கோவா

கோவா விடுதலை நாளில் காட்டை அழித்து சாலைகள் மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

டிசம்பர் 18,1961 அன்று கோவா நிலப்பகுதி போர்த்துகீசிய அரசிடம் இருந்து விடுதலை பெற்று இந்திய அரசுடன் சேர்ந்த நாளை ஆண்டுதோறும் ‘விடுதலை தினமாக’ கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு தனது அறுபதாவது விடுதலை நாளை முன்னிட்டு இரண்டு நாள் பயணமாக இந்திய ஒன்றிய அரசின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாஞ்சிம் நகருக்கு வருகை புரிந்திருந்தார்.

இதையொட்டி கோவா மாநிலத்தில் வனங்களை அழித்து மேற்கொள்ள இருக்கும் 3 மக்கள் விரோதத் திட்டங்களை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

கைது செய்து கொண்டு செல்லப்பட்ட இளைஞர்கள்

இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கைது செய்த பாரதிய ஜனதா தலைமையிலான கோவா அரசின் காவல் துறை பல மணி நேரம் பேருந்தில் ஏற்றி அலைகழித்து, இறுதியில் போண்டா(ponda) காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றது. இரவு 9 மணி வரை அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் சிறுவர்களும் அடக்கம். சிறார்களை காவல்துறை கைது செய்த சம்பவம், கோவா மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரை ஆத்திரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இளைஞர்களை தடுப்புக் காவலில் வைத்த நடவடிக்கையை சுட்டிக்காட்டி, மாநிலத்தில் அமைதியான முறையில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் மக்களை பயமுறுத்தும் விதமாக ஆளும் பாஜக அரசு மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கைது செய்து வருவதாக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ‘நியூஸ் கிளிக்’ செய்தியில் தெரிவித்தனர்.

ரோஜாக்கள் வைத்திருக்கும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்களா?

“இது எங்கள் விடுதலை நாள், எங்களுக்கு இந்நாள் கொண்டாட்டத்திற்கான நாள், எதிர்காலத்திற்கான நம்பிக்கை இன்னும் எங்களுக்கு உள்ளது. நாங்கள் எங்கள் சுதந்திரப் போராளிகளைக் நினைவு கூர்ந்தோம். ஏராளமான இளைஞர்கள் பன்ஜிம் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் காவல் துறையால் தடுக்கபட்டனர்.மேலும் அவர்களின் வாகன உரிமங்கள் பறிக்கப்பட்டு உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. மாணவர்கள் சானிடைசர் மற்றும் ரோஜாக்களையே கைகளில் வைத்து இருந்தனர். ரோஜாக்கள் வைத்து இருக்கும் குழந்தைகள் நம் நாட்டின் ஜனாதிபதிக்கு எவ்வாறு அச்சுறுத்தலாக இருக்க முடியும்? கைது செய்யப்பட்ட பின்னர், அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள், அல்லது எந்த பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கபட்டுள்ளார்கள் என்று அவர்களிடம் தெரிவிக்கப்படவில்லை” போராட்டம் நடைபெற்ற பகுதியில் வசித்து வரும் ஷெர்ரி ‘ நியூஸ் கிளிக் ‘ செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

கோவாவில் கொண்டுவரப்படவுள்ள 3 மெகா திட்டங்கள்

இந்த ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் லாக் டவுன் காலத்தில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் மொல்லெம் பகுதியின் வழியாக 3 திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த நாசகார திட்டங்களை எதிர்க்க ‘சேவ் மொல்லெம்’ எனும் பெயரில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு கோவா மக்கள் எதிர்த்து வந்தனர். கோவாவில் மேற்கொள்ள இருக்கும் இந்த 3 திட்டங்களானது பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாக நிலக்கரியை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்காக இயற்கை வளத்தை அழித்து உருவாக்கப்பட இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த திட்டங்கள் பின்வருமாறு,

  1. கோவாவின் மோர்முகாவோ துறைமுகத்தை கர்நாடகாவில் உள்ள ஹோஸ்பேட்டுடன் இணைக்கும் தற்போதைய ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டம்.
  1. கோவாவின் பனாஜி-யுடன் கர்நாடகாவின் பெலகாவி-யை இணைக்கும்தேசிய நெடுஞ்சாலை NH4 A.
  1. கர்நாடகாவின் தார்வாட் முதல் கோவாவின் செல்டெம் வரை 400 கிலோவோல்ட் மின் பரிமாற்ற கோபுரங்களை அமைத்தல்.

இந்த திட்டங்களானது பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் மொல்லெம் தேசிய பூங்கா வழியாக பல ஆயிரகணக்கான ஹெக்டர் வனப்பகுதியை அழித்து செயல்படுத்தப்பட இருப்பதால், இந்த திட்டங்களை எதிர்த்து தொடர்ச்சியாக கோவா மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

மேலும் இந்த திட்டங்களுக்கு  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு முறையாக மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாக ஒன்று கூடல் மற்றும் கலவரத்தை தூண்டுதல் போன்ற பல பிரிவுகளின் கீழ் ‘சேவ் மோலம் ‘ அமைப்பின் தலைவர்களான  கோயன்ட் கொல்சோ நாகா மற்றும் கோயெஞ்சோ எக்வாட் ஆகியோர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முகப்பு ஓவியம்: நன்றி – Save Mollem Fb Page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *