பில் கேட்ஸ்

பில்கேட்ஸின் சூரிய பொங்கல்! -அழிவின் அறிவியல்

அம்பானி சகோதரர்களைப் பற்றி வியாபார உலகில் ஒரு பேச்சுண்டு. ‘புதிய விதிகள் எதாவது இவர்களின் வியாபாரத்திற்கு இடைஞ்சல் தரும் எனில் அதற்காக இவர்கள் வியாபாரத்தை மாற்றமாட்டார்கள் அதற்கு பதில் விதிகளையே மாற்றிவிடுவார்கள்’ என்று. இதை இப்போது உலகின் மிகப்பெரும் செல்வந்தர் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பின்பற்ற துவங்கிவிட்டார் என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. அதிலும் இவரின் பாணி புதிதாக இருக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் பிரச்சினை செய்பவனையே போட்டுத்தள்ள முடிவு செய்துவிட்டார் போல. 

ஏற்கனவே கொரானா சர்ச்சைகள் பில்கேட்ஸை சுற்றிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இவரது அடுத்த சோதனை உலகிற்கே சோதனையாக முடியும் போல் இருக்கிறது. அப்படியென்ன சோதனை?

புவி வெப்பமயமாதலும், பசுங்குடில் விளைவும்

கடந்த பத்தாண்டுகளாக உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்ட விஷயம் என்று ஒன்று இருக்கிறதென்றால் அது ‘புவி வெப்பமயமாதல்’ நிகழ்வாகவே இருக்கக்கூடும். ஆம். சிறிது சிறிதாக வெப்பமயமாகும் நிகழ்வால் இந்த பூவுலகு அழிவை நோக்கி தள்ளப்படுகிறது. இதில் பல்வேறு காரணிகள் ஓஸோன் படலம், பசுங்குடில் விளைவு என்று இருக்கின்றன. இதில் பசுங்குடில் வாயுக்களின் பணி தலையாயது. 

இயற்கையில் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்வீச்சானது, பூமியை அடையும்போது, வளிமண்டலத்தில் உள்ள வளிமமும், முகிலும், நிலத்தில் உள்ள மண்ணும், நீரும் ஒரு பகுதி ஒளிக்கதிர்களைத் தெறிப்பதனால், அவை மீண்டும் வளிமண்டலத்தை விட்டு மீண்டும் விண்வெளிக்குள் சென்று விடும். 

இன்னொரு பகுதி கதிர்வீச்சை நிலப்பகுதி உறிஞ்சி, அதன் குறிப்பிட்ட பகுதியை மீண்டும் கண்ணுக்குப் புலப்படும் ஒளியைவிடக் கூடிய அலைநீளம் கொண்ட அகச்சிவப்புக் கதிரான வெப்பக் கதிர்வீச்சாக வெளியேற்றும். அந்த அகச்சிவப்புக் கதிர்களில் ஒரு பகுதி வளிமண்டலத்தினுள் வெளிவிடப்படுவதுடன், இன்னொரு பகுதி, வளிமண்டலத்தினூடாக விண்வெளியினுள் சென்று விடும்.

இதன்மூலம் வளிமண்டலத்தின் வெப்பநிலை சீராக வைத்துக்கொள்ளப்படும். ஆனால் வளிமண்டலத்தில் இருக்கும் பசுமைக்குடில் வளிமங்கள் அதிகரிக்கும்போது, வளிமண்டலத்தினூடாக வெளியேற எத்தனிக்கும் அகச்சிவப்புக் கதிர்கள் வெளியேற முடியாமல் இவற்றினால் பிடிக்கப்பட்டு, வளிமண்டலத்தினுள்ளாகவே பல திசைகளிலும் வெளியேறும். இதனால் வளிமண்டலத்தின் வெப்பநிலை இருக்க வேண்டிய அளவைவிட அதிகரிக்கும். இது பசுமைக்குடில் விளைவினால் பூமியின் வளிமண்டலத்திற்கு ஏற்படும் பாதிப்பாகும்.

பசுங்குடில் வாயுக்கள் அதிகமாக அதிகமாக புவியைச் சுற்றி போர்வை போன்று இருக்கக்கூடிய அவற்றின் அடர்த்தி அதிகமாகிறது. இதனால் புவியிலிருந்து திருப்பி அனுப்பப்படும் அகச்சிவப்பு கதிர்கள் வெளியேறமுடியாமல் போகின்றது. இந்த அதிகப்படியான வெப்பம் புவியில் இருக்கும் நீர்நிலைகள், வளிமண்டலம் மற்றும் பல்வேறு காரணிகளால் உட்கிரகித்து அவை மேலும் வெப்பமாகின்றன. இது ஒட்டுமொத்த சூழலியலையும் வெப்பமயமாக மாற்றுகிறது. இதனால் இப்பூவுலகு வெப்பமயமாதலை நோக்கி தள்ளப்படுகிறது. வெப்பமயமாதல் இப்படியே நீடிக்கும் என்றால் இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களும் அழிவை நோக்கி தள்ளப்படும்.

பில் கேட்சின் சூரியனை மங்கவைக்கும் சோதனை

இந்த இடத்தில்தான் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தன்னுடைய வேலையை ஆரம்பித்திருக்கிறார். சூரியனையே மங்கவைக்கும் தொழில்நுட்ப (Sun-dimming technology) சோதனைக்கு நிதியுதவி மற்றும் ஆதரவையும் வழங்கியிருக்கிறார். இதன்படி அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் தொடங்கப்பட்ட ‘வளிமண்டல அடுக்குகளைக் கலைத்து கட்டுப்படுத்தும் சோதனை’யான (Stratospheric Controlled Perturbation Experiment-SCoPEx) சர்ச்சைக்குரிய சோதனைக்கு நிதியுதவி அளித்து ஆதரிக்கும் பணியை செய்ய முன்வந்திருக்கிறார். 

இந்த திட்டமானது நிலத்திலிருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் தொடங்கக்கூடிய ஸ்ட்ராடோஸ்பெரிக் (Stratospheric) என்ற வளிமண்டல அடுக்கில் நச்சுத்தன்மையற்ற கால்சியம் கார்பனேட்  (Calcium carbonate- CaCO3) துகள்களை தெளிப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகளை ஆராயும் நோக்கம் கொண்டது. தீர்வை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கால்சியம் கார்பனேட் துகளானது கண்ணாடி போன்று சூரிய கதிர்களை பிரதிபலிக்கும் இயல்பை கொண்டது.

கால்சியம் கார்பனேட் அய்வு

சர்ச்சைக்குரிய சூரிய-புவிசார் பொறியியல் திட்டங்கள்

இதுபோன்ற சூரிய-புவிசார் பொறியியலின்(Solar geoengineering) பல்வேறு திட்டங்கள் அதன் செயல்திறன் குறித்த சர்ச்சைகளுக்காக பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. எனினும் இதுபோன்ற தீவிர செயல்திட்டங்களுடனான அறிவியலானது நம்மால் கணிக்க முடியாத அபாயங்களுடன் வருவதாகவே  எதிர்ப்பாளர்கள் நம்புகின்றனர்.

சமீபகாலங்களில் வானிலையில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்கள் நாம் ஏற்கனவே கணித்திருக்கும் புவி வெப்பமயமாதல் போக்குகளுக்கு சாட்சியாக இருக்கின்றன. இதை சுட்டிக்காட்டும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் இதேபோல் நாம் எல்லாவித அபாயங்களுக்கும் அதன் மூலத்தை கண்டறிந்து தணிப்பது என்ற முறையை கைக்கொள்ள ஆரம்பித்தால் அதன் விளைவானது தற்போதைய நுகர்வு மற்றும் உற்பத்தி முறைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் பசுமை இல்ல வாயுக்களை தொடர்ந்து வெளியிடுவதற்கு ஆதரவான செயலாகக் கருதப்படும் என்று அஞ்சுகின்றனர்.

ஸ்வீடனில் நிறுத்தப்படவுள்ள பிரம்மாண்ட பலூன்

இந்த SCoPEx சோதனையின் ஆரம்பமானது வரும் ஜூன் மாதத்தில் ஸ்வீடன் நாட்டின் கிருனா (Kiruna, Sweden) என்ற நகரத்திற்கு அருகில் தொடங்கும். அங்கு 12 மைல் (20 கி.மீ) உயரத்தில் இதற்கான அறிவியல் உபகரணங்களைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய பலூன் நிலைநிறுத்தபடும். பலூனை அந்த உயரத்தில் நிலைநிறுத்துவதற்கு ஸ்வீடன் அரசின் ஸ்வீடிஷ் விண்வெளி கார்ப்பரேஷன் ஒப்புக் கொண்டுள்ளது. 

இந்த ஆரம்பகட்ட சோதனையில் வளிஅடுக்கு மண்டலத்தில் எந்த துகள்களும் வெளியிடப்படாது. மாறாக பலூனை நிலைநிறுத்துவதற்கும் அதன் தகவல் தொடர்பு மற்றும் செயல்பாட்டு அமைப்புகளை ஆராய்வதற்கும் இது ஒரு படியாகக் கருதப்படும். இவை வெற்றிகரமாக செயல்பட்டால் இரண்டாவது கட்டத்தை நோக்கி சோதனை செல்லும். அதில் பலூன் மூலம் ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிலான கால்சியம் கார்பனேட் (CaCO3) துகள்களை வளிமண்டலத்தில் வெளியிட்டு சோதனை நடத்தப்படும்.

கால்சியம் கார்பனேட் வளிமண்டல அடுக்குகளில் ஏற்படுத்தும் விளைவு

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் பேராசிரியரான டேவிட் கீத் (David Keith- Professor of applied physics and public policy at Harvard University), இதுபோன்ற புவிசார் பொறியியலின் “பல உண்மையான கவலைகளை” ஏற்கிறார். மேலும் கால்சியம் கார்பனேட்(CaCO3) வளிமண்டல அடுக்குகளில்  வெளியிடப்பட்ட பின்னர் அதன் விளைவுகள் பற்றி நாம் ஆய்வு செய்யும் வரை அங்கு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்பது உண்மைதான் என ஒப்புக்கொள்கிறார். 

கீத் மற்றும் சக SCoPEx விஞ்ஞானிகள் 2017 ஆம் ஆண்டில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அவ்வறிக்கை இதுபோன்ற துகள்கள் ஓசோன் படலத்திலும் வெளியிடப்பட்டால் அவை ஓசோன் படலத்தை அழிக்கும் மூலக்கூறுகளுடன் வினைபுரிவதன் மூலம் அவை ஓசோன் அடுக்கை நிரப்பக்கூடும் என்று பரிந்துரைத்தது. அந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள் “இது பற்றிய மேலதிக ஆராய்ச்சி மற்றும் இதேபோன்ற செயல்முறைகள் அதன் அபாயங்களைக் குறைப்பதற்கும் சூரிய-புவிசார் பொறியியல் முறைகளின் மேம்பட்ட செயல்திறனுக்கும் வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

உறுதிப்படுத்தப்படாத கால்சியம் கார்பனேட் ஆய்வுகள்

இதுவரையில் இப்பூவுலகை குளிர்விக்கத் தேவையான கால்சியம் கார்பனேட்டின் (CaCO3) அளவென்பது யாருக்கும் தெரியாது. SCoPEx விஞ்ஞானிகள் கூற்றுப்படியே இந்த அடுக்கு மண்டல சோதனைக்கு கால்சியம் கார்பனேட் சிறந்த துகளாக இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்த இயலவில்லை. 

ஆரம்பகால ஆராய்ச்சிகளில் இந்த துகளுக்கு “குறிப்பிடத்தக்க ஒளியியல் பண்புகள்” இருப்பதாகக் கண்டறிந்தனர். இதன் வேதிப்பண்புகள் மூலம் இது வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய தூசுப்படலத்துடன் வினைபுரிந்து அவற்றை  சல்பேட் ஆக மாற்றும். இதனால் வளிமண்டல அடுக்கின் வெப்பமானது சற்று குறையும். கால்சியம் கார்பனேட் மிகக் குறைந்த கதிர்வீச்சை உறிஞ்சுவதற்கு அனுமதிக்கும். இதனால் வளிமண்டல அடுக்குகளில் வெப்பநிலை குறையும். இதுவே இந்த பரிசோதனையின் நோக்கம்.

இதன்மூலம் கால்சியம் கார்பனேடின் (CaCO3) பாதுகாப்பான, சோதனை அளவு வெளியானதும் பலூன் வளிமண்டல அடுக்குகளின் வழியாக பறந்து வளிமண்டல எதிர்வினைகளை மாதிரியாகக் கொண்டு அதன் விளைவுகளை இயக்கவியல் ரீதியாகப் பதிவு செய்யும். 

திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான ஃபிராங்க் கீட்ச் (Frank Keutsch), இந்த முடிவுகள் எந்தவிதமான தீர்வுகளைக் கொண்டுவரக்கூடும் என்பது பற்றி தெரியவில்லையென்றும், நாம் செலுத்தும் இந்த  துகளானது உடனடியாக வளிமண்டல அடுக்குகளின் வேதியியலை சீர்குலைக்காது என்றும், “இது செய்யக்கூடிய ஒரே விஷயம் அதிகபட்சமாக சூரிய ஒளியை சிதறடிப்பது, அதன்மூலம் சூரிய ஒளியின் வெளிச்சத்தை புவியில் மங்கவைக்க முடியும், இது புவியை குளிர்விப்பதற்கான ஆரம்பமாகவும் இருக்கலாம்” என்கிறார்.

எரிமலை வெடிப்பிலிருந்து வரும் கந்தக சாம்பல்

எரிமலை வெடிப்பின் விளைவாக எரிமலையிலிருந்து உமிழப்படும் கந்தக சாம்பல் வளிமண்டலத்தில் கலக்கிறது. இந்த கந்தக சாம்பல் உமிழப்பட்ட இடங்களில் வெப்பநிலை குறைந்திருப்பதை புவிசார் பொறியியலின் ஆய்வாளர்கள்  மேற்கோள் காட்டியுள்ளனர்.

இந்தோனேசியாவில் 1815 ஆம் ஆண்டு தம்போரா ஏரிமலையின் (Mount Tambora) வெடிப்பினால் அந்த ஆண்டில் “கோடை காலம் இல்லாத ஆண்டாக” ஆனது, அதே போல 1991-ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் பினாட்டுபோ மவுண்ட் (Mount Pinatubo) எரிமலை வெடித்தது. அப்போது பெரியளவில் உமிழப்பட்ட அதன் கந்தக சாம்பல் வளிமண்டலத்தில் கலந்ததன் மூலம் உலகின்  சராசரி வெப்பநிலையை 0.5° C ஆகக் குறைத்தது. 

செயல்முறைக்கு அளவிடப்பட்டுள்ள செலவு

சர்வதேச அளவில் காலநிலைக்கென்று செயல்படும் காலநிலை மாற்றத்திற்கான இடை-அரசின் (Intergovernmental Panel on Climate Change) அறிக்கை, SCoPEx செயல்முறை உலகளாவிய வெப்பநிலையை 1.5 ° C ஆகக் குறைக்கக்கூடும் என்றும், இதன் செயல்முறைக்கான செலவானது  ஆண்டுக்கு ஒன்றிலிருந்து பத்து பில்லியன் டாலருக்குள்தான் இருக்கக்கூடும் என கணித்துள்ளது.

அபாயங்களைக் கொண்டுவரும் செயற்கை வெப்பநிலை குறைப்பு முறை

இப்படி செயற்கையாக வெப்பநிலையை குறைப்பதென்பது அதன் செயல்முறையுடன் பல்வேறு கடுமையான அபாயங்களையும் கொண்டுவரும் என்று பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் எதிர்க்கின்றனர். உதாரணமாக  1815-ம் ஆண்டில் ஏற்பட்ட உறைபனி குளிர்நிலையில் உணவுப் பயிர்கள் அனைத்தும் மடிந்து கடும் உணவுப் பஞ்சத்தைக் கொண்டுவந்தது. 

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் இதைப்பற்றி கூறும்போது கடந்த காலங்களில் அலாஸ்கா (Alaska) மற்றும் மெக்ஸிகோவில் (Mexico) ஏற்பட்ட எரிமலை வெடிப்பிலிருந்து வெளிப்பட்ட தூசுதுகள்கள்தான் ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் (Sahel region) ஏற்பட்ட கடும் வறட்சிக்கான காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர். 

உலகளாவிய காலநிலையில் செயற்கையாக நாம் ஏற்படுத்தும் பெரும் இடையூறு எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், இது அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளை எதிர்மறையாக பாதித்தால் இந்த உலகம் மீண்டுமொரு புலம்பெயரும் நெருக்கடியை சந்திக்கநேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளை பாதிக்கும் இயற்கைக்கு மாறான சோதனைகள்

இயற்கைக்கு மாறான இத்தகைய சோதனைகளால் ஏதேனும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டால் அது இந்த செயல்திட்டத்தில் பங்கேற்காத அனைவரையுமே பாதிக்கக்கூடும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் பொருளாதார வளமற்ற சிறிய நாடுகள் பெரிய சேதத்தை எதிர்கொள்ளலாம். எனவே அப்படிப்பட்ட சேதங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு அந்த இழப்பை ஈடுசெய்ய ஒரு ‘பொது நிதி’ யை ஏற்படுத்தவேண்டும் என்று டேவிட் கீத் முன்மொழிந்தார். 

இந்த பொது நிதியானது விரும்பத்தகாத நிலைகள் ஏற்பட்டு அதனால் எங்கேனும் காலநிலை மாற்றம் கண்டு அங்கு மக்கள் புலம்பெயரும் சூழ்நிலை உருவாகுமென்றால் அவர்களுக்கு அந்த நிதி உதவக்கூடும். நல்வாய்ப்பாக அமெரிக்கா, பிரேசில் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இத்தகைய உலகளாவிய புவிசார் பொறியியல் திட்டங்கள் குறித்த 2019ம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டைத் தடுத்திருக்கின்றன .

எதிர்காலத்தின் முன் உள்ள அறியப்படாத அபாயங்கள்

வரும்காலத்தில் சூரிய புவிசார் பொறியியலில் காணப்படாத, அறியப்படாத அபாயங்களைக் கருத்தில் கொண்டு அவற்றை தவிர்த்து பொருளாதார ரீதியாக சிறந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும். இது போன்ற முயற்சிகளை மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கவனமாக செய்யப்படும் ஆராய்ச்சிகளை பரிசோதனைகளுக்கு பின்தான் தொடரவேண்டும். 

ஏனெனில் இதுபோன்ற எந்தவொரு பரிசோதனையின் அபாயங்களையும், அதில் பெறப்போகும் வெற்றி மற்றும் தோல்விகளை மதிப்பிடுவதற்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும். மேலும் இந்த விதமான சோதனைகள் மக்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களையும் கருத்தில் கொண்டுதான் செயல்படுத்தப்படவேண்டும். 

பில்கேட்ஸ் போன்ற பெரும் செல்வந்தர்களின் நோக்கம் எப்போதுமே பொருளாதார லாபத்தை சார்ந்துதான் இருக்கக்கூடும். இதை அவர்களின் கடந்தகால வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ளலாம். ஒரு தனிப்பட்ட நபரின் அல்லது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இந்த பூவுலகின் ஒட்டுமொத்த உயிர்களையும் பலி கொடுப்பதென்பது பூவுலகின் உயிர்களின் அழிவின் தொடக்கமாகவே இருக்கக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *