இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் காலத்தில் தொடர்ச்சியாக புயல் அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டாலும், மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் போதிய மழை பெய்யாததால் வறட்சியின் பிடியில் உள்ளது.
நிவர் புயல் விழுப்புரம் மாவட்டத்தில் கரையைக் கடந்திருந்தாலும், பெரும் மழை வெள்ளத்தால் மாவட்டத்தின் சில பகுதிகள் சேதப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையான ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை.
ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய மழை இன்னும் பெய்யவில்லை
விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய 106 செ.மீ. மழைக்கு தற்போது வரை 76.9 செ.மீ. மழையே பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களில் மாவட்டத்தில் சராசரியாக 178.23 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
நிரம்பாத ஏரிகள்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,348 ஏரிகளில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 506 ஏரிகளில் 62 ஏரிகளும், ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 842 ஏரிகளில் 159 ஏரிகளும் முழுமையாக நிரம்பியிருக்கின்றன. 147 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியும், 370 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியும், 166 ஏரிகள் 50 சதவீதத்திற்கு குறைவாக நிரம்பியும் உள்ளது. மொத்தமாக 221 ஏரிகள் மாவட்டத்தில் நிரம்பியுள்ளது.
மொத்தமுள்ள 1,348 ஏரிகளில் 16.3 சதவீத ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளது. வீடூா் அணையின் 32 அடி கொள்ளளவில் 24.7 அடி மட்டுமே நிரம்பியுள்ளது.
வடகிழக்கு பருவ மழையும் குறைவே; ஆறுதலாய் நிவர் புயல் மழை
வடகிழக்கு பருவமழையில் விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 569.19 மி.மீ பதிவாகவேண்டும். கடந்த அக்டோபரில் தொடங்கி, கடந்த 4 நாட்களுக்கு முன் பெய்த மழையையும் சோ்த்து 392.24 மி.மீ. அளவு மட்டுமே பதிவாகியுள்ளது.
வழக்கமாக நவம்பர் மாதத்தில் 317.80 மி.மீ. மழை பெய்யக் கூடிய நிலையில் நேற்று வரை 270.20 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த நவம்பா் மாதம் முழுவதும் 97.23 மி.மீ. அளவில்தான் மழை பெய்தது. ‘நிவர்’ புயலின் பெருமழையே நிலைமையைப் பெருமளவு சரி செய்திருக்கிறது.
விவசாயிகள் எழுப்பிய சிக்கல்கள்
அண்மையில் விழுப்புரத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றவர்களும் ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக தங்கள் ஆதங்கத்தை தெரியப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட விவசாய சங்கங்களின் சேர்ந்தவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது,
கடந்த 13 ஆண்டுகளில் 2015-ம் ஆண்டு அதிகப்படியாக 1390.25 மி.மீ மழை பெய்துள்ளது. “விழுப்புரம் மாவட்டத்தில் பல ஏரிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கின்றன. மழையால் ஏரி நிரம்பினாலும், ஆக்கிரமிப்பாளர்கள் தேங்கும் நீரை வெளியேற்றி விடுகின்றனர். வாய்க்கால் வரப்புகள் முழுமையாக தூர்வாரப்படுவதில்லை முறையாக குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ளவில்லை. ஒப்பந்ததாரர்கள் ஆளும்கட்சியினராக இருப்பதால் கீழ்மட்ட அலுவலர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
குடிமராமத்தில் 25 சதவீத பணிகளை மட்டுமே முடித்து, முழுமையாக பணிகள் முடிந்ததாக கணக்கு காட்டப்படுகிறது.
அரசின் ஆவணங்களில் தூர் வாரியதாக கணக்கில் இருந்தாலும், முறையாக தூர் வாரப்படுவதில்லை என்று இங்குள்ள விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலும் இதே நிலை
அதே போல பெரம்பலுர் மாவட்டத்தில் இன்னும் போதிய மழை பெய்யாததால் அணைகளும் ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன.
வெள்ளாற்றின் குறுக்கே பெரம்பலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் அத்தியூர் ஏரி, ஒகளூர் ஏரி, வடக்கலூர் ஏரி, கீழப்பெரம்பலூர் ஏரி உள்பட சிறியதும், பெரியதுமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பும். இந்த பகுதியில் உள்ள பெருமபான்மையான விவசாயிகள் இந்த வெள்ளாற்று நீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர்.
எப்பொழுதுமே நவம்பர் மாத முதல் வாரத்திலேயே ஆற்றில் தண்ணீர் வரத்து தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் இல்லாமல் வெள்ளாற்று பகுதிகள் மற்றும் தொழுதூர் அணைக்கட்டு வறண்டு கிடக்கிறது. இதனால் வெள்ளாற்றில் கீழ குடிக்காடு மற்றும் அகரம்சிகூர் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன.
நிவர் புயலால் வட மாவட்டங்களில் சில பகுதிகள் மழை பெற்றுள்ளது. ஆனால் வடகிழக்கு பருவ மழையின் இறுதி காலம் வரை எந்த நீர்வரத்தும் இல்லாமல் இருப்பதால் இந்த ஆண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.