2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலக்கட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ-க்களில் 45% சதவீதம் பேர் பாஜகவில் இணைந்திருப்பதாக Association For Democratic Reforms(ADR) அமைப்பு வெளியிட்ட தரவுகளில் தெரிய வந்திருக்கிறது.
இந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 405 எம்.எல்.ஏ-க்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து தேர்தல் நேரங்களில் வெளியேறியுள்ளனர். அதில் 170 எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து மட்டும் வெளியேறியுள்ளனர். அதேசமயம் இந்த 5 ஆண்டுகளில் பாஜக-விலிருந்து 18 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே வெளியேறியுள்ளனர்.
வெளியேறிய எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை (கட்சி வாரியாக)
காங்கிரஸ் – 170
பாஜக – 18
பகுஜன் சமாஜ் கட்சி – 17
தெலுங்கு தேசம் கட்சி – 17
நாகா மக்கள் முன்னணி – 15
YSR காங்கிரஸ் – 15
தேசியவாத காங்கிரஸ் – 14
சமாஜ்வாதி கட்சி – 12
ராஷ்டிரிய ஜனதா தளம் – 10
மதச்சார்பற்ற ஜனதா தளம் – 9
இந்திய தேசிய லோக் தளம் – 8
ஆம் ஆத்மி கட்சி – 7
ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா – 6
ஒருங்கிணைந்த ஜனதா தளம் – 5
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 4
அதிமுக – 3
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி – 3
தேமுதிக – 2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 1
திமுக – 1
என்.ஆர்.காங்கிரஸ் – 1
பெரும்பாலானோர் பாஜகவில் இணைந்துள்ளனர்
பல்வேறு கட்சிகளில் இருந்து வெளியேறிய எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானோர் பாஜகவிலேயே இணைந்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. மொத்தம் 182 எம்.எல்.ஏ-க்கள் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள்.
கட்சி மாறிய பின்னும் வெற்றி பெற்றவர்கள்
கட்சி மாறிய 405 எம்.எல்.ஏ-கள் வேறு கட்சியில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள். அவர்களில் 225 பேர் மீண்டும் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
கட்சி மாறியதால் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புகள்
மத்தியப் பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறியதன் காரணமாக ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்றுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
கட்சி மாறிய எம்.பி-க்கள்
இந்த 5 ஆண்டு காலங்களில் 12 எம்.பி-க்கள் கட்சி மாறி பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா எம்.பி-க்களில் 16 பேர் கட்சி மாறியிருப்பதாகவும், அதில் 7 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி மாறிய் 16 ராஜ்யசபா எம்.பி-க்களில் 10 பேர் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள்.
பண மோகமும், பதவி மோகமும் அதிகரிப்பு
பழைய கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிட்ட போது அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது என்றும், கட்சி மாறி தேர்தலை சந்தித்த போது அவர்களின் சொத்து மதிப்பு என்னவாக உள்ளது என்ற விவரங்களையும் ADR அறிக்கை வெளியிட்டுள்ளது. பதவிக்காகவும், பணத்திற்காகவும் கட்சி மாறுவது இந்திய அரசியல்வாதிகளிடமும், கட்சிகளிடத்திலும் அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.