிவு செய்திருக்கும் கவிதை சவரகத்தியில் வரைந்திருக்கும் ஓவியம்!
“அப்பா பிணத்தின்
காலில்
தீ வைக்கும் போது
ஞாபகம் வருகிறது
அவரின்றி அலைந்த
நாட்கள்”
தன்னுடைய தந்தையின் வாழ்க்கை பயணத்தின் இறுதி தடங்களை ஞாபகத்தீயில் மூட்டுகிறார்.
கவிதை நூலை படித்துவிட்டு கவிஞரை தொடர்புகொண்டோம். இந்த புத்தகத்தின் கவிதைகளை அதை இந்த சமூகத்திற்கு பகிர்ந்த படைப்பாளியுடன் உரையாடக்கூடிய சந்தர்ப்பமும் அமைந்தது. அலைபேசி வழியே தொடர்பு கொண்டதில் அவரும் மகிழ்ந்து நம்முடன் உரையாடினார். வாருங்கள் உரையாடுவோம் கவிஞருடன்.
கவிஞர் கலைவாணன் இ.எம்.எஸ் அவர்களுடன் மெட்ராஸ் ரேடிகல்ஸ் நடத்திய உரையாடல்
Madras Radicals: “ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் ” இப்படி ஒரு தலைப்பில் ஒரு புத்தகத்தை பார்க்கும் சராசரி வாசகன் அதிர்வடையக்கூடும்
(இடைமறிக்கிறார் ) “அருவருப்பாக இருக்கா?” என்கிறார்.
அப்படியல்ல முற்போக்கு நூல்களை தேடி வாசிக்கும் வாசகர்கள் தேடி தேடி வாங்கும் ஒரு நூலாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். ஒரு கவிஞர் முதல் புத்தகம் எனும்போது வணிகரீதியிலான கவரக்கூடிய பெயரை வைக்கக்கூடும் அதை உடைத்துக்கொண்டு வந்த நூலாக இருப்பதால் இந்த பெயரை ஏன் வைத்தீர்கள், அதன் பின்னணியை அறிவதற்காக கேட்கிறோம்.
கலைவாணன் இ.எம்.எஸ்: “நம்ம ஒரு படைப்பாளி என்ற சிந்தனையில் இருந்து வந்ததல்ல இந்த படைப்பு.
மேலும் இது நீண்டநாள் தொகுப்பும் கிடையாது திடீர்னு நண்பர் ஒருவர் கொடுத்த தூண்டுதலால் எழுதப்பட்டது, மொத்த கவிதையையும் ஒரு வாரத்துல ஆரம்பிச்சு அதே வாரத்துல முடிச்சேன். அதற்கப்புறம் இதை சரி பண்ணுறதுக்கு ரெண்டு மாசம் ஆச்சு. இது உருவாகும் போதே வைத்த பெயர் “நாசுவத்தி மகன்” அப்படிதான் வைத்திருந்தேன், அப்ப என்ன சொன்னாங்கனா ‘தோட்டி மகன்’ அப்படியெல்லாம் நிறைய வந்திருக்கிறது. அதேபோல ரொம்ப பழைய பேர் மாதிரி தோணுதுன்னும் சொன்னாங்க.
புத்தகத்தின் பேருங்கறது வந்து நான் மட்டுமில்ல, பொதுவாகவே எந்த படைப்பாளியும் அவங்க வாழ்வியலோடவே ஒரு படைப்பு படைச்சாங்கன்னா அவங்களால இந்த மாதிரி பெயரை வைக்கமுடியும். சிந்திக்க முடியும். வாழ்வியலோடு சேர்ந்து ஒரு படைப்பு உருவாகும்போது இதேபோல அதனுடைய தலைப்போ அது சார்ந்த விசயங்களோ, அது சார்ந்துதான் வரும். உதாரணத்துக்கு இந்த ரோடு போடுறாங்கல அவங்களுக்கு கையில ஒரு காயம் வந்துருச்சின்னு வைங்களேன், அந்த தார் இல்லன்னா மண்ணெண்ணெய் எடுத்து அப்பிடுவாங்க.அவங்களுக்கு அதுதான் மருந்து. அதே போல அந்தந்த வாழ்வியல் சார்ந்து, அந்த பிம்பம் சார்ந்து, சிக்கல் சார்ந்து வாழறவர்கள் அல்லது அதை சார்ந்து படைக்கிறவர்களுக்கு இயல்பாகவே இந்த மாதிரி பெயர் அமைஞ்சிடும். அவ்ளவுதான்.”
Madras Radicals: முதன்முதலாய் சாதியை எதிர்கொண்ட அனுபவமாய் அல்லது நிகழ்வை எது நிழலாடுகிறது ?
கலைவாணன் இ.எம்.எஸ்: “சாதிய ரீதியா பாதிப்பு என்பது கிட்டத்தட்ட எனக்கு நினைவு தெரிஞ்சு, ஒரு குழந்தைக்கு அஞ்சு வயசுல சிலது புரியும் பாத்தீங்களா அந்த டைம்லயே அத உணரத்தான் செஞ்சேன். ஒரு கவிதையிலே கூட பதிவுசெஞ்சிருப்பேன். ஒரு உயர்சாதி தெருவிற்கு பக்கத்தில் இருக்கும்போது, அங்க பணக்காரரா இருக்கிற ஒருத்தர் வீட்டுவழியா நான், அம்மா, எங்க அக்கா, தங்கச்சி எல்லோருமே போவோம் (அப்ப வீட்டுல ரேடியோ கெடையாது). அவரோட வீட்டுல நிறைய பொம்மைகலாம் வாங்கி ஷோ கேஸ்ல வச்சிருப்பாரு. பார்க்க அழகா இருக்கும்.
ஒரு ரெக்கார்ட் ரேடியோ இருக்கும். முன்னாடி வந்த தொழில்நுட்பத்துல ரெக்கார்ட் போட்டா சுத்தும். அப்புறம் இந்த முள்ள தூக்கி வைக்கணும். ஆனா அவருகிட்ட அட்வான்சா இருந்தது அந்த ரெக்கார்ட் ரேடியோ, என்னன்னா ரெக்கார்ட் மட்டும் போட்டா போதும் இந்த முள்ளு ஆட்டோமேட்டிக்கா வந்து உக்காரும் பாட்டு முடிஞ்ச உடனே ஆட்டோமேட்டிக்கா போய் நின்னுக்கும். இது அப்ப அட்வான்ஸ் டெக்னலாஜி. அப்ப இதே மாதிரி கொண்ட விசயம் அவரு வீட்டுல இருக்கும்போது அதை ஜன்னல் வழியா பாக்குறதுக்கு நாங்க ரொம்ப ஆர்வத்தோட இருப்போம்.
வீட்டுகுள்ளலாம் ஏத்தமாட்டாங்க. ஏன்னா அவங்க உயர்சாதி, பணக்காரங்க. நாம வாசலில நின்னுதான் பாக்கமுடியும். அப்பவத்துல இருந்தே ஒரு விசயம் புடிபட ஆரமிச்சுருச்சு. ரைட்டு, இங்க எதோ ஒரு சிக்கல் இருக்கு ,நம்மள உள்ள விடல. போகக்கூடாது. கட்டுப்பாடு இருக்கு. இந்த விசயங்கள் எல்லாமே அந்த டைம்லயே நமக்கு அது என்னன்னு தெரியாம இருந்தாலும், ஒவ்வொரு இடமா வரும்போது அது புரிய ஆரமிச்சுருச்சி.
அப்புறம் எட்டாங்கிளாசு, பத்தாங்கிளாசு படிக்கும்போது ‘நாசுவ பய’னு எங்க அப்பாவை கூட இருக்கிறவனுங்க திட்றது. ‘அம்பட்டையான் பய’னு திட்றது இது எல்லாம் சிலத புரியவைச்சுது. சச்சரவோ,சண்டையோ பேச்சு வார்த்தைக்கு வரும்போது என்னதான் சிநேகிதனா இருந்தாலும் அந்த மாதிரி வந்துடும். அதேமாதிரி நண்பர்கள் வீட்டுக்கு அந்த வழியில யாரு வீட்டுலயும் நம்மள உள்ள சேக்க மாட்டாங்க. நம்ம போகவும் முடியாது. இதெல்லாம் வரும்போது சாதிய ரீதியா ஒடுக்கப்பட்டிருக்கோம், நமக்கு இதுதான் லிமிட்டு நம்ம போகமுடியாது, வர முடியாது இந்த புரிதல் நமக்கு இருந்துச்சு. அது அஞ்சு, ஆறு வயசுல இருந்தே இருந்துச்சு.“
Madras Radicals: சில கவிதைகளில் வெளியூரில் சாதியை மறைத்து வாழும் மனிதர்களுடைய நடத்தையை சொல்லியிருக்கிறீர்கள். இது சமூகத்திற்கு பயந்து நடக்கிறதா அல்லது கடந்தகால இழிநிலையிலிருந்து வெளியேறும் விதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா?
கலைவாணன் இ.எம்.எஸ்: “எப்படி அப்படினா, 1950 மாதிரி காலகட்டத்துல நான் சொல்லும் குமரி மாவட்டத்து சென்சஸ் திருவாங்கூர் சென்சஸ் எடுத்து பாத்தீங்கன்னா முப்பத்தி மூணாயிரம் பேரு என்னவோ நாவிதர்கள் இருந்திருக்காங்க. அந்த கணக்குப்படி பார்த்தா இப்ப கிட்டத்தட்ட ரெண்டு, மூணு லச்சம் பேராவது இருந்திருக்கணும். ஆனா இப்ப பாத்திங்கனா பத்தாயிரம் பேர் கூட இருக்கமாட்டாங்க போல. அதுக்கு என்ன காரணமுன்னு பாத்தீங்கன்னா சாதிய ரீதியான பிரச்சனை வந்து, நம்ம இனி நாவிதருனு அடையாளப்படுத்தக் கூடாதுன்னு தன்னை தானே மாத்திகிட்டவங்க நெறய பேரு. பின்ன திருமண பிள்ளய நாவிதர்ல கொடுக்கக்கூடாது அப்படினு சொல்லி இந்த உள் பிரிவுகள்ல கொடுக்க ஆரமிச்சு அப்படியே மாறிப்போனவங்க சில பேரு.
மேலும் இங்க மலையாளம் நிறைய பேசுவாங்க, வெளியூர்ல இருந்து இங்க பொண்ணெடுகிறவங்களுக்கு மலையாளம் பேசுனாவே உயர்சாதினு நினைப்பு. அதனால இவங்களும் தங்களை மலையாள உயர்சாதினு சொல்லிடுவாங்க. இப்படி சாதி மாறிப்போனவங்க நெறைய பேரு. அப்புறம் அரசு வேலை கிடைச்சு தன்னோட உறவுகளை வெளிகாட்டிக்க இயலாம சில பேரு, நிறைய பேரு உயர்சாதி வசிக்கக்கூடிய எடத்துல வீடுபாத்து இல்ல கட்டிக்கிட்டு போய்டுவாங்க. அங்க தன்னை நாவிதருனு அடையாளப்படுத்த முடியாது, அப்புறம் ஒதுக்கி வச்சிடுவாங்க.
ஆனா இப்போ கொஞ்சம் மாறியிருக்குன்னு நம்பறேன். முன்ன மாதிரி ஒதுக்கப்படுறது குறைஞ்சிருக்கு ஏன்னா இந்த சமூகம் கொஞ்சம் பொருளாதார ரீதியில முன்னேறியிருக்காங்க. இது படிச்ச படிப்பினால் வந்ததா இருக்கலாம். இப்போ பந்தியில விரட்டுற “ஞானப்பிரகாசம் ” குறைஞ்சிருக்காங்கனு நம்புறேன். ஆனாலும் ஒன்னு ரெண்டு பேரு எங்கயாவது இன்னும் இருந்துகிட்டுதான் இருக்காங்க.”
Madras Radicals: இந்த புத்தகம் வெளிவந்தவுடன் உங்கள் உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் சமூகம் சார்ந்தவர்களின் பார்வை எப்படியிருந்தது?
கலைவாணன் இ.எம்.எஸ்: “எனக்கு தொழில் தெரியாது, கடை போட்டு ஆள் வைச்சு நடத்த முடியல. க்ளோஸ் பண்ணிட்டேன். என் தாயார் இந்த தொழிலையே முற்றிலும் நிராகரிச்சாங்க. இந்த தொழிலே பையன் படிச்சிடக் கூடாதுனு ரொம்ப கவனமா இருந்தாங்க. அவங்க இறந்ததற்கு அப்புறம்தான் இந்த புத்தகம் வந்தது.
ஆனால் என் மனைவி, மகன்,மகள் எல்லாம் இந்த புத்தகத்தை படிச்சிருக்காங்க. என்னுடைய உறவினர்களும் படிச்சிருக்காங்க அவங்க கொஞ்சம் எதிர்மறையிலதான் இருக்காங்க, எதுக்கு தேவையில்லாம இந்த புத்தகம் இப்போ? மத்த கம்யூனிட்டிகாரங்களும் படிப்பாங்க ஏதாவது சொல்லுவாங்கன்னு பெரும்பாலானவர்கள் இந்த கருத்ததான் வச்சாங்க.”
“அதே சமயம் இன்னொன்னையும் குறிப்பிடனும், இந்த புத்தகத்தை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகம் இரண்டிலும் MA முதலாண்டில் பாடப் புத்தகமாக வைத்திருந்தார்கள். நாகர்கோவிலில் இயங்கும் ஒரு சுயசார்பு கல்லூரியில் பாடமாக வைத்திருந்தாங்க. பாண்டிச்சேரி மற்றும் கேரள பல்கலைக்கழகங்களில் இதைப் பற்றி பேச சொல்லியிருந்தாங்க. மாநில அளவில் 13 விருதுகள இந்த புத்தகம் வாங்கியிருக்கிறது. வெகுஜன பத்திரிக்கை மற்றும் வார இதழ்களில் எழுதியிருந்தாங்க. கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் தமிழ்நாடு கலைஞர் மன்றம் இரண்டும் மாநில அளவில் நிறைய இடங்களில் இதைப் பற்றிய கூட்டம் போட்டாங்க. அதில் போய் பேசக்கூடிய நல்ல வாய்ப்பமைந்தது. சொல்லப்போனா நினைத்ததைவிட ஓரளவிற்கு போய் சேர்ந்ததாதான் நினைக்கிறேன்.”
Madras Radicals: உங்கள் தந்தையைப் பற்றி சில கவிதைகளில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சாதிய ஒடுக்குமுறை உச்சத்தில் இருந்த காலத்தில் அதிகமான வேதனைகளை இந்த சமூகம் அவருக்கு வழங்கியிருக்ககூடும். அப்படிப்பட்ட நேரங்களில் உங்களுக்கு அவர் சந்திக்கும் சாதிய ஒடுக்குமுறை பற்றிய புரிதல்களை , உரையாடல்களை வெளிப்படுத்தியிருக்கிறாரா?
கலைவாணன் இ.எம்.எஸ்: “என் பதினாலு வயசிலேயே அப்பா என்னைவிட்டு போயாச்சு. அப்புறம் நாப்பத்திநாலு வயசுலதான் வந்தாரு. அதனால எனக்கும் அவருக்கும் உள்ள உரையாடல் பெரிய அளவுல இல்லாம போயிருச்சு. அதுவும் இல்லாம இப்ப நானும் என் பையனும் உரையாடுறது போல அப்ப உரையாட முடியாது. அவரு ஸ்கூல் போ’னா போகணும் வா’னா வரணும் இதத் தாண்டி ஏதும் பேச முடியில.“
Madras Radicals: இப்போது அழகு நிலையங்கள் என்ற பெயரில் சிகை திருத்தும் தொழில் நவீனமயமாகி இருக்கிறது. பெரும் வணிக நிறுவனங்கள் இதன் மீது தங்கள் கவனத்தை வணிக ரீதியில் திருப்பி நாளாகிறது. அதே சமயம் சிறு சிறு முடிதிருத்தும் நிலையங்கள் வைத்திருக்கும் தொழிலாளர்கள் பொருளாதார பலமற்று இருக்கிறார்கள். பெரிய வணிக வளாகங்களில் இருக்கும் அழகு நிலையங்களுக்கு ஒருமுறை சென்றாலே ஆயிரக்கணக்கில் செலவாகிறது. இந்த முரண்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?
கலைவாணன் இ.எம்.எஸ்: “அதாவது வேற கம்யூனிட்டிய சார்ந்தவங்க உயர் சாதியா இருந்தாலும் அவங்க தொழில் ரீதியா, நிறுவன ரீதியாகவோ ஒரு பார்பர் ஷாப் போடுறாங்க. பத்திருபது பேர வேலைக்கு வைக்கிறாங்கனுன்னு வச்சுக்குங்க, அத இந்த சமூகம் அழகாக ஏற்றுக்கொள்ளும். அவர பிசினெஸ் மேனா நினைப்பாங்க, ஐடியா உள்ளவரா இருக்காரு இப்ப உள்ள ட்ரெண்டுக்கு ஏத்தவாறு பிசினெஸ் பண்ணுறாருனு ஏத்துக்கொள்ளும். ஆனா ஒரு நாவிதர் வந்து ஒரு பெரிய ஹோட்டல் கட்டுறாருனு வச்சுக்குங்க, அதாவது அவரு நாவிதருனு அடையாளப்படுத்திக்கொண்டால் பார்ரா நாசுவ பய எல்லாம் ஹோட்டல் வச்சிருக்கானு பேசும். சாதிய அவரு சொல்லாம இருந்தா வேற. இவரும் வியாபாரி தான் அவரும் வியாபாரிதான். ஆனா சமூகம் இந்த பார்வைதான் பார்க்கும். நாவிதர் சமூகத்தில் ஒருத்தரு பொருளாதார ரீதியில் முன்னேறியிருக்காருனு வச்சுக்குங்க அவருக்கும் இதே நிகழ்வுதான் நடக்கும். அவரு பணக்காரரு அப்படினு எல்லாம் பார்க்காது சமூகம். பணக்காரரா இருந்தாலும் பாவப்பட்டவரா இருந்தாலும் சிக்கல் வரும்போது நண்பர்கள்கூட விலகிக்குவாங்க.“
Madras Radicals: உங்களுடைய அடுத்த படைப்பு எதைப் பற்றியதாக இருக்கக்கூடும்?
கலைவாணன் இ.எம்.எஸ்: “நான் இப்போ ஒரு முதியோர் இல்லம் வச்சிருக்கேன். சமூகம் சார்ந்து பணிகளை செய்து கொண்டிருக்கேன். ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் சாலையோரம் இருக்கக்கூடிய முதியவர்களுக்கு சாப்பாடு கொடுப்பது மாதிரி ஆக்ட்டிவிட்டி பண்ணிக்கிட்டு இருக்கேன். என்னோட பிளான் என்னன்னா இப்போ எனக்கு அறுவது வயசாகிடுச்சு. இன்னும் ஒரு அஞ்சு வருஷம் இந்த மாதிரி பணிகள் செஞ்சு முடிச்சுடனும். அப்புறம் அறுவத்தஞ்சிக்கு அப்புறம் பைவ் இயர்ஸ் பிளான் வச்சிருக்கேன் ஒரு வாழ்க்கை வரலாறு இல்லனா இது சார்ந்து ஒரு நாவலாக எழுதலாமுன்னு, அப்படியே எழுதி முடிச்சிட்டு கிளம்பலாமுன்னு (சிரிக்கிறார்). இப்படி மனசுல ஒரு திட்டத்தோட இருக்கேன். ஏன்னா இந்த பைவ் இயர்ஸ் தான் ஒரு கோல்டன் பீரியட், கடைசி ஓட்டமா பார்க்கிறேன். இந்த காலத்தை இதை நல்லபடியா ஓடி முடிச்சுக்குவோம்னு இப்ப வாசிக்கவும் நேரம் இல்லாம உறங்கவும் நேரமில்லாம பணி செஞ்சிகிட்டு இருக்கேன்.“
Madras Radicals: இந்த படைப்பைப் பற்றி சில வார்த்தைகள்?
கலைவாணன் இ.எம்.எஸ்: “முக்கிய விஷயமா நான் நினைக்கிறது இது மூலமா படைப்பிற்கோ எனக்கோ எந்தவொரு மரியாதையோ புகழையும் எதிர்பார்க்கல. படைப்பு மட்டுமே என்னுடைய நோக்கம். அது மக்களிடம் போய் சேந்துச்சா, அது அவங்களிடம் ஏதாவது சிறிய பாதிப்பு உண்டாக்கியிருக்குதா என்பதுதான் முக்கியம். அடிப்படையில் நானும் என் மனைவியும் வீதி நாடகக் கலைஞர்கள். தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகளை மாநிலம் முழுவதும் நடத்தியிருக்கிறோம். எனக்கு ஐந்து மகன்கள், ஒரு மகள். மகன்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளை செய்கிறார்கள், இசைக்குழு வைத்திருக்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள். நாங்க எல்லோரும் ஒரே கூட்டு குடும்பமாகத்தான் வாழ்கிறோம். அடுத்து வரக்கூடிய தலைமுறையும் இந்த சாதீயக் கொடுமைக்கு ஆளாகக்கூடாதுன்னு நினைக்கிறேன்.“
நேரில் சந்திக்கும் வாய்ப்பமையும் போது இன்னும் விரிவாக உரையாடலாம் என்று முடித்ததுடன் நாகர்கோவில் வரும் சந்தர்ப்பம் அமையும்போது மறக்காமல் சந்திக்கவும் என்ற அழைப்பையும் விடுத்தார். ஒரு மாலை வேலையின் நேரம் அற்புதமான உரையாடலுடன் முடிவிற்கு வந்தது.
இந்த புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள்:
கீற்று வெளியீட்டகம் ,
1/47 அழகிய மண்டபம்,
முளகுமூடு அஞ்சல்,
குமரி மாவட்டம் – 629167
அலைபேசி எண் : 97919 54174
விலை :75/-Rs
நாளை தாணு பிச்சையா அவர்கள் எழுதிய பொற்கொல்லர்களின் வாழ்வினை பிரதியெடுக்கும் “உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்”. இந்த புத்தகம் குறித்து பார்க்கலாம்.
தொடரும்…
இரண்டாம் பகுதியைப் படிக்க:
பாகம் 2: அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்