ஈவோ மொரேல்ஸ் பழங்குடி சமூகத்திலிருந்து பொலிவியாவின் அதிபராக உருவெடுத்த முதல் நபர் ஆவார். சோசலிசக் கொள்கையை உடைய ஈவா மொரேல்ஸ் 2006-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பொலிவிய அதிபராக இருந்து வந்தார். இடதுசாரி கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் தொடர்ந்து பொலிவியாவில் அமல்படுத்தி வந்தார். பழங்குடி மக்கள் ஈவா மொரேல்சை பெரும் ஆதரவுடன் கொண்டாடினர்.
அமெரிக்கா மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை பொலிவியாவில் வீழ்த்துவதற்கான பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். உலக வங்கி மற்றும் IMF ஆகியவற்றுடனான பொலியாவின் சார்பினை பெருமளவில் குறைத்தார். ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபா, ஹியூகோ சாவேசின் வெனிசுலா என இடதுசாரி அரசாங்கங்களுடன் கூட்டணியை கட்டமைத்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஈவா மொரேல்ஸ் வெற்றி பெற்றார். அத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அறிவித்து, அமெரிக்க ஆதரவுடன் பொலிவிய ராணுவம் மற்றும் காவல்துறை மூலம் ஈவா மொரேல்ஸ்-சின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஈவா மொரேல்ஸ் நாட்டை விட்டு வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் அடைந்தார்.
2019-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி மெக்சிகோவின் அரசு விமானத்தில் பிரேசில் மற்றும் பெரு நாட்டின் வழியாக மெக்சிகோவிற்கு சென்றார். பின்னர் 2019 டிசம்பர் மாதம் மெக்சிகோவிலிருந்து அர்ஜெண்டினாவிற்கு சென்றார். அங்கு அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது.
ஈவோ மொரேல்ஸ் வெளியேறிய பிறகு பொலிவியாவில் தொடர்ச்சியாக தேர்தல் நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வந்தது. தேர்தலை நடத்த வலியுறுத்தி ஏராளமான போராட்டங்கள் பொலிவியாவில் வெடித்தன. பின்னர் மக்கள் போராட்டங்களின் விளைவாக அக்டோபர் 18, 2020 அன்று பொலிவியாவில் தேர்தல் நடத்தப்பட்டது.
நடந்து முடிந்த இத்தேர்தலில் ஈவோ மொரேல்ஸ்-சின் சோசலிஸ்ட் கட்சியான MAS 55% சதவீத வாக்குகளைப் பெற்று மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. ஈவோ மொரேல்ஸ்-சின் கட்சியின் சார்பாக லூயிஸ் ஆர்சே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஈவோ மொரேல்ஸ் அர்ஜெண்டினாவிலிருந்து மீண்டும் பொலிவியாவிற்கு திரும்பியுள்ளார். கடந்த ஆண்டு எந்த தினத்தில், எந்த இடத்திலிருந்து ஈவா மொரேல்ஸ் நாட்டை விட்டு வெளியேறினாறோ அதே கொச்சபம்பா பகுதியில் நின்று 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவரை வரவேற்றனர்.
பல்வேறு பழங்குடி இயக்கங்கள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் என பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் என அனைவரும் இணைந்து நின்று ஈவா மொரேல்ஸ்-சுக்கு வரவேற்பினை அளித்தனர். ஈவா மொரேல்சுடன் துணை அதிபராக இருந்த அல்வாரோ கார்சியா லினேராவும் நாடு திரும்பினார்.
”ஒரு வருடத்திற்கு முன்பு இந்த விமான நிலையத்தில் இருந்து நாங்கள் வெளியேறிய போது, லட்சக்கணக்கான மக்களின் ஆதரவுடன் நாங்கள் திரும்புவோம் என்று சொன்னோம். இன்று நாம் லட்சக்கணக்கானவர்களாய் நிற்கிறோம். படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாகவும், கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் சார்பாகவும், எங்களை கைவிடாமல் இருந்ததற்காக நம் நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஈவோ மொரேல்ஸ் தெரிவித்துள்ளார்.
மக்களிடையே பேசிய ஈவா மொரேல்ஸ் வலது சாரிகளின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு எதிராக சண்டை செய்து, ஜனநாயகத்தின் துணையுடன் ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதற்கும் துணைபுரிந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தங்களுக்கு தஞ்சம் வழங்கிய மெக்சிகோ, அர்ஜெண்டினா அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.
ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்திற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அமெரிக்க நாடுகளின் அமைப்பினை எதிர்கொள்ள தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியத்தை (Union of South American Nations – UNASUR) உருவாக்குவதற்கான அழைப்பையும் விடுத்தார்.