நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி

வீரத்தை விளைவித்த நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி!

நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்டு சிறப்புப் பதிவு

உக்ரேனில் உள்ள விலியா என்னும் ஊரில் ஒரு கூலித்தொழிலாளரான தந்தைக்கும், சமையற்காரரான தாய்க்கும் .மகனாக 1904-ம் ஆண்டு செப்டெம்பர் 29-ம் தேதி, நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி பிறந்தார்.

இவர் 32 வயது வரை மட்டுமே வாழ்ந்தவர். சோவியத் கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். பின்னர் அவர் சோவியத் செஞ்சேனையில் இணைந்தார். இளைஞர்களை அணிதிரட்டி தீவிரமாகப் போராடியவர். மேலும் செஞ்சேனை அணிகளுக்கு தலைமை தாங்கி வழிநடத்துவதிலும் திறன்மிக்கவராக இருந்தார்.

புதிய உலகைக் கட்டமைக்கும் பணியில் இளைஞர்கள்

அந்த காலகட்டம் என்பது உலக வரலாற்றில் ஒரு உன்னதமான காலமாகும் புரட்சிக்குப் பின் சோவியத் ரஷ்யாவின் மக்கள், ஒரு புதிய உலகத்தைக் கட்டமைக்கும் மாபெரும் பணியை செய்து கொண்டிருந்தனர். மக்களிடையே துளிர்த்த புதிய உறவால் புதியதொரு வாழ்க்கை உருப்பெற்றுக் கொண்டிருந்தது. இந்த புதிய தொடக்கங்களில் எல்லாம் ஒஸ்திரோவ்ஸ்க்கி போன்ற இளைஞர்கள் பெரும்பங்கை ஆற்றினர்.

போராட்டத்தில் காய்முற்றதும் பேனாவை ஆயுதமாக்கினார்

இதனைத் தடுப்பதற்கு எதிர்புரட்சி குழுக்களும் பல்வேறு சதிகளை செய்துகொண்டு வந்தன. போலந்து அரச படைகள் 1920-ம் ஆண்டு சோவியத் இரஷ்யாவை திடீரென தாக்கும் கொள்ளையில் ஈடுபட்டனர்.

அவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக சோவியத் செஞ்சேனை போர் நடத்தியது. சோவியத் இளைஞர்கள் இந்த போரில் முக்கியப் பங்காற்றினர். போரில்  ஒஸ்திரோவ்ஸ்க்கி தலைமையேற்றுப் போராடி எதிரியை விரட்டி அடித்துத் தாய்நாட்டைக் காத்தார். இந்தப் போரில் ஒஸ்த்திரோவ்ஸ்க்கி படுகாயம் ஏற்பட்டது. இதனால் 1928-ம் ஆண்டிலிருந்து அவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கடுமையாக நோய்வாய்பட்டு படுத்த படுக்கையானார். இறுதி காலத்தில் கண்பார்வை இல்லாமலும் இருந்தார். மனிதகுல விடுதலைக்கான போராட்டத்தில்தான் உடல்ரீதியாக முடங்கியதும் பேனாவை ஆயுதமாக மாற்றினார்.

வீரம் விளைந்தது

How the Steel Was Tempered என்ற தனது படைப்பை எழுதத் துவங்கினார். 1932-ம் ஆண்டு எழுத ஆரம்பித்தார். படுக்கையிலிருந்தபடியே நாவலின் பெரும்பகுதியை எழுதினார். இந்த நாவல் எழுதும் காலத்தில் கண்பார்வையை இழந்துவிட்டதால் அவர் சொல்லச் சொல்ல வேறு ஒருவரால் எழுதப்பட்டது. இந்நாவலை தனது ‘நினைவுப் பதிவுகள்’ என்று அவர் கூறினார். இந்த நாவல் தமிழில் எஸ்.ராமகிருஷ்ணனால் மொழிப்பெயர்க்கபட்டு ‘வீரம் விளைந்தது’ என்ற தலைப்பில் இரண்டு பாகமாக வெளியாகியிருக்கிறது.

நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி சொல்வதை தட்டச்சு செய்யும் உதவியாளர்

முதல் பாகம் முழுவதிலும் பாவெலின் இளமைப்பருவம், அவனது காதல் வாழ்க்கை, தாயுடனான அன்பு, சகோதரனான ஆர்த்தியோமின் நட்பு, தாய்நாட்டுப் பற்று எனத் தொடங்கி புரட்சியின்பால் அவன் கொண்டுள்ள ஈடுபாடு என பரந்து விரிந்து செல்லும்.

பாவெல் “அக்கார்டியன்” இசைக்கருவி வாசிப்பதில் நிபுணத்துவம் பெற்றவன் என்பதை  விவரிக்கும் காட்சி இசையைக் கேட்கும் அனுபவத்தைத் தரும் எனலாம்.

இளமை, காதல், சோகம், வீரம், தியாகம், தேசபக்தி, மனிதநேயம், தொழிலாளர்களின்  வர்க்க உணர்வு முதலியவை இந்த நாவலின் மையமாகக் கொண்டது. 1915-ம் ஆண்டு முதல் 1931-ம் ஆண்டு வரை ஒஸ்திரோவ்ஸ்க்கியும் அவரது தோழர்களும் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் எடுத்துக்காட்டுவது தான் இந்த நாவல். 

முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியான மாக்சிம் கார்கி இந்த நாவலின் முதலாவது வாசகராவார். கதாநாயகனான பாவல் கச்சாக்கின் வழியாக ஒஸ்திரோவ்ஸ்க்கி-யின்  சுய வரலாற்றுப் படைப்பாக அமைந்துள்ளது. மனித குலத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்பு செய்வதன் மூலம்தான் ஒரு மனிதன் மதிக்க முடியாத பெருமதிப்புமிக்க பயனுள்ள வாழ்க்கையை அவனால் வாழ முடியும் என்ற உன்னதத் தத்துவத்தை ‘வீரம் விளைந்தது’ நாவல் வெளிப்படுத்துகிறது. 

பன்னாட்டு மொழிப்பெயர்ப்புகள்

இந்த நாவல் 1934-ம் ஆண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது. உலகெங்குமுள்ள 48 மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சோவியத் நாட்டில் 495 பதிப்புகள் வெளிவந்தது.

”இந்நாவலை எழுதி முடித்ததும், என்னைச் சுற்றி வளைத்திருந்த இரும்பு வளையமொன்றிலிருந்து விடுபட்ட உணர்வு பெற்றேன். அசைய முடியாமை என்ற துன்பத்தை வென்றேன். மறுபடியும் போர்வீரர்களில் ஒருவனாக மாறிவிட்டேன்.” என வீரம் விளைந்தது நூலை முடித்தவுடன் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி கூறியுள்ளார். மறுபடியும் போர் வீரர்களில் ஒருவனாக மாறிவிட்டேன்” என்று ஒஸ்திரோவ்ஸ்க்கி கூறியுள்ளார்.

இரண்டாம் நாவல்

’புயலில் பிறந்தவர்கள்’ என்ற தமது இரண்டாவது நாவலை 1936-ம் ஆண்டு எழுத ஆரம்பித்தார். ஆனால் இந்த நாவலை எழுதி முடிக்கும் முன்பே 22 டிசம்பர் 1936 அன்று இறந்துவிட்டார்.

ஒஸ்திரோவ்ஸ்க்கி-யின் கட்டுரைகள், பேச்சுகள், கடிதங்கள் முதலியவை தொகுக்கப்பட்டு ‘வாழ்க்கையைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் 1955-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

மாஸ்கோ நகரின் முக்கிய வீதிகளில் ஒன்றான கார்க்கி வீதியில் அவர் வாழ்ந்த 14-ம் எண் வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அதில் ’எப்படி எஃகு பதப்பட்டது’ நூலின் பன்னாட்டுப் பதிப்புகளும் சேகரித்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

லட்சியத்தின் வெற்றிக்கான உன்னதப் போராட்டத்தில் ஒஸ்திரோவ்ஸ்க்கி தனது உடலால் உழைக்க முடியாவிட்டாலும், தனது பேனாவை ஆயுதமாகக் கொண்டு தொடர்ந்து போராடினார்.

நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி நினைவு நாள் இன்று!

One Reply to “வீரத்தை விளைவித்த நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி!”

  1. பலமுறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இறுதியில் எழும் உணர்வுகள் சொல்லில் அடங்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *