பொலிவியா

கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து போராட பொலிவிய அதிபர் தலைமையில் 11 நாடுகளின் பூர்வகுடி அமைப்புகள் உருவாக்கியுள்ள கூட்டணி

பொலிவியாவில் 11 நாடுகளைச் சேர்ந்த பூர்வகுடி மக்களின் அமைப்புகள், சமூக இயக்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த கூட்டமைப்பினை உருவாக்க முடிவு செய்திருக்கின்றன. 

பொலிவியாவின் இடதுசாரி கட்சியின் பிரதமர் லூயிஸ் அர்சே மற்றும் முன்னாள் பிரதமர் ஈவோ மோராலெஸ் ஆகியோர் இந்த கூட்டத்தினை தொடங்கி வைத்தனர். 

யார் இந்த ஈவோ மொராலெஸ்?

அமெரிக்கா மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை பொலிவியாவில் வீழ்த்துவதற்கான பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்தியதன் காரணமாக, கடந்த 2019-ம் ஆண்டு பொலிவியாவில் ஈவோ மொராலெசின் ஆட்சி அமெரிக்காவின் ஆதரவுடன் கவிழ்க்கப்பட்டது. பொலிவியாவை விட்டு வெளியேறிய ஈவோ மொராலெஸ் மெக்சிகோவிலும், அர்ஜெண்டினாவிலும் தஞ்சம் புகுந்திருந்தார். 

பிறகு நீண்ட காலமாக பொலிவியாவில் தேர்தல் நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியதால் அக்டோபர் 18, 2020 அன்று மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் மீண்டும் ஈவோ மொராலெசின் இடதுசாரி MAS கட்சி வெற்றி பெற்றது. அதன் பிறகு ஈவோ மொராலெஸ் மீண்டும் பொலிவியா திரும்பினார். லட்சக்கணக்கான மக்கள் அவரை வரவேற்றிருந்தனர். 

ஈவோ மொராலெஸ்

நாடு திரும்பிய ஈவோ மொராலெஸ் தான் பேசிய முதல் கூட்டத்தில் தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தெரிவித்திருந்தார். தற்போது அது வடிவம் பெற்றிருக்கிறது. 

இதையும் படிக்க: பொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள்

தென் அமெரிக்க நாடுகளின் மக்கள் ஒன்றியம் (Union of South American Nations of the People)

டிசம்பர் 19-ம் தேதி பொலிவியாவின் சேன் பெனிட்டோ நகரத்தில் நடந்த கூட்டத்தில் தென் அமெரிக்க நாடுகளின் மக்களின் ஒன்றியம் (Union of South American Nations of the People – RUNASUR) உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் அர்ஜெண்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈக்வேடார், குவாதமாலா, மெக்சிகோ, பனாமா, பெரு மற்றும் வெனிசுவேலா ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த பூர்வகுடி மக்களின் அமைப்புகள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவற்றின் 1200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

கூட்டமைப்பின் நோக்கங்கள்

இக்கூட்டமைப்பு 2021 ஏப்ரல் மாதத்தில் துவங்க இருக்கிறது. அமெரிக்க மக்களின் பொலிவாரியன் கூட்டணியின் மக்கள் வர்த்தக ஒப்பந்தம் (Bolivarian Alliance for the Peoples of Our America – People’s Trade Treaty; ALBA-TCP) உள்ளிட்ட பிராந்திய ஒருங்கிணைவுகளை வலிமைப்படுத்துவதற்காக இந்த ஒன்றியம் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊடங்கள் மற்றும் தொலை தொடர்பு உள்ளிட்ட முன்னெடுப்புகளை பகிர்ந்து கொள்வது, சூழலியல் மீது அதிகரித்து முதலாளித்துவத்தின் தாக்குதலுக்கு மத்தியில் மனித குல மேம்பாட்டிற்கான யோசனைகளை பகிர்ந்து கொள்வது என பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. 

கூட்டத்தில் பேசிய ஈவோ மொராலெஸ் இந்த கூட்டம் மிகவும் முக்கியமானது என்றும், ஏனென்றால் வரலாறும், நமது அன்னை பூமியும் நமது மக்களின் விடுதலைக்காக போராட நம்மை அழைத்திருக்கின்றன என்றும் தெரிவித்தார். மேலும் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற் சங்கங்களின் ஒருங்கிணைப்புடன் ஒரு புதிய உலகத்தினை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார். 

போட்டித் தன்மையைக் காட்டிலும், பூரணத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் வர்த்தக உறவினைக் கட்டியெழுப்ப நாம் உறுதியேற்க வேண்டும் என்று ஈவா மொராலெஸ் கோரிக்கை விடுத்தார். 

கூட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புகள் அனைத்து வகையான காலனித்துவம், ஏகாதிபத்தியம், புதிய தாராளமயம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக போராடுவதாக உறுதியளித்தன.

தண்ணீரையும், இயற்கை வளங்களையும் தனியார்மயப்படுத்தி விற்பனைப் பண்டங்களாக மாற்றுவதை எதிர்த்திட வேண்டும் என்று உலக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *