Cuban healthcare

உலகுக்கு முன்னுதாரணமாய் கியூப மருத்துவம் நிற்பது எப்படி?

உலகத்தின் பெரிய வல்லரசுகள் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது, ஒரு சிறிய நாடு கொரோனாவை சரி செய்ய உலகின் பல்வேறு நாடுகளுக்கு மருத்துவர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு தொடர்ச்சியாக உள்ளாகி வந்த அந்த நாடுதான் கியூபா.

மருத்துவர்களை உருவாக்கிய கியூபா

மிகவும் பின்தங்கிய நாடாக இருந்த கியூபாவில், 1959-ல் அமெரிக்காவின் பொம்மை அரசாக இருந்த பாடிஸ்டாவின்  ஆட்சியை ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேரா தலைமையிலான புரட்சிப் படைகள் வீழ்த்தி ஆட்சிக்கு வந்த பிறகிலிருந்தே கல்வியையும், மருத்துவத்தையும் வளர்த்தெடுப்பதில் உறுதி பூண்டது.

கியூபா தொடர்ச்சியாக பல்வேறு தொற்று நோய்களுக்கு உள்ளாகக் கூடிய நாடாக இருந்தது. அதனால் மருத்துவத் துறையில் புரட்சியை செய்ய முனைந்த கியூபா பல்வேறு மருத்துவக் கல்வி நிறுவனங்களை உருவாக்கி ஆண்டுதோறும் ஏராளமான மருத்துவர்களை உருவாக்க முனைந்தது. பல்வேறு நாடுகளுக்கும் தனது மருத்துவ மாணவர்களையும், நிபுணர்களையும் அனுப்பி பல்வேறு உயர் தொழில்நுட்பங்களையும் பயிலச் செய்தது.

தொடர் நோய்களின் தாக்குதல்கள்

1962-ல் போலியோ. 1967-ல் மலேரியா, 1972-ல் நியோனல் டெட்டானஸ், 1979-ல் டைப்தீரியா, 1989-ல் ரூபெல்லா மற்றும் மெனின்ஜிடிஸ், 1993-ல் மீசல்ஸ், 1995-ல் ரூபெல்லா, 1997-ல் டியூபர்குளோசிஸ் மெனின்ஜிடிஸ் என தொடர் தொற்றுநோய்கள் கியூப மக்களை மிகப் பெரும் ஆபத்துகளுக்கு உள்ளாக்கியது. 1980ம் ஆண்டில் பரவிய டெங்கு வைரஸ் 3,40,000 கியூப மக்களை தாக்கியது.

உயிரி தொழில்நுட்ப துறையினை உருவாக்கிய கியூபா

அடுத்த ஆண்டிலேயே, 1981-ல் உலகுக்கு வழிகாட்டு வகையில் சொந்தமாக உயிரி தொழில்நுட்ப துறையினை (BioTech Industry) கியூபா உருவாக்கியது. உயிர் தொழில்நுட்ப துறைக்கான ஒரு முன்னணியை உருவாக்கி, அதில் நிபுணத்துவம் பெற மருத்துவர்களையும், மாணவர்களையும் பல நாடுகளுக்கு அனுப்பியது கியூபா. பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்திலும் பல்வேறு தடைகளை அமெரிக்கா கியூபாவின் மீது திணித்த போதும், அவற்றையெல்லாம் தாண்டி, கியூபா இதனை சாதித்து காட்டியது.

HIV பரவல்

1980களின் இறுதியிலும், 1990களின் துவக்கத்திலும் அங்கோலா போரிலிருந்து திரும்பிய வீரர்கள் பலருக்கு HIV தாக்குதல் இருந்தது கண்டறியப்பட்டது. HIV-பரவும் விதம் பற்றிய தகவல்கள் அந்த காலசூழலில் பெரிதாக இல்லாத போதிலும் HIV-பரவலை கட்டுப்படுத்த கியூப மருத்துவக் குழு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு கட்டுப்படுத்தியது. 1987-ம் ஆண்டிலேயே HIV தொற்றைக் கண்டறிய சொந்தமான பரிசோதனை முறையை கியூபா உருவாக்கியது. விலை உயர்ந்த ஆண்ட்டிவைரல் மருந்துகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக அளித்தது கியூபா.

1992-96 வரையிலான காலகட்டத்தில் கியூபாவில் 200 பேருக்கு HIV பரவியிருந்தது. ஆனால் அதே அளவு மக்கள் தொகை கொண்ட நியூயார்க்கில் 43,000 பேர் வரை HIV தொற்றினால் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

டெங்கு பரவல் மற்றும் இண்டர்ஃபெரான் ஆல்ஃபா 2B

கொசுக்கள் மூலமாக பரவக் கூடிய டெங்கு காய்ச்சல் தொடர்ச்சியாக பல முறை குறிப்பிட்ட சில ஆண்டுகள் இடைவெளியில் பரவி வந்தது. கியூபாவின் மருத்துவ மாணவர்கள் வகுப்பறைகளை விட்டு, வீடு வீடாக சென்று சோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வீடாக கொசுக்கள் பரவும் தன்மையினை சோதனையிட்டார்கள். 1981-ல் கியூப ஆராய்ச்சி நிறுவனம் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய இண்டர்ஃபெரான் ஆல்ஃபா 2B என்ற மருந்தினை கண்டுபிடித்தார்கள். சீனாவுடன் இணைந்து 2003ம் ஆண்டிலிருந்து இண்டஃபெரான் ஆல்பா2B-னை பெருமளவில் கியூபா உருவாக்கி வருகிறது. இந்த இண்டர்ஃபெரான் ஆல்ஃபா 2B என்ற மருந்துதான் தற்போது COVID-19 எனும் கொரோனா தாக்குதலை குணப்படுத்த சீனாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மருந்துகளில் முக்கியமானதாகும். கொரோனாவினால் உடல்நிலை பாதிப்பு தீவிரமடைந்த பலருக்கு இந்த மருந்து பெருமளவில் பயனளித்ததாக சீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எபோலா பரவல்

2014-ம் ஆண்டு எபோலா பரவ ஆரம்பித்த போது, உலகம் முழுதும் விரைவாக 20,000 பேர் பாதிக்கப்பட்டார்கள். 8000 பேர் இறந்தார்கள். அப்போது கியூபா 103 செவிலியர்கள் மற்றும் 62 மருத்துவர்களை சியாரா லியோன் நாட்டிற்கு அனுப்பியது. ஏற்கனவே 4000 கியூப மருத்துவர்கள் ஆப்ரிக்காவில் இருந்தார்கள். பல நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு எபோலாவை எதிர்கொள்ள கியூபா பயிற்சி அளித்தது. 13,000 ஆப்ரிக்கர்களுக்கும், 66,000 லத்தின் அமெரிக்கர்களுக்கும், 620 கரீபியன்களுக்கும் எபோலா தொற்றுக்கு உள்ளாகாமல் பாதுகாத்துக் கொண்டு நோய்க்கு சிகிச்சை அளிக்க கியூபா பயிற்சி அளித்தது.

உலக நாடுகளுக்கெல்லாம் மருத்துவர்களை அனுப்பிய கியூப வரலாறு

கியூபப் புரட்சி நடைபெற்று வெறும் 15 மாதங்களே ஆன நிலையில் 1960 மார்ச் மாதத்தில் சிலி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கியூபா தனது மருத்துவக் குழுவினை அனுப்பி வைத்தது.

அல்ஜீரிய மக்கள் ஃபிரான்சின் ஆக்கிரமிப்பை எதிர்த்து விடுதலைக்காக போரிட்டுக் கொண்டிருந்த போதும் மருத்துவப் படையினை கியூபா அனுப்பி வைத்தது.

வெனிசுலாவிலும், பிரேசிலிலும் அந்த நாட்டு மருத்துவர்களே கூட செல்ல இயலாத பயணிக்க ஆபத்தான பகுதிகளில் கியூப மருத்துவர்கள் பயணித்தனர். கியூப மருத்துவர்கள் பொலிவியாவிற்கு சென்ற போது, வரைபடத்தில் கூட இல்லாத 101 சமூகப் பகுதிகளுக்கு சென்றனர்.

2010ம் ஆண்டு ஹைத்தியில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அங்கு சென்ற கியூப மருத்துவக் குழுவினர் மாதக் கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் அங்கேயே மக்களோடு மக்களாக தங்கி சிகிச்சை மேற்கொண்டனர். ஆடம்பர விடுதிகளில் தங்கிய அமெரிக்க மருத்துவர்கள் சில வாரங்களிலேயே வீடு திரும்பிய நிலையில் கியூப மருத்துவர்கள் மக்களோடு மக்களாக தங்கியிருந்து அவர்களை மீட்டனர்.

2008-ம் ஆண்டின் கணக்கின்படி, 1,20,000 சுகாதார நிபுணர்களை 154 நாடுகளுக்கு கியூபா அனுப்பி வைத்துள்ளது. உலகின் 70 மில்லியன் மக்களை கியூப மருத்துவர்கள் சிகிச்சை அளித்து பாதுகாத்திருக்கிறார்கள். 2005ம் ஆண்டு கத்ரீனா புயல் அமெரிக்காவை தாக்கிய போது, அமெரிக்க மக்களின் இன்னலைப் போக்க, தன் மீது பொருளாதார தடை விதித்த நாடு என்று கூட பாராமல், அவர்களுக்கு உதவ, 1586 பேரைக் கொண்ட கியூப சுகாதாரக் குழு நியூ ஆர்லியன்ஸ்-க்கு செல்ல தயாராய் இருந்தனர். ஆனால் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தங்கள் மக்களின் உயிரை விட தனது ஈகோவையே பெரிதாக பார்த்து, அக்குழுவினை அனுமதிக்க மறுத்தார்.

மருத்துவம் ஒரு மனித உரிமை

கியூபா மருத்துவத்தினை ஒரு மனித உரிமையாக வைத்திருக்கிறது. சிகிச்சை இலவசமாகவே வழங்கப்படுகிறது. புரட்சிக்குப் பிறகு கியூபா முதலில் அரசுடமையாக்கியது மருந்து நிறுவனங்களைத் தான். மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களை கைகாட்டிவிட்டு, தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதை கியூபா செய்யவில்லை.

மருத்துவ நிறுவனங்களை அரசுடமை ஆக்கியதால்தான் கொரோனா தாக்குதல் பரவ ஆரம்பித்த உடனேயே ஏராளமான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை (PPE- Personal Protective Equipment) தடையின்றி தயாரித்து இத்தாலிக்கு சிகிச்சை அளிக்க சென்ற தனது மருத்துவக் குழுவிற்கு வழங்க முடிந்தது.

இதுநாள் வரை இந்த PPE பற்றாக்குறையினால் தான் இந்தியாவிலும், அமெரிக்காவிலும், மேற்கு நாடுகளிலும் ஏராளமான மருத்துவ நிபுணர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். உலகின் வல்லரசு நாடுகள் உற்பத்தி என்ற பெயரில் எதை எதையோ உற்பத்தி செய்து கொண்டிருந்த போது கியூபா மருத்துவர்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. கியூபாவில் ஒவ்வொரு 1000 பேருக்கும் 8.2 மருத்துவர்கள் இருக்கிறார்கள். இது அமெரிக்காவில் வெறும் 2.6 மட்டுமே.

கொரோனா தொற்றாளர்களை அரவணைத்த கியூபா

மருத்துவத்தை மனிதநேய சேவையாகவும், மக்களுக்கு ஆற்றும் கடமையாகவும் கியூபா பார்த்தது கியூபா., மார்ச் மாதம் பிரிட்டிஷ் க்ரூஸ் கப்பலில் கடலில் சிக்கியிருந்த பயணிகளை பல நாடுகள் தங்கள் பகுதிக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பின. அவர்களில் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது தெரிந்த பிறகும் கியூபா அவர்களை அனுமதித்தது.

53 மருத்துவ நிபுணர்களை அடங்கிய குழுவினை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் வளர்ந்த வல்லரசான இத்தாலிக்கு சிறிய நாடான கியூபா அனுப்பியிருக்கிறது. இதே போல் வெனிசுலா, நிகராகுவா, சுரிநேம், க்ரேனேடா, ஜமைக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவ குழுக்களை கியூபா அனுப்பியுள்ளது. கியூபா தனது மருத்துவத்தையும், மருந்துகளையும் திறந்த மனதுடன் உலகுக்கு அளித்து வருகிறது.

மருத்துவத்தை தொழிலாக பார்க்காமல், மனிதநேய சேவையாகவும், அரசின் கடமையில் ஒரு அங்கமாகவும், புரட்சியின் ஒரு கூறாகவும் பார்த்ததால் தான் இன்று பேரிடர் சூழலிலும் கூட கியூபா என்கிற சிறிய நாட்டின் உலகம் முழுதும் பெருமையுடன் உச்சரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *