வட்டவடா சலூன்

பட்டியல் சமூகத்தினர் சலூனில் முடி வெட்டக் கூடாது; கேரள கிராமத்தில் சாதியக் கொடுமை

இந்தியாவில் அதிக எழுத்தறிவு கொண்ட மாநிலமாகவும், விழிப்புணர்வு கொண்ட மாநிலமாகவும் அறியப்படுகிற கேரளாவில் இன்னும் சாதிய தீண்டாமை இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள – தமிழக எல்லை மாவட்டமான இடுக்கியில் வட்டவடா என்ற கிராமத்தில் தற்போதுதான் அனைத்து தரப்பு மக்களும் முடிவெட்டிக் கொள்ளும் பொது சலூன் கடையே நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டுள்ளது.

மிகவும் பின்தங்கிய இந்த கிராமத்தில் உயர் சாதியினர் மட்டுமல்லாமல் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்களும் கணிசமான அளவு வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஊரில் உள்ள மற்ற சாதியினர் முடிவெட்டும் சலூன் கடைகளில் பட்டியல் சமூக மக்கள் முடிவெட்டிக் கொள்ள தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளனர். அவர்கள் முடிவெட்டிக் கொள்ள அருகில் உள்ள மூணாறுக்கு தான் செல்லவேண்டும். 

மேலும் இங்குள்ள தேநீர் கடைகளில் பட்டியல் வகுப்பினருக்கு தனி குவளை முறையினை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த இரட்டைக் குவளை முறை 1990-ம் ஆண்டோடு ஒழிக்கப்பபட்டு விட்டதாக அரசால் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை நிலையானது அப்படியானதாக இல்லை என்பதே வருந்தத்தகும் செய்தியாகும்.

இந்த தொடர் தீண்டாமையினால் அவமானப்படுத்தப்பட்ட தலித் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து இது தொடர்பாக வட்டவடா ஊராட்சி நிர்வாகத்திடம்  புகார் தெரிவித்தனர். இதனால் ஆய்விற்கு சென்ற ஊராட்சி அதிகாரிகள்  சலூன் கடைக்காரரிடம் அங்கு கடைபிடிக்கப்பட்ட தீண்டாமையை கைவிட சொல்லி உத்தரவிட்டனர். ஆனால் அனைவருக்கும் முடிவெட்டுவதற்கு பதிலாக நாங்கள் கடையை மூடியே வைத்திருக்கிறோம் என்று மூடிவிட்டனர்  வட்டவடா-வில் உள்ள இரண்டு சலூன் கடைகளும் கடந்த ஐந்து மாதங்களாக மூடியே இருந்தது.

இப்பொழுது நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நேற்று தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அனைத்து சாதி மற்றும் மதத்தினரும் முடிவெட்டும் பொது சலூன் கடையை வட்டவடா பஞ்சாயத்தில் திறந்து வைத்துள்ளார். இப்பொழுது  உயர் சாதியினர் என்று தங்களைக் கருதுபவர்கள் வருவார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வட்டவடா பஞ்சாயத்து தலைவர் ராம்ராஜ், இப்பொழுதுதான் ஒன்றாக முடிவெட்டும் நிலை உருவாகியிருக்கிறது. எதிர்காலத்தில் ஒன்றாக நீர் அருந்தவும், உணவு உண்ணவும் இன்னும் முயற்சிகள் எடுப்போம் என்று கூறியுள்ளார்.

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளா உண்மையிலேயே அந்த பெயருக்கு ஏற்றார்போல் இருக்க வேண்டுமென்றால், இத்தகைய சாதிப் பாகுபாடுகள் ஒழிக்கப்படவேண்டும் என்பதே நியாயத்தை நேசிப்போரின் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *