தமிழீழ இனப்படுகொலையில் பிரித்தானிய அரசினுடைய பங்கு பற்றி விளக்கும் ’கீனி மீனி’ என்ற ஆவணப்படம் வெளியாகி, மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பில் கவனம் பெற்றுள்ளது. பிரிட்டனின் போர் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளரான ஃபில் மில்லர் இந்த ஆவணப்படத்தினை இயக்கியுள்ளார்.
கீனி மீனி ஆவணப்படம்
53 நிமிடங்கள் கால அளவுள்ள இந்த ஆவணப்படம், பிரித்தானிய அரசு தனது முன்னாள் ராணுவத்தினர் பணியாற்றிய கீனி மீனி சர்வீசஸ் எனும் ரகசிய ராணுவ கூலிப்படையினைக் கொண்டு, இலங்கை ராணுவத்திற்கு போரியல் நடவடிக்கைகளை பயிற்றுவித்ததைப் பற்றி விவரிக்கிறது. பிரிட்டனுடைய ராணுவக் கூலிப்படையான கீனி மீனி சர்வீசஸ், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க சிங்கள ராணுவப் படைகளுக்கு பயிற்சி வழங்கியதோடு மட்டுமல்லாமல் தமிழர்களுக்கெதிரான படுகொலைகளில் நேரடியாக பங்காற்றியது பற்றி இந்த ஆவணப்படம் விளக்குகிறது.
சிங்கள அரசுக்கு கூலிப்படை மூலம் பயிற்சியளித்த இங்கிலாந்து
1980 காலக்கட்டங்களில் தமிழர்களுடைய விடுதலை அரசியல் எழுச்சியையும், 1983 ஜூலை கலவரத்திற்குப் பிறகான ஆயுத விடுதலைப் போராட்டத்திற்கு எழுந்த தமிழ் மக்களின் ஆதரவையும் ஒடுக்க சிங்கள ஆளும் தரப்பு ஒரு புதிய மாற்று வழியைத் தேடுகிறது. மேலும் உள்நாட்டு கொரில்லா யுத்த முறைகளுக்கு எதிராக போரிடுவதற்குரிய எதிர் நடவடிக்கைகளில் அனுபவமில்லாத சிங்கள ராணுவம், விடுதலைப் புலிகளை எதிர்கொள்வதில் சிரமப்படுகிறது.
இதன் காரணமாக, பிரிட்டனுடைய புவிசார் அரசியல் நலனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் சிங்கள ஆளும் தரப்பு தங்களது காலனிய எஜமானர்களான பிரிட்டனின் உதவியை நாடியது. அப்போதைய பனிப்போர் சூழலின் காரணமாக நேரடியாக தலையிட முடியாத பிரிட்டன், ரகசியமாக தனது முன்னாள் ராணுவத்தினரைக் கொண்ட கீனி மீனி சர்வீசஸ் மூலம் சிங்கள அரசுக்கு உதவ முன்வருகிறது.
1984 செப்டம்பர் மாதம் சிங்கள ராணுவத்தின் முதல் குழுவிற்கு கீனி மீனி சர்வீஸஸ் தனது பயிற்சியினை வழங்குகிறது.
ஏமன், அயர்லாந்து கிளர்ச்சிகளை ஒடுக்கிய அனுபவத்தை பயன்படுத்திய கீனி மீனி சர்வீசஸ்
கீனி மீனி சர்வீசஸின் தலைமை இயக்குநர் டேவிட் வாக்கர் நிகராகுவா நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்பில் பங்காற்றியவர். கீனி மீனி சர்வீசஸின் சிங்கள ராணுவ பயிற்சிக்கு தலைமைப் பொறுப்பு வகித்தவர் கென் வொய்ட் என்று அழைக்கப்பட்ட ப்ரெய்ன் பெய்ட்டி. இவர் பிரிட்டன் அரசுக்காக ஏமன், அயர்லாந்து போன்ற நாடுகளில் உளவு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவர். அந்நாடுகளில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், மக்கள் கிளர்ச்சிகளை ஒடுக்கும் எதிர் நடவடிக்கை அனுபவத்தினை சிங்கள ராணுவத்திற்கு பயிற்றுவித்தார்.
மிகக் குறிப்பாக விடுதலை கோரும் மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் எதிர் நடவடிக்கைகளின் நிபுணத்துவத்தினை பிரிட்டன், சிங்கள ராணுவத்திற்கு பயிற்றுவித்தது.
கீனி மீனி கூலிப்படையின் மூலம் நடத்தப்பட்ட கோரமான படுகொலைகள்
அதன் பிறகு சிங்கள ராணுவப் படையினரால் தமிழர்கள் மீது பெரும் அரச வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்பாவி மக்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு தீயிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். பலர் காணாமல் ஆக்கப்படுகின்றனர். பருத்தித்துறை பெட்ரோ படுகொலையில் 10 அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். கீனி மீனி சர்வீசஸைச் சேர்ந்த பிரிட்டிஷ் பைலட்டுகளின் உதவியால் தமிழர்களின் குடியிருப்புப் பகுதிகளில் குண்டு வீசப்படுகிறது. ஆயுத விடுதலைப் போராளிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஏராளமான தமிழர்கள் சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
கீனி மீனி சர்வீசஸின் பிரிட்டிஷ் ராணுவக் கூலிப்படையினரும் நேரடியாக தமிழர்களைப் படுகொலை செய்கின்றனர். கீனி மீனி சர்வீசஸைச் சேர்ந்த டிம் ஸ்மித் என்பவர் தான் எழுதிய ‘The Reluctant Mercenary’ என்ற புத்தகத்தில், ”185 தமிழர்களை கொன்றது வரையிலும் தான் நிகழ்த்திய கொலைகளை கணக்கிட்டதாகவும், அதன் பிறகு கணிக்கிடுவது சலிப்பூட்டியதால் தன்னால் கொல்லப்பட்ட தமிழர்களை கணக்கிடுவதை கைவிட்டதாகவும்” பதிவு செய்துள்ளார். மேலும் தமிழ் பள்ளி ஒன்றின் மீது நடத்திய குண்டு வீச்சையும் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.
மேற்கூறியவைகளை தனது ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கும் ஃபில் மில்லர், இலங்கைக்கான பிரிட்டனின் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய லெப்டினன்ட் கேணல் ரிச்சர்ட் ஹோல்வோர்த்தியிடம், “கீனி மீனியைச் சேர்ந்த பிரிட்டிஷார்கள் நிகழ்த்தியது போர்க் குற்றமில்லையா?” என கேள்வியெழுப்புகிறார்.
சிங்கள உளவுப் பிரிவு இயக்குநரின் வாக்குமூலம்
ஆவணப்படத்தில் தனது கருத்தை பதிவு செய்திருக்கும், அன்றைய காலக்கட்ட சிங்கள அரசின் உளவுப்பிரிவினுடைய இயக்குநர் பெரில் குணரத்ன, “கீனி மீனி சர்வீசஸினுடைய பயிற்சி தங்களது பின்னாளைய பெரிய ராணுவ நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு உதவியது” என கூறியிருக்கிறார். மேலும், ”கீனி மீனி பிரிவினரின் பயிற்சிக்குப் பிறகு நாங்கள் எட்டிய நிலையை அதற்கு முன்னர் நாங்கள் எட்டியதில்லை. தங்களது சொந்த பயிற்சியின் விளைவாக சிங்கள ராணுவப் படை இதனை எட்டியிருக்க முடியாது. கீனி மீனி பிரிவினரின் பயிற்சியின் மூலமாகவே நாங்கள் வெற்றிகரமாக விடுதலைப் புலிகளை எதிர்க் கொண்டோம். அதன் பிறகே நாங்கள் எண்ணிக்கையிலும், கட்டமைப்பிலும் வளர்ந்தோம். எங்களிடையே விடுதலைப் புலிகளை வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை வளர்ந்தது.” என்கிறார்.
1980-90 களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் பிரிட்டனின் கூடுதல் உதவியே சிங்கள ராணுவப் படையை கூடுதல் வலிமையுள்ளதாக ஆக்கியிருக்கிறது; கொரில்லா போர் முறையை எதிர்கொள்ளும் திறனை தந்திருக்கிறது.
அமெரிக்க உளவுத்துறை ஆவணம்
சிங்கள ராணுவத்திற்கு பிரிட்டனின் கீனி மீனி சர்வீசஸ் வழங்கிய பயிற்சியைப் பற்றி கூறும் அமெரிக்க உளவுத்துறை ஆவணமொன்று, ”தமிழ் மக்கள் மீதான சிங்கள ராணுவத்தின் வன்முறைக்கான மோசமான காரணகர்த்தர்களில் கீனி மீனி சர்வீஸூம் ஒன்று” என குறிப்பிட்டுள்ளது.
கீனி மீனி சர்வீசஸிடம் பயிற்சி பெற்ற சிங்கள ராணுவம், தமிழர்களிடையே எழுந்த உரிமை எழுச்சிப் போராட்டங்களை ஒடுக்கும் யுக்தியாக ‘ஆயுத விடுதலைப் போராளிகளோடு சாமனிய மக்களையும் படுகொலை செய்யும்’ எதிர் நடவடிக்கை யுக்தியை செயல்படுத்தத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாகத் தான் 2009-ல் விடுதலைப் புலிகளோடு தமிழ் மக்களும் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுகின்றனர்.
இன்னும் தொடரும் தமிழர்களின் துயரம்
முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து 11 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. தமிழீழத்தில் தங்களது ஒன்றரை லட்சம் உறவுகளைப் பறிகொடுத்த தமிழர்களினுடைய வாழ்வு இன்றும் பேரவலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. தங்களது நிலங்கள் பறிக்கப்பட்டு, அடையாளங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டு சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்குள்தான் தமிழர்கள் தங்கள் வாழ்க்கைப்பாடுகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆக்கிரமிப்பு ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது, ஆண்/ பெண் வித்தியாசமின்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 2009 முள்ளிவாய்க்கால் படுகொலை முடிவில் காணாமல் செய்யப்பட்ட தங்கள் சொந்தங்களின் நிலையறிய தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர் தமிழர்கள். சிங்கள அரசு தமிழர்களுடைய போராட்டங்களை மீண்டும் அடக்குமுறைகளின் வழி நின்றே கையாள்கிறது.
மக்கள் எழுச்சியை ஒடுக்கும் கருவிகளான கீனி மீனியும், ஸ்காட்லாந்து யார்டும்
தங்களது ராணுவத்தின் அரச வன்முறையை நியாயப்படுத்த இன்று விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில், மக்களை எதிர்கொள்ள காவல்துறையை முன்னணிக்கு கொண்டு வருகிறது. இலங்கை அரசின் மக்கள் விரோத திட்டங்கள்/கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் சிங்கள மக்களையும் இலங்கை காவல்துறை குண்டாந்தடி கொண்டு தாக்குகிறது. தாராளமய கொள்கைகளுக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்கும் நிபுணத்துவமுடைய பிரிட்டனின் ஸ்காட்லாந்த் யார்ட் காவல்துறை இலங்கை காவல்துறைக்கு பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறது.
தமிழர்களுக்காக பேசும் ஆய்வாளர் ஃபில் மில்லர்
ஆவணப்படத்தின் முடிவில், ஸ்காட்லாந்த் யார்ட் காவல்துறையின் மூலம் தற்போது வரையிலும் சிங்கள இனப்படுகொலை அரசிற்கு உதவுகின்ற பிரிட்டனின் ஆட்சி அதிகார கட்சிகள் குறித்து ஒரு தெளிவான நிலைப்பாட்டிற்கு புலம்பெயர் தமிழர்கள் வந்தடைய வேண்டும் என ஃபில் மில்லர் கோருகிறார்.
இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் ஃபில் மில்லர் 2013-ம் ஆண்டு ஜெர்மனியின் பிரேமேன் நகரில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தில் தமிழினப்படுகொலையில் பிரிட்டனின் பங்கை விவரிக்கும் அறிக்கையை சமர்பித்தவர். அவ்வறிக்கையின் அடிப்படையில் Britain’s dirty war என்ற புத்தகத்தினை எழுதி வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்ட பிரிட்டனுடைய கீனி மீனி சர்வீசஸைப் பற்றி இன்னும் விரிவாக ஆய்வு செய்து இவ்வாண்டு ஜனவரி மாதம் கீனி மீனி என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களை கொண்டு இயக்கிய ஆவணப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
காலனியம், உலக யுத்தம், முதலாளித்துவ பனிப்போர், தாராளமய கொள்கைக்கு கீழான நவ காலனியம் என அரசியல் சூழல் மாறலாம். தனது புவிசார் அரசியல் நலனை எதிர்நோக்கிய ஒரு வல்லரசும், காலனியாதிக்கத்தின் கீழிருந்த ஒரு மூன்றாம் உலக நாட்டின் ஒரு பேரினவாத அரசும், அந்த பிராந்தியத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கேற்ப கீனி மீனி சர்வீஸ் போன்ற கூலிப்படை மூலமோ, ஸ்காட்லாந்த் யார்ட் காவல்துறை மூலமோ தங்கள் உறவைத் தொடர்கின்றன என்பதையே இந்த ஆவணப்படம் விளக்குகிறது.
கீனி மீனி ஆவணப்படத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள Vimeo இணைப்பில் பார்க்கலாம்:
https://vimeo.com/466094032