அமெரிக்கா சீனா வர்த்தக யுத்தம்

இந்த வார உலகம்: சீனாவின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை, ஈரானின் ஏவுகணை பயிற்சியால் பதற்றம் உள்ளிட்ட 8 நிகழ்வுகள்

1. 50 நாடுகளில் பரவியுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்

புதிய வகை திரிந்த கொரோனா வைரஸ் 50 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இந்த புதிய வகை திரிந்த கொரோனா வைரஸ் டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இந்த திரிந்த வகை மாதிரி VOC 202012/01 என அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அதே போல் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட மற்றொரு வகை திரிந்த கொரோனா வைரஸ் 20 நாடுகளில் பரவியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வகை திரிந்த வைரஸ் 501Y.V2 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானிலும் மூன்றாம் வகை திரிந்த வைரஸ் குறித்து கண்டறிப்பட்டுள்ளது. இவைகளின் பரவும் விதம் கூடுதலாக உள்ளதாக தெரிகிறது. 

2. சீனாவின் ஷன்யீ மாவட்ட கிராமங்களில் ஊரடங்கு

சீனாவின் தலைநகரான பீஜிங்கின் ஒரு பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பீஜிங்கிலுள்ள ஷன்யீ மாவட்ட கிராமங்களில் வசிப்போருக்கு அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே போல் கடந்த 13-ம் தேதி சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணம் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. 3.75 கோடி மக்கள் தொகையுள்ள அம்மாகாணத்தில், 28 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அவசரநிலை நடவடிக்கை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவின் வடக்கு பகுதிகளில் பல்வேறு விதமான வழிமுறைகள் மூலம் 2 கோடி பேர் ஊரடங்கிற்குள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜப்பான் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் ஊரடங்கிற்குள்ளாக இருக்கின்றனர். கொரோனா தொற்று அதிவேகமாக பரவுவதையடுத்து, ஜப்பானில் மேலும் ஏழு மாவட்டங்களுக்கு அவசரநிலை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

3. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பிரிட்டன்

பிரிட்டனில் கொரோனா பெருந்தொற்று மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த 30 நாட்களில் 30,000 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். கடந்த 13-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 1,564 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். போதிய பொது சுகாதார கட்டமைப்பின்றி கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் முதலாளித்துவ நாடான பிரிட்டன் திணறிக் கொண்டிருக்கிறது. 

4. கத்தாருடன் போக்குவரத்து பாதையை திறந்த சவுதி அரேபியா

கடந்த வாரம் கத்தார் மீதான தடையை நீக்கப் போவதாக அரபு நாடுகள் அறிவித்தைத் தொடர்ந்து சவுதி, கத்தாருடனான தனது எல்லைப் போக்குவரத்து பாதையை திறந்திருக்கிறது. மூன்றரை வருடங்கள் கழித்து இரு நாடுகளிடையேயான எல்லை திறக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு கத்தார் மீது விதிக்கப்பட்ட தடைகளின் காரணமாக சவுதி- கத்தார் எல்லை மூடப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. 

5. இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்

கடந்த 15-ம் தேதி இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரனமாக 42 பேர் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 

6. சீனாவின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

சீனாவின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமான ஷாவ்மி உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்கா- சீனாவிற்கிடையேயான வர்த்தகப் போரில், சீன இறக்குமதி தொடர்பாக அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது; இறக்குமதி வரி விலக்குகளை நீக்கியது. பல்வேறு சீன உற்பத்தி பொருட்களுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கும் தடை விதித்துள்ளது. முன்னரே சீனாவின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவேய் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. ஹூவாவேய், ஷாவ்மி உள்ளிட்ட நிறுவனங்கள் சீன கம்யுனிஸ்ட் கட்சியின் உளவு நடவடிக்கைக்கு துணைபோவதாக சொல்லி அமெரிக்கா இத்தடையைக் கொண்டு வந்துள்ளது. 

7. ஈரானின் ஏவுகணை பயிற்சியால் பதற்றம்

ஈரானின் துணை ராணுவப் படை, போரில் பயன்படுத்தப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அழிக்கும் எதிர்தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை மையப்படுத்தி இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றச் சூழல் காரணமாக இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம், அணு ஆயுதங்கள் தொடர்பாக ஏற்றுக் கொண்டிருந்த கட்டுப்பாடுகளை மீறி அணு ஆயுத உற்பத்தி முயற்சியில் ஈடுப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

8. ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி-7 நாடுகளின் முக்கிய கூட்டம்

ஜி-7 நாடுகளின் கூட்டம் இவ்வருடம் ஜூன் மாதம் நடக்கவுள்ளது. பிரிட்டனில் நடக்கவுள்ள இக்கூட்டம் ஜீன் 11-லிருந்து 13-ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளின் கூட்டமாக சொல்லப்படும் இக்கூட்டம் தற்போது கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டன்  நாடுகள் பங்கேற்கும் கூட்டம் என்ற நிலைக்கு ஆளாகியுள்ளது.  இவை தவிர பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியவை இக்கூட்டத்தில் பங்கேற்கக் கூடிய நாடுகளாகும். உலக அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படும் ஜி-7 கூட்டம்,  கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான காலத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஏழு நாடுகளைத் தவிர இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *