ஆஸ்திரியாவில் இருந்த ஹிட்லரின் நாஜி வதைமுகாமான மவ்தாசென் (Mauthausen) வதைமுகாமிற்கு அனுப்பப்பட்ட 7,500 ஸ்பானியர்களில் உயிர் தப்பி வாழ்ந்துவந்த கடைசி மனிதராக இருந்தவர் தனது 101 வயதில் தற்போது இறந்துள்ளார்.
ஜுவான் ரோமெரோ என்கிற அந்த ஃபாசிச எதிர்ப்பு போராளி ஸ்பெயின் நாட்டில் உள்ள கோர்டோபாவில் 1919-ம் ஆண்டு பிறந்தார். அவரது இளம் பருவத்தில் ஸ்பெயினில் குடியரசு பிரிவினருக்கும், பாசிச பிரிவினருக்கும் இடையில் உள்நாட்டு கலகம் வெடித்த போது, குடியரசு அணியின் சார்பாக பாசிசத்திற்கு எதிராக பல போர்களில் ஈடுபட்டு கடுமையான காயங்களை அடைந்தவர்.
1939-ம் ஆண்டு ஸ்பெயினின் சர்வாதிகாரி ஃபிரான்கோ தலைமையிலான பாசிச அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கிட்டதட்ட 5,00,000 பேர் அகதிகளாக ஸ்பெயின் நாட்டிலிருந்து வெளியேறி பிரான்ஸ் நாட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர். இதில் ஜுவான் ரோமெரோவும் ஒருவர்.
பிரான்ஸ் நாட்டில் அகதியாகக் குடியேறிய பின்னர், அந்நாட்டின் சார்பாக வெளிநாட்டு படைப்பிரிவில் சேர்ந்த ரொமெரோ இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். அப்போது ஹிட்லரின் நாஜிப் படைகளுக்கு எதிரான ஒரு போரில் ரொமெரோ கைதியாக பிடிபட்டு மவ்தாசென் வதைமுகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ரொமெரோவுடன் சண்டையிட்ட பல ஸ்பானிய அகதிகள் அந்த வதைமுகாமில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் முகாம்களில் உள்ள குவாரிகளுக்கு அனுப்பப்பட்டு அடிமைப் பணியாளர்களாக சாகும் வரையில் வேலை செய்வதற்கு பணிக்கப்பட்டனர். பசிக் கொடுமை, கடுமையான வேலைச்சுமை மற்றும் கொலை ஆகியவற்றின் மூலமாக மவ்தாசென் வதைமுகாமில் ஸ்பானிய அகதிகள் மட்டும் 5,200 பேர் வரை உயிரிழந்தனர்.
மவ்தாசென் வதை முகாமில் ரொமொரோ
ஜெர்மனியின் நாஜிப் படை 1938-ல் ஆஸ்திரியாவைக் கைப்பற்றிய சில காலத்திலேயே மேற்கு ஆஸ்திரியாவில் மவ்தாசென் என்கிற இடத்தில் வதைமுகாம் ஒன்றினை அமைத்தது. தொடர்ந்து 7 ஆண்டுகள் அந்த வதைமுகாம் இயங்கியது. 1945-ல் அம்முகாமினை அமெரிக்கப் படைகள் கைப்பற்றி, கைதியாக இருந்தவர்களை விடுவிப்பதற்கு முன்பான காலம் வரையில் அங்கே 1,00,000-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லபட்டனர்.
விசவாயு அறைகள், விசவாயு வேன்கள், விச ஊசிகள், நாய்களை விட்டு கடிக்க வைத்தல், குளிர் காலங்களில் பனிக்குவியல்களில் குளிக்க வைத்தல், துப்பாக்கியால் சுடுதல் போன்றவை கொலைகளுக்கான வழிமுறைகளாக வதைமுகாமில் பின்பற்றப்பட்டன.
மவ்தாசென் வதைமுகாமில் தன்னுடைய வலிசுமந்த நினைவுகள் குறித்து ரொமேரோ ஒரு பேட்டியில் உருக்கமான பதிவினை செய்திருக்கிறார்.
“எனக்கு ஏதோ ஒரு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. நான் நாடு கடத்தப்பட்டவர்களின் ஆடைகளை சலவை செய்து கவனிக்கும் குழுவிற்கு அனுப்பப்பட்டேன். இல்லையென்றால் குவாரிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பேன். அந்த குவாரிகளில் நீங்கள் களைப்பாய் தெரிந்தாலோ அல்லது நடக்க முடியாத நிலையில் இருந்தாலோ உங்களை சுட்டுக் கொன்று விடுவார்கள். ஆனால் நாங்கள் அமர்த்தப்பட்ட சலவை அறையில் எங்களை தனியே விட்டு விடுவார்கள். அங்கு சில துணிகளின் பாக்கெட்டுகளிலிருந்து எங்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதேனும் அவ்வப்போது கிடைத்தது.” என்று முகாமின் அவல நிலை குறித்து பதிவு செய்கிறார்.
“அவர்கள் யூதர்கள் சிலரை முகாமிற்கு அழைத்து வந்தார்கள். அதில் ஒரு சிறுமி என்னைக் கடந்து சென்றாள். அந்த யூத சிறுமி என்னை நோக்கி சிரித்தாள். சோகம் என்னவென்றால் அவள் விச வாயு அறையில் அடைக்கப்பட்டு கொல்லப்படப் போகிறாள் என்கிற விடயத்தை அறியாமல் இருந்தாள். நான் அவளைக் கட்டி அணைத்து இருக்கலாம். அப்படி செய்திருந்தால் நானும் அந்த விச வாயு அறையில் நாஜி படைகளால் கொல்லப்பட்டு இருப்பேன். அந்த நிகழ்வினை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவர்கள் யூதர்களை தினந்தோறும் கொன்றுகொண்டே இருந்தார்கள்” என்கிறார்.
அமெரிக்கப் படையினரால் மவ்தாசென் முகாம் விடுவிக்கப்பட்ட பிறகு அவர் உள்ளிட்ட 2,000 ஸ்பானியர்கள் உயிருடன் விடுதலை செய்யப்பட்டனர். மவ்தாசென் முகாமில் நாஜிக்களால் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களின் இறுதி வாழும் சாட்சியாக ரொமெரோ மட்டுமே இருந்தார்.
மவ்தாசென் வதைமுகாமின் சில புகைப்படங்கள்
மவ்தாசெனின் கடைசி ஸ்பானியர்கள்(The Last Spaniards of Mauthausen) என்கிற புத்தகத்தில் ஊடகவியலாளரும் வரலாற்றாசிரியருமான ஹெர்னாண்டஸ் (Carlos Hernández de Miguel) அங்கு வதைபட்ட ஸ்பானியர்கள் குறித்து தொகுத்துள்ளார்.