தமிழர்களை படுகொலை செய்த பிரிட்டிஷ் கூலிப்படையின் மீதான விசாரணை இங்கிலாந்தில் ஸ்காட்லாந்து யார்டு போர்க்குற்ற விசாரணைப் பிரிவினரால் துவங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளரும், ஆய்வாளருமான ஃபில் மில்லர் என்பவர் தமிழர்களை படுகொலை செய்த ’கீனி மீனி சர்வீசஸ்’ எனப்படும் கூலிப்படையின் குற்றங்களைக் குறித்த புத்தகத்தையும், ஆவணப்படத்தையும் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.
கீனி மீனி ஆவணப்படம் முழு இணைப்பு கீழே:
இந்திய அமைதிப் படைக்கும், கீனி மீனிக்குமான தொடர்பு
ஃபில் மில்லர் தனது புத்தகத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையினரும் (IPKF) கீனி மீனி சர்வீசஸ் எனும் கூலிப் படையினரிடம் விமானிகளைப் பெற்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
1987-ல் ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே இடையே இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டவுடன் நான்கு மாதங்களுக்கு கீனி மீனி கூலிப்படையினரை ரகசியமாக இந்தியா பயன்படுத்தியதாக அவர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
IPKF வருவதற்கு முன்பு இந்த கூலிப்படையினர் தமிழர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்ட நிகழ்வுகளையும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கீனி மீனி சர்வீசஸ் என்பது என்ன?
’கீனி மீனி’ எனும் வார்த்தையானது ரகசிய நடவடிக்கைகளைக் குறிப்பிடக் கூடிய ஒரு அரபு மொழி வார்த்தையாகும்.இந்த கூலிப்படையினை இங்கிலாந்து சிறப்பு விமானப் படைப் பிரிவின் தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற ஜிம் ஜான்சன் என்பவர் நடத்தி வந்தார். அவர் ஏமன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆவார். இந்த கூலிப்படையானது 1970களில் முன்னாள் பிரிட்டன் படை வீரர்களை வைத்து உருவாக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.
இதையும் படிக்க: கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உதவியை நாடிய இலங்கை
1983 காலகட்டத்தில் இலங்கை அரசானது தமிழர்களின் போராட்டத்தினை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உதவியை நாடியது. அன்றைய புவிசார் அரசியல் சூழலின் அடிப்படையில் நேரடியாக ராணுவத்தினை அனுப்பி இலங்கைக்கு உதவுவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் தயங்கியது. அதன் காரணமாக கீனி மீனி சர்வீசஸ்-இன் கூலிப்படை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்படையினரின் பெரும்பாலான குற்றங்கள் குறித்த ஆதாரங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வெளியுறவு அலுவலகத்தின் கோப்புகளில் கடந்த 30 ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக ஃபில் மில்லர் தெரிவித்துள்ளார்.
கீனி மீனி படையினர் தமிழர்கள் மீது நடத்திய படுகொலை
இலங்கைக்கு ரகசிய நடவடிக்கையின் பேரில் சென்ற கீனி மீனி கூலிப்படையினர் இலங்கையின் சிறப்பு படைப் பிரிவிற்கு பயிற்சி அளித்ததோடு நேரடி கொலை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். ஏராளமான தமிழ் இளைஞர்கள் கீனி மீனி கூலிப் படையினரால் கொல்லப்பட்டனர். மேலும் சிங்கள இடதுசாரி இயக்கங்களின் எழுச்சியை ஒடுக்குவதற்காகவும் அந்த கூலிப்படையினர் பயன்படுத்தப்பட்டதாக ஃபில் மில்லர் தெரிவிக்கிறார்.
கீனி மீனி கூலிப்படையினரின் துவங்கப்பட்டுள்ள இந்த விசாரணையானது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. எனினும் இந்த கூலிப்படை உருவாக்கத்தின் பின்னால் இங்கிலாந்து அரசு இருப்பதாக பார்க்கப்படுவதால் பன்னாட்டு அளவிலான ஒரு விசாரணையின்றி, இந்த விசாரணையில் முழு உண்மையும் வெளிவரும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதே நிதர்சனம்.
லண்டனில் உள்ள தமிழ் தகவல் மையம் (Tamil Information Centre) கீனி மீனி கூலிப்படையினரின் குற்றங்கள் குறித்த பல ஆதாரங்களை காவல்துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரிட்டிஷ் கூலிப்படையினரின் துணையோடு இலங்கை அரசு நடத்திய போர்க்குற்றங்களின் மூலமாக ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதும், கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டதும் நடந்திருப்பதாக தமிழ் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
ஆயுதங்களுடன் ஹெலிகாப்டரில் வந்த கீனி மீனி கூலிப்படையினர் தமிழ் மக்களின் மீது தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த கீனி மீனி படையினர் நிகாரகுவா முதல் இலங்கை வரை பல நாடுகளில் ரகசிய குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இப்போதுதான் அவர்கள் மீது முதல்முறையாக விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.